தம்மபதம்

1. யமக வர்க்கம்-ஜோடிகள்

எண்ணங்கள் (தர்மங்கள் அல்லது சேதசிகங்கள்) மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது.

எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப் படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டிபோல, அவனுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன.

எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கபடுகின்றன. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும் சரி, செய்தாலும் சரி அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.

'அவன் என்னை இகழ்ந்து பேசினான், அவன் என்னை அடித்தான், என்னை வென்றான், என் பொருள்களைக் கவர்ந்து கொண்டான்' என்பது போன்ற எண்ணங்களை ஒருவன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய பகைமை (வைரம்) ஒருபோதும் தணியாது.

'அவன் என்னை ஏசினான், என்னை அடித்தான், வென்றான், பொருளைக் கவர்ந்து கொண்டான்' என்று எவன் ஒருவன் மனத்தில் கொள்ளாமல் இருக்கிறானோ அவனுடைய வைரம் (பகைமை) சாந்தப்படுகிறது.

ஏனெனில், பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. பகைமையை அன்பினாலேயே தணிக்க முடியும். இதுதான் தொன்றுதொட்டு வருகின்ற தர்மமாகும்.

கலகம் செய்ய விரும்புவோர் 'தாங்கள் என்றைக்காவது இறப்போம்' என்பதை அறிகிறதில்லை. அறிந்தால் அவர்கள் கலகம் செய்வதை நிறுத்தி விடுவார்கள்.

சிற்றின்பத்தை அடைய விரும்பியும், பஞ்சேந்திரியங்களை அடக்காமலும், மிதமிஞ்சிய உணவை உண்டும், சோம்பல் கொண்டும், சுறுசுறுப்பில்லாமலும் இருக்கிறவனை மாரன் (மன்மதன்) பலமற்ற மரத்தைச் சூறாவளிக் காற்று பெயர்த்து வீழ்த்துவது போல, வென்று விடுவான்.

சிற்றின்பம் அசுகி (கெட்டது) என்று கண்டும், பஞ்சேந்திரியத்தை அடக்கியும், மித உணவு கொண்டும், பக்தியும் சுறுசுறுப்பும் அடைந்தும் உள்ள ஒருவனை, கற்பாறை யாலான மலையைச் சூறாவளிக் காற்று அசைக்க முடியாததுபோல, மாரன் அசைக்க முடியாது.

யாரேனும் ஒருவர் மஞ்சள் (சீவர) ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புவாரானால், அவர் மாசுள்ள மனமுடையவராய் தன் அடக்கமும் உண்மையும் இல்லாமலிருப் பாரானால், மஞ்சள் (சீவர) ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆகமாட்டார்.

மனமாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்னடக்கமும் மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பாரானால், திண்ணமாக அவரே மஞ்சள் (சீவர) ஆடையுடுக்கத் தகுதி உடையவர் ஆவார்.

சாரம் அற்றவைகளைச் சாரம் உள்ளவையென்றும், சாரம் உள்ளவைகளைச் சாரம் அற்றவையென்றும் கொண்டிருப்பவர், தவறான காட்சியையுடையவராய் இருப்பதனால், சாரத்தை (மெய்க் காட்சியை) அடைய மாட்டார்.

சாரமுள்ளதைச் சாரம் என்றும், சாரம் அற்றதைச் சாரம் அற்றது என்றும் காண்கிறவர், மெய்க் காட்சியைக் கொண்டிருப்பதனானாலே, சாரத்தை (மெய்யை) அடைகிறார்.

நன்றாக வேயப் பெறாத கூரை வீட்டில் மழை நீர்புகுவது போல, பண்படுத்தப்படாத மனத்தில் காம எண்ணங்கள் (ராகம்) புகுந்துவிடுகின்றன.

நன்றாக வேயப் பட்ட கூரை வீட்டுக்குள் மழை நீர் இறங்காதது போல, பண்படுத்தப்பட்ட மனத்திற்குள் காம எண்ணங்கள் (ராகம்) புக முடியாது.

பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கம் அடைகிறான்; மறுமையிலும் துக்கமடை கிறான்; அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தன்னுடைய தீய செய்கை களைக் கண்டு அவன் விசனமடைந்து அழிந்து போகிறான்.

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான்; மறுமையிலும் மகிழ்ச்சி யடைகிறான்; அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தன்னுடைய நல்ல செய்கைகளைக் கண்டு அவன் மகிழ்ந்து மேன்மேலும் இன்பமடைகிறான்.

பாவஞ் செய்தவன் இம்மையிலும் அழங்குகிறான்; மறுமையிலும் அழங்குகிறான்; அவன் இருமையிலும் அழங்குகிறான். 'நான் பாவம் செய்தேன்' என்று அவன் மனம் புழங்கு கிறான். நரகத்திற் சென்று அவன் மேலும் மேலும் அழுது புலம்புகிறான்.

நன்னெறியில் நடப்பவன் இம்மையிலும் உவகை கொள்கிறான்; மறுமையிலும் உவகை கொள்கிறான்; அவன் இருமையிலும் உவகை பெறுகிறான். 'நான் நல்லதைச் (புண்ணியத்தைச்) செய்தேன்' என்று நினைத்து அவன் இன்புறுகிறான். சுவர்க்கத்திற்குப் போய் நன்மைகளைத் துய்த்துக் கொண்டே இன்பமடைகிறான்.

ஒருவர் திரிபிடக புத்த தர்மங்களை முழுவதும் கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும், அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்கவில்லையானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனையொப்ப, துறவிகள் அடையவேண்டிய பலனை அடையமாட்டார்.

திரிபிடக புத்த தர்மங்களைச் சிறிதளவு ஓதினாலும், அவை கூறுகிறபடி ஒருவர் நடந்து, ஆசை, பகை, மோகம் முதலியவைகளை அகற்றி, நற்காட்சி பெற்று மனமாசு அற்று இருவகைப்பற்றுக்களையும் விட்டிருப்பாரானால், அவரே உண்மையில் துறவிகள் அடையும் தூய பயனை அடைவார்.

2. அப்பிரமாத வர்க்கம்-விழிப்புடைமை

ஊக்கமுடைமை (விழிப்புடைமை) இறவாமைக்கு (நிர்வாண மோக்ஷத்திற்கு) வழியாகும்.

ஊக்கம் இன்மை (மறதி) இறப்புக்கு வழியாகும்.
விழிப்புடையோர் இறக்கிறதில்லை;
மறதியுடையோர் இறந்தவருக்குச் சமானமானவர்.

ஊக்கம் உடைமை ஊக்கம் இல்லாமை என்னும்
இவற்றின் நன்மையையும் தீமையையும் நன்கறிந்த அறிவுடையோர்,
ஆன்றோர் காட்டிய வழியில் சென்று
அங்கே இன்புற்று இருக்கிறார்கள்.

எப்போதும் முயற்சியுடனும் வீரியத்துடனும்
தியானம் செய்து கொண்டிருப்பவர்
நிருத்தர யோக சேமம் என்று சொல்லப்பட்ட
நிர்வாண சேமத்தை அடைகிறார்கள்.

முயற்சியும், விழிப்பும், குற்றமற்ற செய்கையும்,
சாந்தமும், தன்னடக்கமும் உள்ளவர்களாய்
நல்லொழுக்கத்துடனிருக்கும் முயற்சியுடையோரின் புகழ் மேன்மேலும் வளர்கிறது.

அறிவுள்ளவர்கள், தங்கள் முயற்சியினாலும், ஆற்றலினாலும்,
தன்னடக்கத் தினாலும், ஒழுக்கத்தினாலும்
வெள்ளத்தினால் அழிக்கப்படாத அரண் அமைந்த தீவைப் போலத்
தங்களைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

அறிவற்ற மூடர்கள் அசட்டைத் தன்மைக்கு இடங் கொடுக்கிறார்கள்.
அறிவுள்ள வர்கள் விழிப்புத்தன்மையை,
விலையுயர்ந்த செல்வத்தைப் போலப் போற்றுகிறார்கள்.

அசட்டைத் தன்மைக்கு இடம் கொடுக்காதீர்கள்;
காம சுகங்களில் மூழ்காதீர்கள்.
தியானத்தில் மனத்தைச் செலுத்தி
விழிப்புடன் இருப்பவர் பேரின்பத்தை அடையப் பெறுகிறார் .

அறிவாளியாகிய ஒருவர் அசட்டைத் தன்மையை நீக்கி
முயற்சியுடன் இருப் பாரானால்,
அவர் ஞானமாளிகையின் உயரிய இடத்தை அடைந்திருப் பதனாலே,
மலையின் உச்சியில் இருக்கும் ஒருவர்
அடிவாரத்தில் உள்ளவர்களைக் காண்பது போல,
துக்கமும் அறியாமையும் உள்ள மக்களைக் காண்கிறார்.

சோம்பேரிகளிடையில் ஊக்கமுள்ளவராயும்,
தூங்குகிறவர்களிடையில் விழிப்புள்ள வராயும்
இருக்கிற அறிஞர் ஒருவர்,
வல்லமையுள்ள குதிரை வலிமையற்ற குதிரை களைக் கடந்து
முன்னால் வெகு தூரம் ஓடுவது போல,
எல்லோருக்கும் முன்னால் செல்கிறார்.

முயற்சியினால்தான் மகவான் (இந்திரன்) தேவர்களுக்குத் தலைவனானான்;
முயற்சி போற்றிப் புகழப்படுகிறது; முயற்சியின்மை இகழப்படுகிறது.

சோம்பற்றன்மையை அஞ்சி முயற்சியை மேற்கொண்டுள்ள ஒருவர்,
பெரியனவும் சிறியனவுமான மனத் தளைகளை (விலங்குகளை),
நெருப்பைப் போல எரித்து விடுகிறார்

முயற்சியுடனும் விழிப்புடனும் இருந்து சோம்பற் றன்மையை அஞ்சுகிற ஒரு பிக்கு,
வீழ்ச்சிக்கு உரியவர் அல்லர்; அவர் நிர்வாண மோக்ஷத்தின் அருகில் உள்ளவராவார்.

3. சித்த வர்க்கம்-மனம்

அடக்கியாள்வதற்கும் காப்பதற்கும் அருமையானதும், சலித்துக்கொண்டே இருக்கிறதும் உறுதியற்றதுமான மனத்தை அறிவாளிகள், வளைந்த அம்புகளை வேடன் நீட்டி வைப்பது போலச் செம்மைப் படுத்துகிறார்கள்.

நீரில் வாழ்கிற மீனைப் பிடித்துத் தரைமேல் போட்டால் அது எப்படித் துடிக்கிறதோ அதுபோல, மனமானது (தீயவனாகிய) மாரனுடைய உலகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளத் துடிக்கிறது.

அடக்கியாள்வதற்கு அருமையானதும், தன் போக்குப்படியே சஞ்சரிக்கிறதுமான மனத்தை அடக்குவது நல்லது; அடக்கியாளப்படுகிற மனமானது சந்தோஷத்தைத் தருகிறது.

அடக்கியாளக் கடினமானதும் நிலைத்து நிற்காமல் எப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறதுமான மனத்தை, அறிவாளிகள் காவல் பிரிவாராக; காக்கப்பட்ட மனம் சந்தோஷத்தைத் தருகிறது.

வெகுதூரம் சஞ்சரிக்கிறதும், தன்னந் தனியே அலைகிறதும், உடம்பு இல்லாமலே (இருதயமாகிய) குகையில் இருப்பதுமாகிய மனத்தை அடக்கியாள்கிவர், மாரனுடைய தளையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.

உறுதியற்ற மனத்தையுடையவரும், உண்மையான தர்மத்தை அறியாதவரும், நிலைபெற்ற கொள்கை இல்லாதவருமான எவரும் முழு ஞானத்தை அடைய மாட்டார்.

காமங்களினால் பற்றப்படாமலும் பகைமையில்லாமலும் உள்ள மனத்தோடு, நன்மை தீமைகளை விட்ட விழிப்புள்ள ஒருவருக்கு அச்சம் என்பதே இல்லை.

இந்த உடம்பு மட்குடம் போன்றது (அழியுந் தன்மையது) என்பதையறிந்து, அரண் செய்யப்பட்ட நகரம் போல உறுதியோடு கூடிய மனத்துடனிருந்து, அறிவாகிய ஆயுதங்களால் ஒருவர் மாரனை எதிர்ப்பாராக. பற்றற்ற மனத்துடன் வெற்றியை நிலை நிறுத்துவாராக.

வெகு விரைவிலே, அந்தோ! இந்த உடம்பு உணர்ச்சியற்று தரையில் விழுந்து மரக்கட்டை போன்று ஒதுக்கித் தள்ளப்படும்.

வைரங்கொண்டவன் தன்னால் வெறுக்கப்பட்டவனுக்குத் தீமை செய்வதைவிட அதிகமாக, அல்லது பகைவனுக்குப் பகைவன் தீமை செய்வதை விட அதிகமாக, அடக்கியாளப்படாத மனமானது பெருந்தீங்கைச் செய்கிறது.

கட்டுப்படுத்தி நல்வழியில் நிறுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும், வேறு சுற்றத்தாரும் செய்யாத நன்மைகளை விட அதிகமான நன்மைகளைச் செய்கிறது.

4. புஷ்ப வர்க்கம்-பூக்கள்

இமயலோகமும் தேவலோகமும் ஆகிய இந்த உலகத்தை வெற்றி கொள்கிறவர் யார்? அறிவுள்ள பூக்காரன் ஒருவன், (மாலைதொடுக்க) நல்ல பூக்களைக் கொய்வது போல, நல்ல தர்ம உபதேசங்களைக் கொய்து எடுப்பவர் யார்?

இமயலோகமும் தேவலோகமும் ஆகிய இந்த உலகத்தைச் சேகர் வெற்றி கொள்வார்கள்; அவர்கள்தாம், நல்ல பூக்காரன் நல்ல பூக்களைக் கொய்வது போல, நல்ல தர்மோசங்களைக் கொய்தெடுப்பார்கள்.

(சேகர்: ஒன்று முதல் ஏழாவது படியாகிய சோதாபத்தி மார்க்கத்திலிருந்து அர்ஹந்த மார்க்கத்தை அடைந்தவர்)

இவ்வுடம்பு நீறிற் குமிழி போன்றது என்பதையறிந்து, இது கானல் நீர் போன்ற இயல்புடையது என்பதையுணர்ந்து, மாரனுடைய புஷ்ப பாணங்களை அழித்து இயமனுடைய பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் (ஐம்புல இன்பமாகிய) பூக்களைப் பறித்துக் கொண்டும், அவைகளில் அவர் மனது பற்றுக் கொண்டும் இருக்கும் போது, பெருவெள்ளம் கிராமத்தை அடித்துக் கொண்டு போவது போல, அவரை மரணம் அடித்துக் கொண்டு போகிறது.

ஒருவர் (ஐம்புல இன்பங்களாகிய) பூக்களைப் பறித்துக் கொண்டும், அவைகளில் அவர் மனது பற்றுக் கொண்டும் இருக்கும்போது, அவைகளால் திருப்தி அடைவதற்கு முன்பே, அவர் மரணத்தினால் வெல்லப்படுகிறார்.

தேனீக்கள், பூவின் அழகையும் மணத்தையும் கெடுக்காமலே பூவிலுள்ள தேனை மட்டும் கொண்டு போவது போல, துறவிகள் கிராமங்களில் (உணவுக்காகப்) போவாராக.

மற்றவருடைய குற்றங்களையும் அவர்கள் செய்ததும் செய்துகொண்டிருப் பதுமான காரியங்களையும் ஒருவர் காணாமலிருப்பாராக; அவர் தான் செய்த காரியங் களையும் செய்துகொண்டிருக்கும் காரியங்களையும் காண்பாராக.

ஒருவர் தாம் உபதேசிப்பது போலச் செய்கையிலும் நடக்காமலிருப்பாரானால், அவருடைய உபதேசங்கள், மணம் இல்லாத பூவைப்போலப் பயனற்றவையாகும்.

ஒருவர் தாம் உபதேசிப்பது போலவே செய்கையிலும் நடப்பாரானால், அவருடைய போதனைகள் மிக்க அழகுள்ள பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவையாகும்

பூக்களைக்கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, செத்துப் போகும் தன்மையுள்ள மனத்தைக் கொண்டு பல நன்மைகளைச் செய்ய கூடும்.

பூக்களின் மணமும், சந்தனம் தகரம் (வாசனை மர வகை) மல்லிகை முதலியவை களின் மணமும் காற்றுக்கு எதிர்ப்புறமாக வீசுவதில்லை. ஆனால் அறிஞர்களின் (புகழாகிய) மணம் காற்றுக்கு எதிர்ப்புறமாகவும் வீசுகிறது அறிவாளி எல்லாத் திசைகளிலும் புகழப்படுகிறான்.

சந்தனம், தகரம், தாமரை, மல்லிகை முதலிய எல்லா மணங்களையும் விட, அறிஞருடைய நறுமணம் சிறந்தது.

தகரம், சந்தனம், இவைகளினுடைய நறுமணம் அற்பமானது. அறிஞருடைய மேன்மையுள்ள நறுமணம் தேவர்களிடத்திலும் சென்று விடுகிறது.

அறிஞராகவும், விழிப்புள்ள வாழ்க்கையுடையவராகவும், முழுஞானத்தினால் உயர்வு பெற்றவராகவும் உள்ளவர்களை (அவர்கள் இருக்கும் இடத்தை) மாரன் அறிய மாட்டான்

வழியில் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து நறுமணம் உள்ள அழகான தாமரைப்பூ மலர்கிறது அதுபோல, முழுஞானம் பெற்றவர்களின் சீடர்கள், குப்பை கூளங்களைப் போல அறியாமை நிறைந்துள்ள மக்களுக்குள்ளே, அறிவு ஒளிவீசி விளங்குகிறார்கள்.

5. பால வர்க்கம்-மூடர்கள்

விழித்திருப்போருக்கு இரவு நீண்டிருக்கிறது. களிப்படைந்திருப்போருக்கு வழி பெருந் தூரமாய் இருக்கிறது. ‘சத்’ தர்மத்தையறியாத மூடர்களுக்கு, பிறப்பு இறப்பாகிய சம்சார வட்டம் பெரியதாக இருக்கிறது

தன்னைவிட மேலான, அல்லது தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை அடைய முடியா விட்டால் அறிஞர்கள் தன்னந்தனியே உறுதியாக இருக்கட்டும். ஏனென்றால், மூடர்களோடு நேசம் கூடாது.

"எனக்கு மக்கள் உள்ளனர், செல்வம் இருக்கிறது" என்று மூடர்கள் கவலைப்படு கிறார்கள். அவர்கள் தமக்குத் தாமே சொந்தமில்லாத போது, மக்களைப் பற்றியும், செல்வத்தைப்பற்றியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

ஒருவர் தம் குற்றத்தை அறிவாரானால்,, அதனாலேயே அவர் அறிவாளி யாகிறார். தான் அறிவாளி என்று நினைக்கிற ஒரு மூடன், உண்மையிலேயே மூடனாக இருக்கிறான்.

மூடர், அறிஞருடன் தம் வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை, குழம்பின் சுவையை அறியாதது போல, அவர் தர்மத்தை அறியாமலிருக்கிறார்.

அறிவுள்ளவர் ஞானிகளுடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவது போல, அவர்கள் உடனே தர்மபோதனையை அறிந்து கொள்கிறார்கள்.

அறிவற்ற மூடர், தாமே தமக்குப் பகைவர்களாய்ப், பாபச்செயல்களைச் செய்து கொண்டு அலைகிறார்கள் அப்பாவச் செயல்களின் பலன் மிகவும் துன்பமாக இருக்கிறது.

தீய காரியங்களைச் செய்வதவர், தாம் செய்த கர்மங்களுக்காக ஏங்குகிறார்கள். அதன் பயனைக் கண்ணீர் ததும்பும் முகத்துடன் அழுதுகொண்டே அனுபவிக்கிறார்கள்.

நல்ல காரியங்களைச் செய்தவர், தாம் செய்த நல்ல காரியத்திற்காக ஏங்கித் தவிப்ப தில்லை அதன் பயனை இன்பமாகவும் உவகையுடனும் அனுபவிக் கிறார்கள்.

மூடன், தான் செய்த பாவச் செயல்கள் பலன் தராத வரையில், அச்செயல் களைத் தேன் போன்று இனியதாகக் கருதுகிறான். பாவச் செயல்கள் பழுத்துப் பலன் தருகிற போது அந்த மூடன் துன்பம் அடைகிறான்.

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் மூடர்கள் தர்ப்பைப் புல்லின் நுனியளவு ஆகாரத்தை மட்டும் சாப்பிடுகிறார்கள். * ஆனால், அவர்கள் சங்கத் தர்மத்தை அறிந்தவர்களுக்கு வீசம் பங்கு போலும் சமானமாக மாட்டார்கள்.

* (இது உண்ணா நோன்பிருந்து கடுந் தபசு செய்பவர்களைப் பற்றிக் கூறுகிறது)

பாலானது விரைவாகத் தயிர் ஆகாதது போல, பாபச் செயல்கள் விரைவில் பலன் தருவதில்லை. நெருப்பில் நீறு பூத்தது போல மூடர்கள் அதை உணராமல் அதையே செய்கிறார்கள்.

இப்படியாக மூடர்களுடைய அறிவு, அவருடைய சொந்த அழிவுக்குக் காரணமாக இருந்து அவர் தலையைப் பிளந்து அவருடைய நன்மையை அழிக்கிறது.

மூடனாக உள்ள பிக்கு, தனக்குத் தகுதியில்லாத புகழையும், பிக்குகளின் தலைமைப் பதவியையும் விகாரைகளின் அதிகாரத்தையும், இல்லறத்தாரின் மரியாதையையும் அடைய விரும்புகிறார்.

'இதை நான் செய்தேன் என்று இல்லறத்தாரும் துறவறத்தாரும் கருத வேண்டும்; சிறிதும் பெரிதுமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் என்னை முன்னிறுத்திச் செய்ய வேண்டும்' என்று மூடர் நினைக்கிறார். அவருடைய ஆசையும். 'தான்' என்ற உணர்ச்சியும் அவரிடம் வளர்கிறது.

உண்மையில், உலக மோகங்களில் செலுத்தும் வழிவேறு; நிர்வாண மோக்ஷத்திற்குச் செலுத்தும் நெறி இன்னொன்று ஆகவே, புத்தருடைய சீடர்களான பிக்குகள் இதை அறிந்து, உலகப் புகழை நாடாமல், தனிமையை விரும்பி வளர்க்க வேண்டும்.

6. பண்டித வர்க்கம்-அறிஞர்

குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், அவரை, செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக் கருதி, அவரோடு நட்புக் கொண்டு பழக வேண்டும் அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமே யன்றித் தீமை பயக்காது.

பிறர் தீமை செய்வதைக் கண்டித்துத் தடுத்து அறிவு புகட்டுகிறவர்கள், நல்லோருக்கு அருமை யானவர்கள். ஆனால், தீயவர்களுக்கு வெறுப்பானவர்கள்.

தீயவர்களோடு நேசம் செய்யாதே. அற்பர்களோடு இணங்காதே. நேர்மையான நல்லோருடன் நட்புக் கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.

உண்மையான உவப்புடன் நேசிக்கிறவர்கள், நிம்மதியான மனத்துடன் இன்பமாக இருக்கிறார் கள். அறிஞர்களான பண்டிதர்களின் உபதேசத்தில் அறிவாளிகள் உவகையடைகிறார்கள்.

பாசனக்காரர்கள் நீரைச் செலுத்திப் பாய்ச்சுகிறார்கள். அம்பு விற்போர், அம்புகளைக் கோணல் இல்லாமல் செவ்விதாகச் செய்கிறார்கள் தச்சர் மரங்களை வளைக்கிறார்கள். அறிஞர் தம்மைத் தாமே அடக்கி ஆள்கிறார்கள்.

கற்பாறை, சூறாவளிக் காற்றுக்கும் அசையாதிருப்பது போல, அறிஞர் புகழ்ச்சிக்கும் இகழ்ச் சிக்கும் அசைய மாட்டார்கள்.

ஆழமான குளத்தில் இருக்கிற மாசற்ற தெளிந்த நீரைப் போன்று, தர்ம உபதேசங்களைக் கேட்ப தினாலே அறிஞர் மிகவும் தூய்மை அடைகிறார்கள்.

அறிஞர்கள், எப்பொருளிலும் பற்று வைப்பதில்லை. இன்பத்தினாலும் துன்பத்தினாலும் பற்றப் படாத படியினாலே, பண்டிதர்கள் பெருமையடைவதுமில்லை தாழ்மையடைவதுமில்லை.

தனக்காகவும் பிறருக்காகவும் மக்கட் பேற்றையும் அரசாட்சியையும் விரும்பக்கூடாது. முறை தவறிய வழியில் தனது சொந்த நன்மையை நாடக்கூடாது அப்படிப்பட்ட சீலவான் அறிவாளி யாகவும் நீதி மானாகவும் இருக்கிறார்.

மக்களில் மிகச்சில பேர் மட்டும், பிறவிப் பெருங்கடலைக் கடந்து அக்கரையைச் சேர்கிறார்கள்.

மக்களில் பெரும்பான்மையோர் இக்கரைக்கே திரும்பி வந்து விடுகிறார்கள்.

‘சத்’ தர்ம உபதேசத்தின்படி நடக்கிறவர்கள், கடத்தற்கு அரிய யமலோகத்தைக் கடந்து அக்கரையைச் சேர்கிறார்கள்.

அறிஞரானவர் தீயதை நீக்கி நல்லதைக் கைக்கொண்டு அதன்படி நடக்கவேண்டும். இல்லறத்தை விட்டு, துய்ப்பதற்கு அருமையான ஏகாந்த இன்பத்துக்காக, தனிமையாயிருக்கிற துறவறத் திற்குச் செல்ல வேண்டும்.

அறிஞர் இன்பசுகங்களை விட்டொழித்து, எல்லாவற்றையும் துறந்து, மனமாசுகளையெல்லாம் சுத்தம் செய்து, தூய்மையுடன் உவகையோடு இருக்க வேண்டும்.

ஸம்போதியங்கத்தில் மனத்தை நிறுத்திய அறிஞர்கள், எதிலும் பற்றற்றவர்களாய், பற்றுக் களை விடுவதில் ஆசையுள்ளவர்களாய், மாசு இல்லாமல் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திலேயே நிர்வாண மோச்சத்தை அடைந்தவர் ஆவர்.

7. ஞான வர்க்கம்-ஞானிகள்

தம்முடைய (பிறப்பு இறப்பாகிய) பிரயாணத்தை முடித்துக்கொண்டு, எல்லாத் துக்கங்களி னின்றும் விலகிக் கொண்டு, எல்லாவிதப் பற்றுக்களையும் விட்டு விட்டு, எல்லா வழியிலும் தம்மை உயர்த்திக் கொண்டவருக்குக் கவலை என்பது இல்லை.

விழிப்புள்ளவர்களாய் தம்மைத்தாமே திருத்திக் கொண்டு இல்வாழ்க்கையில் பற்று இல்லாத வர்கள், நீர் நிலையை விட்டுப் பறந்து போகிற அன்னப் பறவையைப் போல, இல்லற வாழ்க்கையை விட்டுப் போகிறார்கள்.

பொருளாசையை விட்டு, உணவைக் கட்டுப்படுத்தி, குறியற்ற சூனியமான நிர்வாண மோக்ஷம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு இருப்பவருடைய அடிச்சுவடுகள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகள் காணப்படாதது போல, காணப்படா.

யார் *ஆஸவங்களை அழித்து விட்டாரோ, யார் உணவில் ஆசையற்றுக் குறியற்ற சூனியமான நிர்வாண மோக்ஷத்தில் நோக்கமாக இருக்கிறாரோ அவர் சென்ற பாதையின் அடிச்சுவடுகள், ஆகாயத்தில் பறந்து சென்ற பறவைகளின் பாதை அறியப்படாதது போன்று, அறியப்படா.

*ஆஸவங்கள்-நால்வகைக் குற்றங்கள் 1. காமம் அல்லது சிற்றின்ப ஆசை 2. பவம் (பிறப்பு) 3. திட்டி (பொய்க்காட்சி) 4. அவிச்சை (அறியாமை)

குதிரைப் பாகனால் குதிரைகள் அடக்கப் படுவது போன்று, தமது ஐம்புலன்களையும் அடக்கிச் சாந்தப்படுத்திய, குற்றங்களை நீக்கிய பெரியோரைத் தேவர்களும் உயர்வாக மதிக்கிறார்கள்.

நிலத்தைப் போன்று பொறுமையும், வாயில் நிலை போன்று உறுதியும், சேறு அற்ற ஆழமான குளத்தின் நீர் போன்று தூய்மையும் உள்ளவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை.

நற்காட்சியுடையவருடைய மனமும் வாக்கும் காயமும் அமைதியடைந்திருக்கின்றன. அவர் முற்றிலும் விடுதலையடைந்து முழுச்சாந்தியடைந்திருக்கிறார்.

நற்காட்சியடைந்து, பிறப்பு இறப்பு என்னும் தளைகளை அறுத்து, பிறவா நிலையடைந்து, எல்லா ஆசைகளையும் அறுத்தவர் யாரோ அவர்தான் உண்மையான உத்தம புருஷன் ஆவர்.

நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும், மேட்டு நிலமாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் அரஹந்தர் எங்கே இருக்கிறாரோ அந்த இடம் இன்பகரமானது.

உலகவாழ்க்கையில் பற்றுள்ளவர்களுக்குக் காடானது இனிமை தருவதில்லை ஆனால், ஆசைகளை அறுத்த பெரியோர் காடுகளில் இனிமை காண்கிறார்கள் ஏனென்றால், அவர்கள் இன்ப சுகங்களில் கருத்தைச் செலுத்துவதில்லை.

8. ஆயிர வர்க்கம்-ஆயிரம்

பொருளற்ற ஆயிரம் வார்த்தைகளைவிட, மன அமைதியைத் தருகின்ற பொருள் நிறைந்த ஒரு வார்த்தை மேலானது.

மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளானது பயனற்ற ஆயிரம் செய்யுளைவிட மேலானது.

பயனற்ற ஆயிரம் செய்யுட்களைப் படிப்பதைவிட, மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.

பதினாயிரக்கணக்கான வீரர்களைப் போர்க் களத்திலே வென்றவர், தன்னைத்தானே அடக்கி வென்றவர் ஆகிய இரண்டு வீரர்களில், பின்னவரே பெரிய வீரர் ஆவார்

மற்றவர்களை வென்று அடக்குவதைவிடத் தன்னைத்தானே வென்று அடக்குவது மேலானது. தம்மைத் தாமே வென்று அடக்கமாக இருப்பவரைத் தேவர்களும், கந்தர்வரும், மாரனும், பிரமனும் கூட வெல்லமுடியாது.

மாதந்தோறும் ஆயிரக்கணக்கான யாகங்களை நூறாண்டுகள் வரையில் செய்தாலும், தம்மைத் தாமே வென்று அடக்கிய பெரியோரை ஒரு நிமிஷம் வழிபடுவதனால் உண்டாகும் பலன், அந்நூறாண்டுகளாகச் செய்த யாக பலனை விட மேலானது.

ஒருவர் காட்டுக்குச் சென்று நூறாண்டுகளாக எக்கியத் தீயை வளர்த்து வந்தாலும் அவர், தன்னைத் தானே வென்று அடக்கிய பெரியார் ஒருவரை ஒரு நிமிஷம் வணங்குவாரானால், அதன் பலன் நூறாண்டு செய்த எக்கிய பலனை விட மேலானது.

இவ்வுலகில் புகழும் புண்ணியமும் பெறுதற் பொருட்டு ஒருவர் ஒரு ஆண்டு வரையில் செய்யும் யாக எக்கிய பலனானது, ஞானி ஒருவரை வழிபடுவதனால் உண்டாகும் நன்மையில் கால் பாகத்துக்கும் ஈடாகாது.

ஞானத்தினாலும் வயதினாலும் மூத்த பெரியோர்களை எப்போதும் வணங்குகிறவர்களுக்கு ஆயுள், அழகு, இன்பம், ஆற்றல் ஆகிய நான்கும் உண்டாகின்றன.

ஒழுக்கங்களுடன் தியானத்தைச் செய்கின்ற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கையானது, ஒழுக்கங்கெட்ட, மனத்தை அடக்காத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

மன அடக்கம் இல்லாத அஞ்ஞானமுடைய ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட, ஞானமும் தியானமும் உள்ள ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை, மேன்மை யுடையது.

முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட, ஆற்றலோடும் ஊக்கத்தோடும் முயற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை யுடையது.

உலக இயற்கையில் நடைபெறுகிற ஆக்கம் அழிவுகளைக் காண்கிற ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவைகளைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

பிறவா நிலையை (மோக்ஷத்தை)க் காண்கிற ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவைகளைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவ்வுத்தம தர்மத்தைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

9. பாப வர்க்கம்-பாவங்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருவர் விரைந்து முற்பட வேண்டும். தீய எண்ணங்களைத் தடுக்க வேண்டும்.ஏனென்றால், புண்ணிய காரியங்களைச் செய்யத் தாமதப்பட்டால், மனம் தீய எண்ணங்களில் ஆசை கொள்கிறது.

பாவ காரியத்தைச் செய்ய நேர்ந்துவிட்டதானாலும் மீண்டும் மீண்டும் அப்பாவ காரியத்தையே செய்யாமல் இருப்பாராக; செய்ய விரும்பாமல் ஒழிவாராக ஏனென்றால், பாவம் அதிகப்படு வதால் துக்கம் ஏற்படுகிறது.

புண்ணிய காரியத்தைச் ஒருவர் செய்வாரானால் மீண்டும் மீண்டும் அப்புண்ணியச் செயலைச் செய்வாராக ஏனென்றால், புண்ணியங்கள் அதிகப்படுவதால் இன்பம் உண்டாகிறது.

பாவங்களைச் செய்கிறவர், தாம் செய்த பாவம் முதிர்ச்சியடையாதவரையில் சந்தோஷத்தை அனுபவிக்கிறார். ஆனால், பாவங்கள் முதிர்ந்து பயனைத் தரும் போது துன்பங்களை அனுப விக்கிறார்.

புண்ணியங்களைச் செய்கிறவர், தாம் செய்யும் புண்ணிய காரியங்கள் முதிர்ச்சியடையாத வரையில் துன்பங்களை அனுபவிக்கிறார் ஆனால், புண்ணியங்கள் முதிர்ந்து பலன் தரும் போது இன்பங்களைக் காண்கிறார்.

"அது என்னை அணுகாது" என்று தீய காரியத்தைப் பற்றி எளிதாக நினைக்க வேண்டாம். நீர், துளித்துளியாகச் சொட்டினாலும் முடிவில் குடம் நிறைந்து விடுகிறது. ஆகவே, மூடர்கள் சிறிது சிறிதாகத் தீமைகளைத் தேடிக் கொள்கிறார்கள்.

"அது என்னிடம் வராது" என்று புண்ணிய காரியத்தைப் பற்றி அற்பமாக நினைக்க வேண்டாம். நீர், துளித்துளியாகச் சொட்டினாலும் குடம் நிறைந்து விடுகிறது. ஆகையால், அறிவாளி சிறிது சிறிதாகப் புண்ணியத்தைத் தேடி நிரப்பிக் கொள்கிறார்.

சொற்ப சாத்துடன் பெரும் பொருளைக் கொண்டு செல்லுகிற வாணிகள், அச்சமுள்ள வழியை விட்டு விலகி நல்லவழியிலே செல்லுவது போலவும், உயிர் வாழ விரும்புவோர் நஞ்சை உண்ணாமல் விலக்குவது போலவும், பாபச் செயலைவிட்டு விலகுங்கள்.

கையில் புண் இல்லையானால் அதில் நஞ்சினை எடுக்கலாம் புண் இல்லாத கையை நஞ்சு தாக்காது தீய காரியத்தைச் செய்யாதவரை பாபம் ஒன்றும் செய்யாது.

தீங்கில்லாத, குற்றமற்ற, தூய நல்லவரைத் துன்புறுத்துகிற மூடன் மேல், காற்றுக்கு எதிராகத் தூற்றப்பட்ட தூசியைப் போன்று, பாபம் விழுந்து படிகிறது.

சிலர் கருவில் தங்கிப் பிறக்கிறார்கள். பாபிகள் நரகத்தில் பிறக்கிறார்கள். நல்லவர் சுவர்க்கம் செல்லுகிறார்கள். பற்றற்றோர் நிர்வாண மோக்ஷம் அடைகிறார்கள்.

பாபம் செய்தவர் அவ்வினைப் பயனிலிருந்து தப்பித்துக்கொள்ள, இவ்வுலகத்திலும் விண் ணிலும் இடம் இல்லை; கடலின் நடுவிலும் இடம் இல்லை; மலைக் குகைகளிலும் இடம் இல்லை.

சாவை வராமல் தடுக்க இவ்வுலகத்திலாயினும், ஆகாயத்திலாயினும், கடலின் நடுவி லாயினும், மலைக் குகைகளிலாயினும் ஒளிய இடம் இல்லை.

10. தண்ட வர்க்கம்-தண்டணை

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோரும் மரணத்தை அஞ்சுகிறார்கள். மற்ற உயிர்களையும் தம்முயிர் போலவே கருதி, கொல்லாமலும் கொலைக்கு உடன் படாமலும் இருப்பாராக.

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை இனிமையானது.

மற்ற உயிர்களையும் உன் உயிரோடு ஒப்பிட்டு நோக்கி ஒன்றையும் கொல்லாதே; கொல்விக்கவும் உடன்படாதே.

இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்.

சுகமாயிருக்க விரும்புகிற ஏனைய உயிர்களை ஒருவர், தம்முடைய சொந்த சுகத்தின் பொருட்டு, தண்டித்துத் துன்புறுத்தாது இருப்பாரானால், அவர் இறந்த பிறகும் சந்தோஷத்தை அடைகிறார்.

யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர்; சுடு சொற்கள், உண்மையாகவே, துன்பந் தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும்.

உடையுண்ட வெண்கலமணி ஓசையற்றிப்பது போல, நீ உன்னை அடக்கிக்கொண்டால், நிர்வாண மோக்ஷத்தை அடைந்தவன் ஆவாய். ஏனென்றால் வினைசெய்யும் தன்மை உன்னிடம் இல்லை.

இடையன் கோல்கொண்டு ஆனிரைகளைப் புற்றரைக்கு ஓட்டுவது போல, நரை திரையும் சாக்காடும் மனித ஆயுளை ஓட்டுகின்றன.

ஆயினும் மூடன், தான் செய்யும் காரியத்தின் தன்மையை உணராமலே, தீயகாரியங்களைச் செய்கிறான். தன்னைத்தானே எரித்துக் கொள்வது போல, அவன் தன் செய்கையாலேயே துக்கத்தினால் எரிக்கப் படுகிறான்.

தீமையற்றவரும் சாத்வீகமாக உள்ளவரும் ஆகிய நல்லவரைத் தண்டித்துத் துன்புறுத்து கிறவர்கள், இந்தப் பத்து நிலைகளை அடைவார்கள்:-

அவர்கள் மிக்க வேதனையையாவது, நஷ்டத்தை யாவது, தேகத்துன்பத்தையாவது, துன்பத்தைத் தரும் நோயையாவது, மனமாறாட்டத்தையாவது; அரச தண்டனையையாவது, சுடுவது போன்ற நிந்தனையையாவது, சுற்றத்தாரை இழந்து விடுவதையாவது, பொருள் அழிவையாவது; தீப்பிடித்து வீடு எரிந்து போவதையாவது அடையப் பெறுவார்கள். மேலும் இறந்த பின்னர் அவர்கள் நரகத்தில் சென்று பிறப்பார்கள்.

அம்மனமாகத் திரிந்தாலும், சடைத்தலையாக இருந்தாலும், அழுக்குடம்புடன் இருந்தாலும், பட்டினி நோன்பு நோற்றாலும், வெற்றுத்தரையில் படுத்தாலும், அழுக்கிலும் தூசியாலும் புரண்டாலும், காலில் நின்று தவம் செய்தாலும், இவர்கள் தமது ஐயங்களை நீக்கிகொள்ளாத வராயிருந்தால், இவை யாவும் அவரைத் தூய்மைப்படுத்த மாட்டா.

நல்லுடை உடித்தியவராக இருந்தாலும் (உடம்பை வருத்தி தவம் செய்யாமல் இருந்தாலும்)

அவர், சாந்தமும், அமைதியும், அடக்கமும், தூய்மையும் உடையவராய், உயிர்களைத் துன்புறுத்தாமல் இருப்பாரானால், அவரே பிராமணர் ஆவார்; (தீமைகளை விலக்கினவர்) அவரே சமணர் ஆவார்; (தீமைகளை வரவொட்டாமல் தடுத்தவர்) அவரே பிக்கு ஆவார்; (தீமைகளை நீக்கியும், தண்டித்தும், ஒழித்தும் விட்டவர் பிக்கு)

நன்கு வளர்க்கப்பட்ட குதிரையானது தன்மீது குறடா அடிவிழாதபடி நடந்து கொள்வது போல, பழி பாவங்களுக்கு அஞ்சி நிந்தனைக்கு நாணி நல்வழியில் ஒழுகுவோர் மிகச் சிலர்.

குறடாவினால் அடியுண்ட நல்ல குதிரையப் போன்று, உற்சாகமாகவும் குற்றத்தைத் திருத்திக் கொள்பவனாகவும் இரு. மன உறுதியினாலும், தர்மத்தை ஆராய்வதினாலும், ஞானம் ஒழுக்கங்களை உடைமையினாலும் விழிப்புடன் இருப்பதினாலும் அளவற்ற துக்கங்களைப் போக்குவாயாக.

நீர்ப் பாசனக்காரர் நீரைச் செலுத்துகிறார்கள்; அம்புகளைச்செய்வோர் அம்புகளை அமைக் கிறார்கள்; தச்சர் மரங்களை வளைக்கிறார்கள். நல்லவர்கள் தம்மைத் தாமே அடக்குகிறார்கள்.

11. ஜரா வர்க்கம்-மூப்பு

உலகம் பற்றி எரிகிறபோது களிப்பும் சிரிப்பும் என்ன இருக்கிறது? இருளினால் சூழப்பட் டிருக்கிற நீ ஏன் வெளிச்சத்தை நாடக்கூடாது?

அலங்கரிக்கப்பட்ட இந்த உடம்பைப் பார்; நிலைத்து நிற்காததும், நோய்க்கு இடமாக உள்ளதும், (எலும்புகளால்) குவிக்கப்பட்டதும், புண்ணுள்ளதுமான, வெகுவாக ( நல்லதென்றும் இனிய தென்றும்) கருதுகிற இந்த உடம்பைப் பார்.

இந்தத் தேகம் தேயும் தன்மையுள்ளது; நோய்க்கிடமானது; அழிவையுடையது; அசுத்தமான இந்த உடல் அழிந்துவிடுகிறது. மனித வாழ்க்கை சாவினால் முடிவடைகிறது.

புறா நிறமுள்ள எலும்புகள் வேனிற்காலத்தில் புறத்தே எறியப்படுகிற சுரைக் காயைப் போன்றன. இவற்றைக் காணும்போது உனக்கு என்ன சந்தோஷம் இருக்கிறது?

இந்த நகரம் எலும்பினால் கட்டப்பட்டு தசையினாலும் இரத்தத்தினாலும் பூசப்பெற்றுள்ளது.

இதில், நரைதிரையும், சாக்காடும், அகங்காரமும், கபடமும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அரசனுடைய அலங்காரம் செய்யப்பட்ட தேரும் அழிந்து விடுகிறது. அது போல உடம்பும் நரை திரை மூப்புக்களை யுடையது. ஆனால் நல்ல தர்மம் ஒரு போதும் அழிகிறதில்லை. நல்லவர், நல்லவர்களுக்கு இதனைப் போதிக்கிறார்கள்.

கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; ஆனால், அவன் அறிவு வளரவில்லை.

இந்த வீட்டை (உடம்பை)க் கட்டுகிற கொல்லனைத் தேடித் தேடி வீணாக அனேக பிறப்புக்களில் அலைந்தேன். சம்சாரம் (பிறப்பு இறப்பு) எப்போதும் துன்பமுடையது.

ஓ! வீட்டைக் கட்டும் கொல்லனே! நீ கண்டு பிடிக்கப்பட்டாய் உன்னுடைய, கூரையின் மோட்டு விளிம்பு உடைந்துவிட்டன. வலிச்சல்கள் தூளாக்கப் பட்டன. கட்டப்படாததற்கு, விடுபட்டதற்கு (வீட்டிற்கு, நிர்வாண மோக்ஷத்திற்கு) என்னுடைய மனம் செல்கிறது. ஆசை அறுக்கப்பட்டது

இளமையிலேயே தூய வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகாதவரும் செல்வத்தைத் தேடிக் கொள்ளாதவரும் (தமது முதுமையில்), மீனில்லாத குளத்தில் இரை தேடிக் காத்திருக்கும் கிழக் கொக்கைப் போலச் சோர்ந்து அழிவர்.

இளமையிலேயே தூய வாழ்க்கை கொள்ளாதவரும், செல்வப்பொருளைத் தேடிக் கொள்ளா தவரும், தமது முதுமையில், சிதைந்து போன வில்லைப் போன்று, கடந்து போன காலத்தை எண்ணி எண்ணிக் கிடப்பார்கள்.

12. அத்த வர்க்கம-தான்

தம்மை நேசிக்கிறவர் தம்மைத்தாமே காத்துக் கொள்ளக்கடவர். அறிவாளி, மூன்று யாமத்திலும் தம்மைத்தாமே காத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக் கொள்ள வேண்டும்; பிறகுதான் மற்றவர் களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகைய ஆள் நிந்திக்கப் படமாட்டார்.

மற்றவர்களுக்கு உபதேசிக்கிற காரியத்தை, உபதேசிப்பவர் தாமே செய்கையில் செய்து காட்டக் கடவர்; முதலில் தம்மை ஒழுக்கத்தில் நிறுத்திக்கொண்டு பிறகு மற்றவரை நிறுத்தட்டும். ஏனென்றால், தன்னை அடக்கி நடப்பது கடினமானது.

நீயே உனக்குத் தலைவன். உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக்கூடும்?

ஒருவர் தம்மைத் தாமே அடக்கி ஒழுகக் கற்றுக் கொண்டால் அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவராவார்.

பாவம் உன்னிடத்திலே தோன்றி உன்னாலேயே செய்யப்படுகிறது. அறுக்க முடியாத மணிகளை வைரமணி அறுப்பது போல, மூடர்களைப் பாவம் அறுக்கிறது.

சால மரத்தின் மீது மாலுவக் கொடி படர்வது போல, ஒருவருடைய தீய ஒழுக்கமானது அவர் மீது படர்கிறது. அவர் தன்னுடைய பகைவர் தனக்குச் செய்ய நினைக்கும் தீமைகளைத் தானே செய்து கொள்ளுகிறார்.

ஆக்கத்தைத் தராததும் தீமையைப் பயப்பனவும் ஆகிய செயல்களைச் செய்வது எளிது. நன்மையைத் தருகிற நல்ல காரியங்களைச் செய்வது மிக்க அரிது.

மூடனானவன் மூடக்கொள்கையுடையவனாக இருப்பதனாலே, மேலோரால் காட்டப்படுகிற நல்ல நீதியான போதனைகளை வெறுத்து ஒதுக்கி, கட்டகச் செடியானது தனது பூவினாலே தன்னை அழித்துக் கொள்வதுபோல, தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.

உன்னாலேயே பாபம் செய்யப்படுகிறது; உன்னையே அது அசுத்தப் படுத்துகிறது. பாவம் செய்யாமலிருப்பவர் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்கிறார். பாவமும் புண்ணியமும் உன்னாலேயே செய்யப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரைச் சுத்தம் செய்யமுடியாது.

பிறர் எத்தகைய பெரியவராக இருந்தாலும், அவர் நன்மையின் பொருட்டு மற்றவர் தமது சொந்த நன்மைகளை விட்டுவிடக் கூடாது. தனது சொந்த நன்மை இன்னதென்பதைத் தெரிந்து கொண்ட பிறகு அதனை நன்கு செய்க.

13. உலக வர்க்கம-உலகங்கள்

இழிவான காரியத்தைச் செய்யாதே. அசட்டையாயிராதே. தவறான கொள்கையைக் கொள்ளாதே. உலக வளர்ச்சியை (மீண்டும் மீண்டும் பிறப்பதை) வளர்த்துக் கொள்ளாதே

அசட்டையாயில்லாமல் விழிப்பாக இரு. தர்மத்தை முழுவதும் கைக்கொண்டு ஒழுகு.

தர்மப்படி நடக்கிறவர்கள் அவ்வுலகத்திலும் இவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.

தர்மத்தை நல்வழியில் செலுத்தி நட; தீய வழியில் செலுத்தி நடக்காதே. தர்ம வழியில் ஒழுகு பவர், இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.

இவ்வுலக வாழ்க்கையை, நீர்க்குமிழி போன்றும், கானல் நீரைப் போன்றும் கண்கிறவர் யார அவரை, யமராஜன் காணமாட்டான்.

அரசருடைய அலங்கரிக்கப்பட்ட தேரைப் போன்று இருக்கிற இந்த உலகத்தைப் (உடம்பை) பாருங்கள். மூடர்கள் இதில் பற்றுக்கொண்டு அமிழ்ந்து விடுகிறார்கள். ஆனால், அறிஞர்கள் இதில் பற்றுக் கொள்வதில்லை.

முன்பு அசட்டையாக இருந்து, பிறகு விழிப்படைந்து முயற்சியோடிருப்பவர், மேகத்தில் மறையுண்டிருந்த வெண்ணிலா, அதை விட்டு வெளிப்பட்டதைப் போன்று, பிரகாசிக்கிறார்.

தீய செயல்களை நல்ல செயல்களினாலே மறைத்து விட்ட ஒருவர், மேகத்திலிருந்து வெளிப் பட்ட வெண்ணிலாவைப் போல விளங்குகிறார்.

இவ்வுலகம் இருள் அடைந்தது, இதன் உண்மை இயல்பைக் காண்கிறவர் மிகச் சிலரே.

வலையில் அகப்பட்ட பறவை அதிலிருந்து தப்பித்துக் கொள்வது போல, சிலர் மட்டும் இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

அன்னப்பறவைகள் வானத்தில் பறக்கின்றன. இத்தி (சித்தி) அடைந்தவர் ஆகாயத்தில் பறக் கிறார்கள். தீயவனான மாரனை அவனுடைய படையோடு வென்ற தீரர்கள் உலகத்தைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தை அடைகிறார்கள்.

ஒப்பற்ற தர்மத்தை இகழ்ந்து ஒதுக்கிவிட்டு, பொய்யையே பேசிக்கொண்டு, பரலோகத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிற பாவத்தைப் போன்று வேறு பாவச் செயல் கிடையாது.

கருமிகள் தேவலோகத்தை அடைகிறது இல்லை. மூடர்கள் தானதர்மத்தைப் புகழ்வதில்லை, ஆனால், தீரர் களான அறிவாளிகள் தானதர்மங்களைப் புகழ்ந்து செய்கிற படியினாலே இவ்வுலகத்திலும் அவுலகத்திலும் சுகம் பெறுகிறார்கள்.

ஸோதாபத்திபலம் அடைந்தவர்கள், அரச பதவியை விட, உலகங்களை ஆளும் சக்கரவர்த்தி பதவியைவிட, சுவர்க்க பதவியைவிட, மேலான பதவியை அடைகிறார்கள்.

14. புத்த வர்க்கம-விழிப்பு

பிறப்பு இறப்பாகிய வழியை நீக்கி, ஆசையறுத்து, வெல்லப்படாத வெற்றியையுடைய ஞானி யாகிய புத்தரை (உலக வழியில்) நீ எந்தப் பாதையில் செலுத்தமுடியும்?

(உலக) நெறியை நீத்தவரும் அளவற்ற ஞானம் உடையவரும் நச்சுத்தன்மையுள்ள ஆசைத் தளையை அறுத்தவருமாகிய புத்தரை நீ எந்த (உலக) வழியில் செலுத்த இயலும்?

விழிப்புடன் தியானத்தில் அமர்ந்து துறவு பூண்டு முழுஞானம் பெற்றவரை தேவரும் விரும்பு கிறார்கள்.

மனிதராகப் பிறப்பது அருமையானது. மனிதராக வாழ்வது அருமையானது. ‘சத்’ தர்மத்தைக் கேட்பது அருமையானது. புத்தராகப் பிறப்பது (புத்த பதவியை அடைவது) அருமையானது.

'பாவங்களைச் செய்யாதிரு; நல்லவற்றைச் செய்; மனதைச் சுத்தப்படுத்து' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.

'பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்ல துறவு ஆகும், நிர்வாண மோக்ஷம் மேலான பதவி யாகும்' என்று புத்தர்கள் கூறுகிறார்கள். பிறரைத் துன்புறுத்திக் கஷ்டப்படுத்துகிறவர் சந்நியாசியும் ஆகமாட்டார்; சமணரும் ஆகமாட்டார்.

'நிந்திக்காதே; துன்புறுத்தாதே; பாதி மோக்க வழியைப் பின்பற்றிநட; மித உணவுகொள், ஏகாந்தமாக இருந்து தியானத்தில் பழகு' என்னும் இவையே புத்தருடைய உபதேசங்களாகும்.

பொன் காணத்தை (நாணயத்தை)ப் பொழிந்தாலும் காம ஆசையைத் திருப்திப்படுத்த முடியாது.

காம இச்சை சிறு போது இன்பமும் பிறகு துக்கத்தையும் கொடுக்கிறது என்பதை அறிந்தவனே ஞானியாவான். தேவசுகங்களையும் விரும்பாதே. முழுஞானம் பெற்றவரின் சீடர்கள் சையை (பற்றை) அழிக்க ஊக்கமுள்ளவராய் இருக்கிறார்கள்.

அச்சங்கொண்டவர், மலைகளையும், காடுகளையும், சோலைகளையும், துறவிகள் வசிக்கும் இடங்களையும் தமக்குப் புகலிடமாகச் சரணம் அடைகிறார்கள்.

இவை யாவும் நல்ல புகலிடம் ஆகா. மேலும் இப்புகலிடங்கள் துக்கத்தைப் போக்குவன அல்ல.

புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்சாட்சி பெற்று நான்கு வாய்மை களான:- துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கத்தை நீக்கும் வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள்,

உண்மையான புகலிடத்தை யடைகிறார்கள். இந்தப் புகலிடம் மேலானது. இதை யடைந்தவர் எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

புருஷ ஞானி (புத்தர்) கிடைப்பது அருமை. அவர்கள் எப்போதும் தோன்றுவது இல்லை. இந்தத் தீரன் பிறந்த குலம் மேன்மையடைகிறது.

புத்தர்களின் தோற்றம் சுகமானது. அவர்கள் போதிக்கும் ‘சத்’ தர்மம் சுகமானது. சங்கத்தில் சேர்வது சுகமானது. சங்கத்தில் சேர்ந்தவரின் சன்மார்க்க ஞானம் சுகமானது.

ஆசையைக் கடந்து, பொய்க்காட்சியை நீக்கித் துன்பங்களையும் துக்கங்களையும் அறுத்த புத்தர்களையாவது அவருடைய சீடர்களையாவது போற்றி வணங்குகிறவர்கள், நிர்வாண மோக்ஷம் அடைந்து, எவ்வித அச்சங்களையும் அகற்றினவர்களைப் போற்றி வணங்கு கிறவர்கள், இவ்வளவு அவ்வளவு என்று மதிப்பிட முடியாத புண்ணிய சீலர் ஆவார்கள்.

15. சுக வர்க்கம-உவகை

ஆ! பகைக்கிறவர்களிடம் அன்பு செலுத்தி உவகையோடு வாழ்கிறோம். பகைக்கிறவர் இடையே பகையற்று வாழ்கிறோம்.

ஆ! ஆதுரத்தோடு (பத்து விதமான வருத்தங்களோடு) வாழ்கிற மக்களுடன் ஆதுரம் இல்லாமல் உவகையோடு வாழ்கிறோம். வருத்தம் உறுகிறவர் இடையிலே வருத்தம் இல்லாமல் வாழ்கிறோம்.

ஆ! அவா (ஆசை) உடையவர்களோடு அவா இல்லாமல் உவகையோடு வாழ்கிறோம். அவா உடையவர்களிடையிலே ஆசையற்று இன்பமாக வாழ்கிறோம்.

ஆ! எமக்கென்று ஒருபொருளும் இல்லாமல் உவகையோடு வாழ்கிறோம். ஒளிரும் மேனியோடு விளங்குகிற அப்ஸ்ஸர தேவர்களைப்போல இன்பத்தில் தங்கி வாழ்கிறோம்.

வெற்றிவீரன் பகைமையை வளர்க்கிறான். தோல்வியுற்றவன் நோவுடன் கிடக்கிறான்.

வெற்றியையும் தோல்வியையும் விரும்பாத சாந்தமுடையவன் உவகையோடு வாழ்கிறான்.

ஆசையைப் போன்ற நெருப்பு வேறொன்றும் இல்லை. பகைமையைப் போன்ற பாவம் வேறு ஒன்றும் இல்லை. ஐம்புலன்களால் ஏற்படுகின்ற நோயைப் போன்ற நோய் வேறொன்றும் இல்லை. சாந்தியைப் (நிர்வான மோக்ஷம்) போன்ற உயர்ந்த சுகம் வேறொன்றும் இல்லை.

பசியானது நோயாகும். சம்ஸ்கரங்கள் (ஐம்புலன்கள்) பெரிய துன்பமாகும். இந்த உண்மையை உள்ளபடி அறிந்து பரம சுகமாகிய நிர்வான மோக்ஷத்தைப் பெற வேண்டும்.

உடல் நலம் பெரிய ஊதியம் ஆகும். வேண்டாமை (திருப்தி) பெரிய செல்வமாகும். நம்பத் தகுந்தவர் உறவினர் ஆவர். நிர்வான மோக்ஷம் மிக உயர்ந்த சுகம் ஆகும்.

அமைதி, ஏகாந்தம் என்பவற்றை அருந்தி உண்மையின் சுவையில் நாட்டமுடையவர், எல்லா விதிமான பாவங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆவர்.

அறிவாளிகளான ஞானிகளைப் பார்ப்பது புனிதமானது; அவர்களுடன் வசிப்பது எப்போதும் இனிமையானது. ஆனால், மூடர்களைப் பாராமல் இருப்பவர் இன்பமாக இருக்கிறார்.

ஏனென்றால், மூடர்களுடன் பழகுகிறவர் நெடுங் காலம் துன்பம் அடைகிறார். மூடர்களுடன் நட்பாக இருப்பவர், பகைவருடன் நட்புச் செய்தவர் போலத் துன்பம் அடைகிறார். அறிஞருடன் நட்புக் கொள்வது, உறவினருடன் பழகுவது போன்று இன்பகரமானது.

ஆகையினாலே, அறிவும் சிந்தனையும் படிப்பும் உடையவராய், நல்வழியில் செலுத்தும் வன்மையுடையவராய், கடமையை அறிந்து நடப்பவராய் உள்ள பெரியோரைப் பின்பற்றி நடப்பாயாக. அப்படிப் பட்ட அறிவும் குணமும் உடையவரை, விண்மீன்கள் சென்ற வழியே செல்லுகிற வெண்ணிலாவைப் போல, பின்பற்றிச் செல்வாயாக.

16. பிரிய வர்க்கம-பிரியமானவர்

விரும்பத்தகாதவற்றில் விருப்பங்கொண்டு விரும்பத் தக்கவைகளை விலக்கித் தமக்குப் பிரிய மானவற்றைச் செய்து நல்லவற்றை விலக்குகிறவர்கள், நல்ல காரியம் ஒன்றையே செய்கிற வர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்.

பிரியமானவற்றில் மனத்தைச் செலுத்தாதே. வெறுப்பானவற்றிலும் மனத்தைச் செலுத்தாதே.

பிரியமானதும் துக்கத்தைத் தருகிறது; வெறுப்புள்ளதும் துக்கத்தை உண்டாக்குகிறது. ஆகையினாலே பிரியம் கொள்ளாதே. ஏனென்றால், பிரியமானவர்களைப் பிரியும் போது துக்கம் உண்டாகிறது. விருப்பும் வெறுப்பும் அற்றவர்களுக்குத் தளை (பற்று) இல்லை.

பிரியமானவைகளிலிருந்து துக்கம் உண்டாகிறது. விருப்புள்ளவைகளிலிருந்து அச்சமும் உண்டாகிறது. விருப்பத்தை முழுவதும் விட்டவர்களுக்குத் துக்கம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச வேண்டியது என்ன இருக்கிறது?

ஆசை(பிரேமை)யிலிருந்து துன்பம் உண்டாகிறது; ஆசையிலிருந்து அச்சமும் உண்டாகிறது.

ஆசையிலிருந்து முழுதும் நீங்கினவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

வாஞ்சைகளிருந்து துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. வாஞ்சைகளை முழுவதும் நீக்கினவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

காமத்திலிருந்து துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. காமத்தை முற்றும் விட்டவர் களுக்குத் துன்பம் உண்டாவதில்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

பற்றுக்களினாலே (தண்ஹா) துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. பற்றுக்களை முற்றும் விட்டவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

சீலத்தையும் ஞானத்தையும் நேர்மையையும் உண்மையையும் உடையவர்களாய் தமது கடமையைச் செய்கிறவர்களை மக்கள் விரும்புகிறார்கள்.

நிர்வாண மோக்ஷத்தை நாடி, அதனைத் தன் மனத்தில் இருத்தி ஆசைகளை அறுத்தவர், 'நீரோட்டத்தினால் மேலே இழுத்துச் செல்லப்பட்டவர்' (உத்தம் ஸோதோ) என்று கூறப் படுகிறார்.

நெடுநாலைக்குப் பின்னர் தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரை, அவரது சுற்றத்தாரும் நண்பரும் அன்பரும் நன்கு வரவேற்பது போலப் புண்ணியம் செய்தவர்கள் இவ்வுலகத்தை விட்டு மறு உலகத்திற்குச் செல்லும் போது, திரும்பி வந்தவனைச் சுற்றத்தார் வரவேற்பது போல, அவருடைய புண்ணியங்கள் அவர்களை வரவேற்கின்றன.

17. கோத வர்க்கம்-கோபம்

கோபத்தை விடுவாயாக. "நான்" என்கிற மானத்தை நீக்குவாயாக. அருவுருவை (நாம ரூபத்தை)ப் பற்றறுத்து, எப்பொருளிலும் ஆசையற்றவரைத் துக்கம் அணுகாது.

தவறான பாதையில் சென்ற தேரை (வண்டியை) மீட்டு நல்ல பாதையில் செலுத்துவது போல, கோபத்தை அடக்கிக் காத்தவரைத் தேர்ப்பாகன் என்று கூறுவேன். அவ்வாறு செய்யாதவர் கடிவாளத்தை மட்டும் பிடித்திருப்போர் ஆவர்.

கோபத்தை அன்பினால் வெல்க. தீமையை நன்மையினால் வெல்க. கருமியைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினால் வெல்க.

உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகச் கொஞ்சமாக இருந்தாலும், யாசிக்கிறவர்களுக்கு அதையும் ஈவாயாக. இம்மூன்று செய்கையினாலும் ஒருவர், தேவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லுகிறார்.

உடம்பில் பற்றற்று அஹிம்சையைச் கடைப்பிடித்த முனிவர்கள் துன்பம் இல்லாத இறவாத நிலையை அடைகிறார்க்ள்.

விழிப்புடன் இருந்து, இரவும் பகலும் தம்மை நல்வழியில் பழக்கி நிர்வாண மோக்ஷத்தில் நாட்ட முடையவருடைய ஆசவங்கள் அழிந்து விடுகின்றன.

*அர்ஹந்த வர்க்கம் ஐந்தாவது பாட்டுரையில், ஆசவங்கள் என்ன என்பது விளக்கப்பட்டன. அங்குக் காண்க.

ஆதுலனே! இது தொன்றுதொட்டு வருகிறது; இன்று உண்டாவது அல்ல; மெளனியாக இருப்பவனை நிந்திக்கிறார்கள்; அதிகமாகப் பேசுகிற வாயாடிகளையும் நிந்திக்கிறார்கள்;

அன்றியும், அளவாகப் பேசுகிறவர்களையும் நிந்திக்கிறார்கள். முழுவதும் இகழப்படுபவரும், முழுவதும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; என்றும் இல்லை.

குற்றமற்ற நல்லொழுக்கமும் அறிவும் ஞானமும் உடையவரை நாள்தோறும் நன்கறிந்து, அறிஞர்கள் புகழ்வார்களானால்; ஐம்புநதம் என்னும் பொன் போன்று தூய்மையான அவர்களை யார்தான் நிந்திக்ககூடும்? அப்படிப்பட்ட அவர்கள், தேவர்களாலும் பிரம்மராலும் புகழப்படு கிறார்கள்.

உடம்பினால் உண்டாகிற குற்றங்களை அடக்கிக் காக்க. உடம்பை அடக்கி ஆள்க. உடம்பினால் உண்டாகும் தீயகாரியங்களை விலக்கி நல்ல காரியங்களைச் செய்க.

வாக்கினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. வாக்கினை அடக்கி ஆள்க. வாக்கினால் உண்டாகும் தீமைகளை நீக்கி, நல்ல வாக்குடையவராக இருக்க வேண்டும்.

மனத்தினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. மனத்தை அடக்கி ஆள்க. மனக்குற்றங் களை நீக்கி, மனத்தினால் நல்ல எண்ணங்களை எண்ணுக.

உடல், வாக்கு மனம் இவைகளை அடக்கி ஆள்கிற அறிஞர் உண்மையாகவே நல்ல அடக்கம் உடையவர் ஆவர்.

18. மல வர்க்கம-மாசுகள்

இப்போது நீ பழுத்துப்போன இலைபோல் ஆய்விட்டாய். யமதூதர் உன்னை அணுகுகிறார்கள்.

நீ இறந்து போகும் நிலையில் இருக்கிறாய். நீ செல்லும் வழிக்கு உணவு உன்னிடம் இல்லை.

ஆகவே உன்னைத் தீவு போல் (அரண்) செய்து கொள். ஊக்கமும் அறிவும் உடையவனாக இரு.

உன்னுடைய மாசுகள் நீங்கி, நீ பாவம் அற்றவனாய், ஒளியுடன் விளங்குகிற உயர்ந்த உலகத் திற்குச் செல்வாய்.

உன் வாழ்நாள் முடிந்துவிட்டது. யமனுடைய முன்னிலையில் நீ இருக்கிறாய். நீ செல்லும் வழியில் தங்க இடமும் உண்ண உணவும் இல்லை.

ஆகவே உன்னைத் தீவு போன்று (அரண்) செய்து கொள். ஊக்கமும் அறிவும் உடையவனாக இரு. உன்னுடைய மாசுகள் நீங்கி, நீ பாவம் அற்றவனாகிவிட்டால், பிறக்கவும் இறக்கவும் மாட்டாய்.

அறிவாளியானவர், தட்டான் வெள்ளியில் உள்ள களிம்பைப் போக்குவது போல, கணந்தோறும் சிறிது சிறிதாகத் தம்முடைய மாசுகளைப் போக்கிக் கொள்கிறார்.

இரும்பினால் உண்டான துரு இரும்பையே அழித்து விடுவது போல, தீய நெறியில் செல்வோர் தம் தீய செயல்களினால் அழிக்கப்படுகிறார்.

பாராயணம் செய்யாமலிருப்பது மந்திரத்திற்குக் குற்றமாகும். பழுது பார்க்காமலிருப்பது வீட்டிற்குக் குற்றம் ஆகும். சோம்பலானது அழகுக்குக் குற்றம் ஆகும். அசட்டைத்தனமாக இருப்பது காவலுக்குக் குற்றம் ஆகும்.

ஒழுக்க ஈனமாக நடப்பது பெண்டிர்க்குக் குற்றம் ஆகும். பொருளில் பற்றுள்ளம் வைப்பது வள்ளலுக்குக் குற்றம் ஆகும். உண்மையாகவே, தீய கருமங்களைச் செய்வது இம்மைக்கும் மறுமைக்கும் குற்றம் ஆகும்.

அழுக்கு (குற்றம்) களில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக்கொடியது. இது பெரிய குற்றம். பிக்குகளே! இந்த அழுக்கை நீக்குங்கள்; அழுக்கற்று இருங்கள்.

காக்கை போன்று வெட்கம் இல்லாமல், துணிவும் பழிச்சொல்லும் குற்றச்சொல்லும் உடைய ஒருவருக்கு இவ்வுலக வாழ்க்கை இன்பகரமாகக் காணப்படுகிறது.

அமைதியும் நிதானமும், சுறுசுறுப்பும் தன்னடக்கமும் உடையவராய் எப்போதும் தூய்மையை நாடிக் கொண்டு தீமையற்றவராய் உள்ள ஞானிக்கு உலக வாழ்க்கை துன்பகரமாக இருக்கிறது.

உலகத்திலே, உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், பிறன் மனைவியை விரும்புகிறவரும், மயக்கம் உண்டாக்குகிற குடிவகைகளைக் குடிக்கிறவரும், இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக் கொள்கிறார்கள். ஓ புருஷனே! இதைத் தெரிந்துக்கொள். அடக்கப்படாத தீய எண்ணங்கள் இப்படிப்பட்டவையே. ஆகவே, தீய நடத்தை களும் பேராசையும் உன்னைத் தீராத துக்கத்தில் இழுத்துச்செல்ல விடாதே.

மக்கள் தங்கள் சக்திக்கும் பக்திக்கும் தக்கவாறு தானம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு உணவும் பானமும் கொடுப்பதைக்கண்டு பொறாமைப் படுகிறவர், இரவிலும் பகலிலும் மனச் சாந்தி யடைய மாட்டார்.

இந்தப் பொறாமையை அடியோடு பெயர்த்தெறிந்து முழுவதும் அழித்து விட்டவர்கள், இரவிலும் பகலிலும் மனச்சாந்தி (சமாதி) அடைகிறார்கள்.

காமத்தீ போன்று வேறு தீ இல்லை. பகைமையை போன்று வேறு உறுதியான பிடி இல்லை.

மோகவலை போன்று வேறு வலை இல்லை. ஆசை வெள்ளம் போன்று வேறு வெள்ளம் இல்லை.

பிறருடைய குற்றம் எளிதில் காணப்படுகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களைப் பதரைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர், தந்திரமுள்ள சூதாடி தன் தோல்வியை மறைப்பதற்காகச் சூதுக் காயை ஒளிப்பது போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைக்கிறார்.

எப்போதும் பிறர் குற்றத்தைக்கண்டு குறை கூறுகிறவர்கள், தம்முடைய குற்றங்களை வளர விடுகிறார்கள். அவர்கள் தமது குற்றங்களை அழிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆகாயத்திலே பாதைகள் இல்லை. வேறு சமயத்தில், (உண்மையான) துறவிகள் இல்லை. மக்கள், உலகத்திலே இச்சைகளை வளர்க்கிறார்கள். ததாகதர்(புத்தர்)கள் இச்சைகளை வளர்ப்ப தில்லை. வானத்தில் பாதைகள் இல்லை. வேறு சமயத்தில், (உண்மையான) துறவிகள் இல்லை. நிலை நிற்கும் படியான பொருள் உலகத்தில் ஒன்றும் இல்லை.

19. தம்மட்ட வர்க்கம-நீதிபதி

வழக்கில் தீர்ப்பளிப்பதனாலேயே ஒருவர் நீதிபதியாகமாட்டார். பண்டிதரான ஒருவர் மெய்யையும் பொய்யையும் ஆராய்ந்து பார்த்து, யோசனையோடு பக்ஷபாதமில்லாமல் நேர்மையாகத் தீர்ப்பளிக்கிறார். தர்மத்தினால் போற்றப்படுகிற அந்த அறிஞர் பண்டிதர் எனப்படுவார்.

ஒருவர் அதிகமாகப் பேசுவதனாலேயே அறிஞர் ஆகமாட்டார். பொறுமையும் அன்பும் உடையவராய், அச்சமில்லாதவர் யாரோ அவரே, பண்டிதர் எனப்படுவார். ஒருவர் அதிகமாகப் பேசுகிறபடியினாலேயே தர்மத்தை அறிந்தவர் ஆகமாட்டார். தான் கேட்டது சிறிதளவாக இருந்தாலும் அதை மனத்தில் ஆழ்ந்து சிந்தித்துப் பதியவைத்து, அதை உறுதியாகப் பிடித்திருப்பவரே தர்மத்தை அறிந்தவர் ஆவார்.

தன்னுடைய தலை மயிர் நரைத்துவிட்டதினாலேயே ஒருவர் தேரர் ஆகமாட்டார்.

அவருடைய வயதுமட்டும் முதிர்ந்து விட்டது. அவர் "வீணாக வளர்ந்தவர்" எனப்படுவார்.

உண்மையும் நேர்மையும் அஹிம்சையும் அடக்கமும் உள்ளவர் யாரோ, அந்தக் குற்றமற்ற அறிஞர் உண்மையாகவே தேரர் என்னும் பெயருக்கு உரியவர் ஆவார்.

பொறாமையும் வெறுப்பும் கபடமும் உள்ளவர்கள், அழகாக இருப்பதனாலேயோ அல்லத இனிமையாகப் பேசுவதனாலேயோ சாது ஆக மாட்டார்கள்.

இவைகளையெல்லாம் யாரொருவர் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாரோ, பகைமையை விட்டவர் யாரோ அந்த அறிஞரே சாது எனப்படுவார்.

தான் மேற்கொண்ட (துறவுக்) கடைமையை விட்டு, பொய்யைப் பேசுகிற ஒருவர், தனது தலையை மழித்து விட்டதனாலேயே சமணர் (துறவி) ஆகமாட்டார். ஆசைகளையும் அவாவையும் விடாதவர் எப்படிச் சமணர் ஆவார்?

சிறிதும் பெரிதும் ஆகிய எல்லாவிதமான பாவங்களையும் அடக்கினவர் யாரோ அவரே சமணர் (துறவி) ஆவார். ஏனென்றால், அவர் எல்லாப் பாவங்களையும் அடக்கியிருக்கிறார்.

பிறரிடம் பிச்சை கேட்பதனாலேயே ஒருவர் பிக்கு ஆகமாட்டார். தர்ம மார்க்கத்திலிருந்து தவறி நடக்கிறவரும் பிக்கு ஆகமாட்டார்.

புண்ணியம் பாவம் இரண்டினையும் விட்டுப் பிரமச்சரியங் காத்து, இவ்வுலகத்திலே தூய்மை யான வாழ்க்கை வாழ்கிறவர் யாரோ அவர் தான் பிக்கு என்று கூறப்படுகிறார்.

மூடத்தனமும் அறியாமையும் உள்ள ஒருவர் மெளன விரதம் பூண்டிருப்பதனாலேயே முனிவர் ஆகமாட்டார். அறிஞரான ஒருவர், தராசைத் தூக்கி நிறுத்தி எடை காண்பவர் போல, சீர்தூக்கிப் பார்த்து நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, பாவங்களைத் தள்ளிவிடுகிறவர் யாரோ அவரே முனிவர் ஆவார். ஏனென்றால் இரண்டு உலகங்களையும் நிறுத்துப் பார்க் கிறவர் ஆகையினாலே அவர் முனிவர் எனப்படுவார்.

உயிர்களை இம்சித்து வதை செய்கிறவர் ஆரியர் (உயர்ந்தவர்) ஆகமாட்டார். எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவர் (அகிம்சையோடிருப்பவர்) ஆரியர் (மேலோர்) எனப்படுவர்.

சீலத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும், அதிகமாகக் கற்றதினாலும், சமாதி நிலையில் இருப்பதனாலும், அல்லது ஏகாந்த வாழ்க்கை வாழ்வதனாலும், "சாதாரண மக்கள் அடையாத துறவு இன்பத்தை நான் அடைந்தேன்" என்று அறிவதாலும் மாத்திரம், ஓ பிக்குகளே! சாந்தியடைய முடியாது. ஆஸவங்களை ஒழித்தால் தான் சாந்தியடைய முடியும்.

20. மார்க்க வர்க்கம-பாதை

எல்லா மார்க்கங்களைவிட அட்டாங்க மார்க்கம் மேன்மையானது. வாய்மைகளிலெல்லாம் நான்கு வாய்மைகளே மேலானவை. தர்மங்களிலெல்லாம் ஆசையற்ற (நிர்வாண) தர்மம் மேலானது. மனிதர்களில் எல்லாம் (ஞானக்) கண்ணுள்ளவர் (புத்தர்) மேலானவர்.

நற்சாட்சி பெறுவதற்கு இதுவே சிறந்த மார்க்கம்; வேறு மார்க்கம் இல்லை. இந்த மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பாயாக. ஏனென்றால் இது மாரனைத் திகைக்கச் செய்கிறது.

இந்த வழியில் நீ நடப்பதனாலே நீ துக்கத்தை நீக்கலாம். அம்பு போன்ற கூர்மையான துன்பங் களை அகற்றுவதற்கு இந்த வழியைக் காட்டினேன்.

நீயே ஊக்கத்தோடு முயற்சி செய்ய வேண்டும். புத்தர்கள் வழியை மட்டும் காட்டுவார்கள். இதை மனத்தில் பதிய வைத்து இதன்படி நடக்கிறவர்கள், தீயவனான மாரனுடைய தளை யிலிருந்து நீங்குகிறார்கள்.

சம்ஸ்காரங்கள் எல்லாம் அழிந்து போகிறவை என்பதைக் கண்டு உணர்ந்து, துக்கத்தை வெறுக்கிறவர்களுக்கு இதுவே சுத்தமான வழியாகும்.

சம்ஸ்காரப் பொருள்களெல்லாம் துக்கந்தருவன என்பதை ஞானத்தினால் உணர்ந்து, துக்கத்தை வெறுக்கிறவர்களுக்கு இதுவே சுத்தமான மார்க்கமாகும்.

எல்லாப் பொருள்களும் அனாத்மம் என்பதை ஞானத்தினால் உணர்ந்து, துக்கத்தை வெறுக்கிறவர்களுக்கு இதுவே சுத்தமான மார்க்கமாகும்.

இளமையும் வலிவும் உடையவனாக இருந்தும், சோம்பலாகவும் அசட்டையாகவும் முயற்சி இல்லாமலும் இருக்கிற மந்த புத்தியுள்ள சோம்பேறி, அறிவு வழியைக் காணமாட்டான்.

மொழி(பேச்சு)யினால் உண்டாகும் குற்றங்களை நீக்கி, மனத்தை அடக்கி, உடம்பினாலும் தீய செயல்களைச் செய்யாதிருப்பாயாக. மனமொழி மெய்களாகிய இம்மூன்றினாலும் உண்டாகும் தீமைகளை நீக்கி மேலோர் காட்டிய நல்வழியில் செல்க.

மனத்தை ஒரு நிலைப்படுத்துவதனாலே (யோகத்தினாலே) ஞானத்தைப் பெறலாம்.

மனத்தை ஒரு நிலைப்படுத்தா விட்டால் ஞானத்தைப் பெற முடியாது. ஊதியம் தருவதும் ஊதியம் தராததுமான இந்த இரண்டு வழிகளையும் தெரிந்து ஞானம் வளர்கிற வழியில் நடப்பாயாக.

பிக்குகளே! ஒரு மரத்தை மட்டும் வெட்டி வீழ்த்தாதீர்கள். (ஆசையாகிய) காடுமுழுவதையும் வெட்டித் தள்ளுங்கள். ஆசையாகிய காட்டிலிருந்து ஆபத்து உண்டாகிறது. ஆகவே, காடு முழுவதையும் புதர்களோடு வெட்டிக் காட்டை ஒழியுங்கள்.

ஏனென்றால், மங்கையரைப்பற்றிய ஆசை சிறியதாக இருந்தாலும் அது அழிக்கப்படாமல் இருக்குமானால், பாலுண்டு வளரும் கன்றைப்போல அது வளர்ந்துவிடும்.

தாமரையை நீரிலிருந்து அறுப்பது போல, ஆசையை உன் கையினாலே அறுப்பாயாக.

சுகதரால் போதிக்கப்பட்ட நிர்வாண மோக்ஷமாகிய சாந்த வழியில் செல்வாயாக.

"கார்காலத்தில் இங்கே தங்குவேன், குளிர் காலத்திலும் வேனிற்காலத்திலும் இங்கிங்கே வசிப்பேன்" என்று மூடர்கள் சிந்தித்துக் கொண்டு துன்பங்களை உணர்கிறதில்லை.

புத்திரர், பசு முதலிய சம்பத்துக்களில் ஒருவன் மகிழ்ச்சி கொண்டிருப்பானானால், தூங்கிக் கொண்டிருக்கிற போது கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போல, அவனைச் சாவு அடித்துக்கொண்டு போய்விடும்.

சாவினால் (மரணத்தினால்) இழுத்துக் கொண்டு போகப்பட்டவர்களுக்கு மக்களாலும், தகப்பனாலும், சுற்றத்தினராலும் பாதுகாப்புக் கிடையாது. ஏனென்றால், உறவினரால் அவருக்குப் பாதுகாப்பு இல்லை.

அறிவினால் தன்னை அடக்கியாள்கிற ஞானவான், இந்த உண்மையை அறிந்து, நிர்வாண மோக்ஷத்திற்குச் செல்லும் வழியை இப்போதே செம்மைப்படுத்த வேண்டும்.

21. பகிண்ணக வர்க்கம-தொகுப்பு

சிறு இன்பத்தை விடுவதனாலே, பெரிய இன்பத்தை அறிஞர் ஒருவர் காண்பாரானால், அப்பெரிய இன்பத்திற்காகச் சிறிய இன்பத்தைத் துறப்பாராக.

தன் சொந்த இன்பத்தைக் கருதி பிறருக்குத் துன்பத்தை ஒருவர் உண்டாக்கினால், பகைமை என்கிற தளையில் அகப்பட்டு அப்பகைமையிலிருந்து விடுபடுகிறதில்லை.

செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் விடுகிறார்கள். செய்யக்கூடாத காரியத்தைச் செய்கிறார்கள். இவ்வாறு அசட்டைத்தனமுள்ளவர்களின் ஆசவம் (ஆசை) பெருகுகிறது.

சிந்தனை உள்ளவர்கள் உடம்பை நல்ல வழியிலே பழக்கிச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய முயற்சியோடிருக்கிறார்கள். விழிப்பும் சிந்தனையும் உள்ள அவர்களின் ஆசவங்கள் அழிந்து போகின்றன.

(ஆசையாகிய) தாயைக் கொன்று, (அகங்காரம்) என்கிற தந்தையைக் கொன்று, (பொறிகளும் புலன்களுமாகிய) வீரராகிய இரண்டு அரசர்களையும் வென்று. (பற்று அல்லது ஆசை) என்கிற அரசாட்சியை அழித்த பிராமணர் துக்கம் இல்லாமல் போகிறார்.

தாயையும், தந்தையையும், குருமாராகிய இரண்டு அரசர்களையும் கொன்று ஐந்து தடை களையும் வென்று, (பிறவியை அறுத்து சாவாநிலையை அடைந்து) பிராமணர் துக்கம் இல்லாமல் போகிறார்.

கோதமருடைய (புத்தருடைய) சீடர்கள், புத்தருடைய பெருமையை இரவும் பகலும் இடை விடாமல் சிந்தித்துக் கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

கோதமருடைய சீடர்கள், தருமத்தினுடைய பெருமையை இரவும் பகலும் இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

கோதமருடைய சீடர்கள் (பிக்ஷு), சங்கத்தினுடைய பெருமையை இரவும் பகலும் இடை விடாமல் சிந்தித்துக் கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

கோதமருடைய சீடர்கள், உடம்பைப் பற்றி இரவும் பகலும் இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

கோதமருடைய சீடர்கள், அகிம்சையை இரவும் பகலும் இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

கோதமருடைய சீடர்கள், இரவும் பகலும் இடைவிடாமல் பாவனா தியானத்தில் இருந்து கொண்டே முழு ஞானியாகிறார்கள்.

உலகத்தைத் துறப்பது கடினமானது. இல்லற வாழ்க்கை துன்பமானது. சரிசமானம் இல்லாத வரோடு பழகுவது துன்பமானது. திரிந்து உழல்வது துன்பமானது. ஆகையினாலே, (பிறப்பு இறப்பாகிய) பாதையில் திரிந்து துன்பத்தினால் தொடப்படாமல் இருப்பாயாக.

சீலமும் ஞானமும் உடையவர், புகழும் செல்வமும் பெறுகிறார்கள். அவர்கள் எந்நாட்டிற்குச் சென்றாலும் எங்கே இருந்தாலும் அங்கங்கே மரியாதை பெறுகிறார்கள்.

நல்லவர்கள் தூரத்தில் இருந்தாலும், இமய மலையைப் போன்று காணப்படுகிறார்கள். தீயவர், இருட்டில் எய்யப்பட்ட அம்புபோலக் காணப்படாமல் இருக்கிறார்கள்.

தனியே இருந்து, தனியே அமர்ந்து, தனியே நடந்து, அடக்கமாயிருப்பவர்கள், காட்டிலேயும் இன்பத்தைக் காண்கிறார்கள்.

22. நிரய வர்க்கம-நரகம்

பொய்யன் நரகம் செல்கிறான்; ஒன்றைச் செய்து விட்டு "நான் இதைச் செய்யவில்லை" என்கிறவனும் நரகம் செல்கிறான். இழிசினராகிய இவ்விருவரும் ஒருதன்மைத்தாக, மறுமையில் துன்பமுள்ள ஒரே இடத்திற்குச் செல்லுகிறார்கள்.

துவர் (காஷாய) ஆடை தரித்தவர்களிலும், கெட்டவர்களும், அடக்கம் அற்றவர்களுமான தீயவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது தீய செயல்களினாலே நிரயத்தில் சென்று பிறக்கிறார்கள்.

அடக்கமற்று தீய ஒழுக்கம் உள்ள துறவிகள், நாட்டில் சென்று பிச்சை ஏற்று உண்பதைக் காட்டிலும், பழுக்கக் காய்ந்த நெருப்பைக் கக்கும் இரும்பு உருண்டைகளை விழுங்குவது நல்லது.

பிறன் மனைவியிடத்துச் சோரம் போகிறவனுக்கு இந்நான்கு தீமைகள் விளைகின்றன : பாவம், அமைதியான தூக்கம் இன்மை, பழிச்சொல், நரகம்.

மேலும் அவன் பாவத்தையடைந்து மறுமையில் தீக்கதியடைகிறான். அச்சம் உள்ள ஒருவன் அச்சம் உள்ள ஒருத்தியோடு கூடா ஒழுக்கத்தினால் அடையும் இன்பம் மிகச் சிறியது. அரசனும் அவனைக் கடுமையாக ஒறுக்கிறான். ஆகவே, பிறன் மனைவியை விரும்பா திருப்பாயாக.

தர்ப்பைப் புல்லைத் தவறான முறையில் பற்றி இழுத்தால், அது கையை அறுத்து விடுகிறது.

அது போலத் தீய வழியில் துறவறத்தைச் செலுத்துகிறவர்கள் நரகத்தை யடைகிறார்கள்.

சிரத்தையோடு செய்யாத காரியம், நியமம் தவறிச் செய்யப்பட்ட செயல், ஒழுக்கமற்ற பிரமச்சரியம் ஆகிய இவை நல்ல பலனைக் கொடுப்பதில்லை.

எதையேனும் செய்ய வேண்டுமானால் அதைச் சரியாகச் செய்க. ஒழுக்கந்தவறிய துறவி தீமைகளையே அதிகமாகப் பரப்புகிறார்.

தீய கருமத்தைச் செய்யாமல் விடுவது நல்லது. ஏனென்றால், தீச்செயல்கள் பிறகு துன்பத்தைத் தருகின்றன. நல்ல காரியத்தை நன்றாகச் செய். ஏனென்றால், நல்ல காரியத்தைச் செய்வ தனாலே எவரும் வருத்தம் அடைகிறதில்லை.

எல்லைப்புறத்தில் இருக்கிற நகரத்தை உள்ளும் புறமும் அரண் செய்து பாதுகாப்பது போல, ஒருவன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்க. கணப்பொழுதையும் வீணாகக் கழிக்காதே. கணப்பொழுதுகளை நல்வழியில் செலுத்தாதவன் நிரயத்தில் சென்று வருந்துகிறான்.

வெட்கப்பட வேண்டாத காரியத்தில் வெட்கப்படுவதும், வெட்கப்பட வேண்டியவற்றில் வெட்கப் படாமலும் இருக்கிறவர்கள், தவறான காட்சியைக் கொண்டிருப்பதனாலே, நரகத்தை அடைகிறார்கள்.

அஞ்ச வேண்டியவற்றில் அஞ்சாமையையும், அஞ்ச வேண்டாதவற்றில் அச்சத்தையும் காண்கிறவர்கள், தவறான காட்சியைப் பெற்றிருப்பதனாலே, நரகத்திற்குச் செல்கிறார்கள்.

தவறில்லாதவற்றைத் தவறானவை என்றும் தவறுள்ளவற்றைத் தவறில்லாதவை என்றும் நினைக்கிறவர்கள், தீக்காட்சியுடையவர்கள் ஆகையினாலே, நரகம் அடைகிறார்கள்.

தவறானவற்றைத் தவறு என்றும் தவறில்லாதவற்றைத் தவறற்றவை என்றும் அறிகிற வர்கள், நற்காட்சியுடையவர்கள் ஆகையினாலே, சுவர்க்கம் அடைகிறார்கள்.

23. நாக வர்க்கம-யானைகள்

யானையானது, போர்க்களத்திலே எய்யப்பட்ட அம்பை எவ்வாறு தாங்கிக் கொள்கிறதோ அதுபோல, நிந்தையான சொற்களை நான் பொறுத்துக் கொள்வேன். ஏனென்றால், உலகத்திலே தீயவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

பழகிய யானை ஊர்வலத்தில் கொண்டு போகப் படுகிறது. பழகிய யானையை அரசர் ஊர்ந்து செல்கிறார்கள். தம்மை நல்வழியில் பழக்கிப் பிறர் கூறுகிற நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்கிறவர்கள், மக்களில் மேலானவர்கள்.

பழகிய குதிரை நல்லது; அது போன்று பழகிய சிந்து தேசத்துக் குதிரை சிறந்தது. அதுபோலவே, பழக்கப்பட்ட குஞ்சர யானையும் கொம்பன் யானையும் மேலானவை. ஆனால் தன்னைத் தானே அடக்கி ஆளப் பழகியவன் இவை எல்லாவற்றிலும் மேலானவன்.

தம்மைத்தாமே அடக்கப் பழகி மனத்தை நல்வழியில் செலுத்துவதனாலே அடக்கமுள்ள ஞானிகள் நிர்வாண மோக்ஷத்திற்குப் போவது போல, இத்தகைய ஊர்திகளில் ஏறிக்கொண்டு ஒருவரும் நிர்வாண மோக்ஷத்திற்குக் போக முடியாது.

அடக்கிப் பழக்கி ஆளமுடியாத தனபாலகன் என்னும் பெயருள்ள யானையானது, பிடிக்கப்பட்ட பொழுது, கவளத்தை உண்ணாமல் தான் இருந்த காட்டுக்குச் செல்ல ஏங்குகிறது.

சோம்பலும் பெருந்தீனியும் உறக்கமும் உடையவராய், பன்றிகள் சேற்றில் புரள்வது போல இப்புறமும் அப்புறமும் புரண்டு கொண்டிருக்கிற மூடர்கள், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

இந்த மனமானது முன்பு, தன் விருப்பம் போலக் கண்டபடி எல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. யானைப்பாகன், மதமுள்ள யானைய அடக்கிப் பழக்குவது போல, இன்று என் மனத்தை அடக்கிப் பழக்குவேன்.

விழிப்பாக இரு. உன் மனத்தை நன்றாகக் காத்துக் கொள். சேற்றில் அகப்பட்ட யானை அதிலிருந்து முயன்று வெளிவருவது போல, துக்கங்களிலிருந்து உன்னை வெளியேற்றிக் கொள்.

நல்லொழுக்கமும் நல்லறிவும் உடையவராய்த் தீமைகளைவிட்ட அறிஞர் கிடைப்பாரானால், அவரிடம் அன்புடனும் அக்கரையுடனும் நட்புக் கொண்டு பழகு.

நல்லொழுக்கமும் நல்லறிவும் உடைய ஒருவரைத் தோழராகப் பெறமுடியாவிட்டால், மாதங்கம் என்னும் யானை, தன்னந்தனியே காட்டில் வாழ்வது போலவும், பகைவர்களிடம் தன் தேசத்தை விட்டுவிட்டுத் தன்னந்தனியே வாழ்கிற அரசனைப் போலவும், நீ தனியே வாழ்வாயாக.

தன்னந்தனியே வாழ்வது நல்லது. மூடர்களின் நட்பு கூடாது. பாவம் செய்யாமல், கவலை யற்றவராய், காட்டில் வாழும் மாதங்கம் என்னும் யானையைப் போன்று தன்னந் தனியே வாழ்வாயாக.

துன்பம் அடைந்த காலத்தில் உதவிபுரியும் நண்பர்களைப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது.

உள்ளதைக் கொண்டு திருப்தி அடைவது மகிழ்ச்சிக்குரியது. இறக்கும் போது புண்ணியம் உடன் வருவது மகிழ்ச்சிக்குரியது. துக்கத்தை நீக்குவது மகிழ்ச்சிக்குரியது.

இவ்வுலகத்தில் தாயை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. பின்னர் தந்தையை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. உலகத்திலே துறவிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. அதுபோன்று, பேரறிஞராகிய ஞானிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது.

முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே சீலத்தைக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியது.

தர்மத்தில் உறுதியான நம்பிக்கையோடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அறிவை வளர்ப்பது மகிழ்ச்சிக்குரியது. பாவத்தை விலக்குவது மகிழ்ச்சிக்குரியது.

24. தண்ஹா வர்க்கம்-பேராசை

மனம் போனபடி வாழ்க்கையை நடத்துகிறவர்க்கு, ஆசை (தண்ஹா) யானது மாளுவா கொடியைப் போன்று வளர்கிறது. காட்டிலே பழங்களைத் தேடி அலைகிற குரங்கைப் போன்று அவன் பல பிறவிகளை அடைகிறான்.

இழிவானதும் பற்றிக்கொள்ளுகிறதுமான இந்த அவாவினால் வெல்லப்பட்டவர்களுடைய துக்கமானது, மழை காலத்தில் வளர்கிற பீரணம் புல்லைப் போன்று வளர்கிறது.

இழிவுள்ளதும் நீக்குதற்குக் கடினமானதுமான அவாவை யார் வென்றுவிடுகிறாரோ அவருடைய துக்கங்கள், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் ஓடிவிடுவது போல, விழுந்து விடுகின்றன.

ஆகையினாலே, இங்கே கூடியிருக்கிற உங்கள் எல்லோருக்கும் இந்த செய்தியைச் சொல்லுகிறேன், பீரணம் புல்லின் கிழங்கை அதன் வாசனைக்காகத் தோண்டி எடுப்பது போல, ஆசை என்கிற கிழங்கை அடியோடு தோண்டி எடுங்கள். கோரைப் புல்லை வெள்ளமானது அழுத்துவது போல, உங்களை மாரனானவன் அடிக்கடி அழுத்த விடாதீர்கள்.

மரத்தை வெட்டி விட்டாலும் அதன் வேர் வெட்டப்படாமலும் உறுதியாகவும் இருந்தால், அந்த மரமானது மீண்டும் துளிர்வது போல, அவா என்கிற வேர் அழிக்கப்படாவிட்டால் துக்கமானது மீண்டும் மீண்டும் வளர்கிறது.

தவறான காட்சியுடைய, புலன்களின் வழியாக முப்பத்தாறு கிளைகளாகப் பாய்கிற ஸோத்தா என்னும் வெள்ளத்தையுடைய (ஆசையையுடைய) ஒருவன், காம இச்சையாகிய எண்ணங் களால் அடித்துக் கொண்டு போகப் படுகிறான்.

அவா என்கிற வெள்ளம் எங்கும் பாய்கிறது. ஆசை என்கிற கொடி துளிர்த்துப் படர்கிறது. இந்தக் கொடி வளர்வதைக் கண்டு அறிவினாலே இதை வேறோடு பிடுங்கி எறிக.

பழைய நேசத்தை நினைப்பதினாலே ஒருவருக்கு இன்பம் உண்டாகிறது. உலக இன்பங்களில் பற்று வைத்து அவைகளில் இன்பத்தைக் காண விரும்புகிறவர்கள், உண்மையாகவே, பிறந்து நரை திரையடைகிறார்கள்.

ஆசையினாலே (திருஷ்ணையினால்) செலுத்தப் படுவோர், கட்டிவைக்கப்பட்ட முயலைப் போன்று, சுற்றிச் சுற்றி அலைகிறார்கள். அவர்கள், தளையினால் கட்டப்பட்டவர்களாய் நெடுங்காலம் திரும்பத் திரும்பத் துக்கம் அடைகிறார்கள்.

ஆசையினால் (திருஷ்ணையினால்) செலுத்தப் படுவோர், கட்டிவைக்கப்பட்ட முயலைப் போன்று, சுற்றிச் சுற்றி ஓடியலைகிறார்கள். ஆகையினாலே, ஆசையிலிருந்து விடுபட விரும்புவோர், ஆசையை விடுவாராக.

உலக வாழ்விலிருந்து (ஆசையிலிருந்து) விடுபட்ட ஒருவர் காட்டு வாழ்க்கைக்குச் செல்கிறார்.

காட்டு வாழ்க்கையிலிருந்து (ஆசையிலிருந்து) விடு பட்டவர் மீண்டும் ஆசை வாழ்க்கைக்குத் திரும்புகிறார். இவ்வாறு ஆசையிலிருந்து விடுபட்டவர் மீண்டும் ஆசை வாழ்வில் புகுவதைப் பாருங்கள்.

இரும்பினாலோ மரத்தினாலோ பப்பஜப் புல்லினாலோ அமைக்கப்பட்ட விலங்குகளை, அறிஞர்கள் பலமுள்ள தளை என்று கருதுகிறதில்லை. பொன்னாலும் மணியாலும் செய்யப்பட அணிகலன்கள், மக்கள், மனைவி இவர்களிடத்தில் உள்ள பற்று என்கிற விலங்கு, அறிஞர் களால் பலமான விலங்குகளாகக் கருதப்படுகிறது. இந்தப் பற்றாகிய விலங்கு தளர்ந்தும், அறுக்கக் கூடியதும் ஆக இருந்தாலும், இதிலிருந்து தப்பித்துக் கொள்வது கடினமானது. ஆனால், காம சுகங்களை விட்டு உலகத்தைத் துறந்தவர்கள் இந்த விலங்கையும் அறுத்து விடுகிறார்கள். காம இச்சைக்கு அடிமைப்பட்டவர்கள் ஆசையாகிய வெள்ளத்தில், சிலந்தி, தான் அமைத்த வலைக் கூட்டில் தானே விழுவது போல, விழுகிறார்கள். இந்த வெள்ளத்தி லிருந்து எழுந்து, ஆசையை விட்டவர்கள் எல்லாத் துக்கங்களையும் விலக்கி நிர்வாண மோக்ஷத்திற்குச் செல்லுகிறார்கள்.

இறந்தகாலம், நிகழ்காலம், எதிகாலம் என்னும் முக்காலத்தையும் கடந்து எதிர்க் கரைக்குச் செல்க. உன் மனது முழுவதும் விடுதலை யடைந்து விட்டால், நீ மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலையை அடைய மாட்டாய்.

உடம்பினால் உண்டாகும் இன்பங்களை விரும்பி, காமசுகங்களை இச்சித்து, தீய எண்ணங் களில் அழுந்தியவர்களுக்கு ஆசையானது வளர்ந்து கொண்டே போகிறது.

உடம்பின் அசுத்தத் தன்மையை அறிந்து, தீய எண்ணங்களை அடக்குவதில் ஊக்கங் கொண்டு எப்போதும் விழிப்புடன் இருக்கிறவர், மாரனுடைய தளையை அறுத்து, விடுதலை பெறுகிறார்.

வீட்டு நெறியை அடைந்தவர்கள் அச்சமற்று, ஆசையை ஒழித்து, மறு பிறப்பாகிய அம்பு களை அழித்து, இந்த உடம்பையே கடைசி உடம்பாகச் கொண்டு இருக்கிறார்கள்.

காம சுகங்களையும் ஆசைகளையும் விட்டு, சொற்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து, எழுத்துக்களின் முன்பின் நிலையைத் தெரிந்தவர், பேரறிஞராகவும் கடைசி உடம்பைப் பெற்றவராகவும் இருக்கிறார்.

நான் எல்லாவற்றையும் வென்றேன். எல்லாவற்றையும் அறிந்தேன்.பற்றுக்களை விட்டேன்.

ஆசையை அறுத்து, எல்லாவற்றையும் துறந்து, உயர் நிலையை அடைந்தேன். எல்லா வற்றையும் நானே செய்தபிறகு நான் யாரை என் குருவாகக் கூறுவேன்?

எல்லாத் தானத்தையும் ‘சத்’ தர்மம் என்கிற தானம் வெல்கிறது. எல்லாச் சுவைகளையும் ‘சத்’ தர்மத்தின் சுவை வெல்கிறது. ‘சத்’ தர்மத்தினால் உண்டாகிற இன்பம் மற்ற எல்லா இன்பங் களையும் வெல்கிறது. அவாவை அழிப்பதினாலே துக்கம் வெல்லப்படுகிறது.

சுகபோகங்கள் மூடர்களை அழிக்கின்றன. ஆனால், அது எதிர்க்கரையை நாடுகிறவர்களை அழிப்பதில்லை. மூடர்கள், சுக போகங்களில் மேன்மேலும் ஆசைகொள்கிறபடியினாலே, மற்றவர்களால் அழிக்கப் படுவது போன்று, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

வயல்களுக்குக் களையானது அழிவை உண்டாக்குகிறது. மனிதர்களுக்குக் காம இச்சை (ராகம்) அழிவை உண்டாக்குகிறது. ஆகையால், காம இச்சைகளை அழித்தவர்களுக்குத் தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தருகிறது.

வயல்களுக்குக் களைகள் அழிவை உண்டாக்குகின்றன. மனிதர்களுக்குப் பகைமை (துவேஷம்) அழிவைத் தருகிறது. ஆகையால், பகையில்லாதவர்க்ளுக்குத் தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தருகிறது.

வயல்களுக்குக் களைகள் அழிவை உண்டாக்குகின்றன. மாயை (மோகம்), மனிதர்களுக்குத் தீமையை உண்டாக்குகிறது. ஆகையால், மோகம் அற்றவருக்குத் தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தருகிறது.

களைகள் வயலுக்கு தீங்கை உண்டாக்குகின்றன. இச்சை, மனிதர்களுக்குத் தீங்கை உண்டாக்குகிறது. ஆகையால், இச்சையற்றவருக்குத் தானம் செய்வது அதிக புண்ணியத்தைத் தருகிறது.

25. பிக்கு வர்க்கம்-துறவிகள்

கண்ணை அடக்குவது நல்லது. காதை அடக்குவது நல்லது. மூக்கை அடக்குவது நல்லது. நாவை அடக்குவது நல்லது. உடம்பை அடக்குவது நல்லது. வாக்கை அடக்குவது நல்லது. எல்லாவற்றிலும் அடக்கமாக இருக்கிற பிக்குவானவர், எல்லாத் துக்கங்களிலிருந்தும் நீங்குகிறார்.

கைகால்களையும் வாக்கையும் அடக்கி, எல்லாவற்றிலும் அடக்கத்தை உடையவராய், சமாதியில் (தியானத்தில்) இன்பம் அடைந்து, திருப்தியாகவும் அமைதியாகவும் தனிமை யாகவும் இருக்கிறவர் உண்மையான பிக்கு ஆவர்.

நாவடக்கம் உள்ளவராய், இனிய சொற்களைப் பேசுகிறவராய், அடக்கமுள்ளவராய், தர்மோபதேசங்களைப் பாடம் சொல்லி உரைகூறுகிற பிக்குவின் வார்த்தைகள் இனிமையைத் தருகின்றன.

தர்மோபதேசப்படி நடந்து, தர்மோபதேசத்தில் மனம் மகிழ்ந்து, தர்மோபதேசத்தை என்னேரமும் சிந்தித்துக் கொண்டு, தர்மத்தை மறவாமல் இருக்கிற பிக்கு, உண்மையில் தர்மத்திலிருந்து தவற மாட்டார்.

பிக்குவாக உள்ள ஒருவர் தமது சொந்த லாபத்தை அலட்சியமாக எண்ணக்கூடாது. பிறருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படவும் கூடாது. மற்றவருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப் படுகிறவர் சமாதி (மன அடக்கம்) பெறமாட்டார்.

பிக்கு ஒருவர், தன்னுடைய ஊதியம் சிறிதாக இருந்தாலும் அதை இகழாமல் இருப்பாரானால், தேவர்களும் அவரைப் புகழ்கிறார்கள். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை தூய்மையான தாகவும் ஊக்கமுள்ளதாகவும் இருக்கிறது.

எவ்விதத்திலும் அருவுருவை (நாமரூபங்களை) "என்னுடையது" என்று கருதாமலும் அவை உண்மையற்றவை என்று கருதி வருத்தம் அடையாமலும் இருக்கிற ஒருவர் பிக்கு எனப் படுவார்.

மைத்ரீ பாவனை செய்து, புத்தருடைய உபதேசங்களில் இன்பம் அடைகிற பிக்கு ஆனவர் எல்லாத் துன்பங்களிலும் நீங்கி சாந்தியாகிய உயர்ந்த நிலையை அடைகிறார்.

ஓ பிக்குவே! கப்பல் காலியாக இருக்கிறது. நீ ஓடத்தைச் செலுத்தச் சுலபமா யிருக்கிறது.

ராகத்துவேஷங்களை அறுத்து நிர்வாண மோக்ஷத்தைப் பெறுவாயாக.

ஐம்புலன்களையும் ஐந்து ஸஞ்ஞோஜனங்களையும் நீக்கி, (சிரத்தை, வீரியம், ஸ்திதி, சமாதி, பஞ்ஞா என்கிற) பஞ்சேந்திரியங்களை வளர்ப்பாயாக. இப்படிப்பட்ட பிக்கு ஆனவர், பிறவிக் கடலைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

பிக்குவே! சிந்தித்துப்பார். அசட்டையாயிராதே. காம எண்ணங்களில் உன் மனத்தைச் சுழல விடாதே. அசட்டைத்தனத்தினாலே, பழுக்கக் காய்ந்த நெருப்பைக்கக்கும் இரும்பு உருண்டை களை விழுங்காதே. அது சுடும்போது 'இது துக்கம்' என்று கதறாதே.

ஞானம் (அறிவு) இல்லாதவருக்குத் தியானம் (மன அடக்கம்) இல்லை. தியானம் இல்லா வருக்கு ஞானம் இல்லை. யார் தியானமும் ஞானமும் உள்ளவரோ அவர், மோக்ஷத்தின் அருகில் இருக்கிறார்.

ஏகாந்த இடத்தில் வசித்து, மன அமைதி பெற்று, உலகத்தின் உண்மை நிலையைக் காண்கிற, நற்காட்சி அடைந்துள்ள பிக்கு ஆனவர், மனிதரால் காண முடியாத இன்பத்தை அடைகிறார்.

ஸ்கந்தங்களின் வளர்ச்சி, வீழ்ச்சிகளை எவ்வளவு நன்றாகச் சிந்தித்துப் பார்க்கிறாரோ அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அடைகிறார். இதையறிந்தவர் பிறவாத் தன்மை அடைகிறார்.

பிக்குகளுக்கு அடிப்படையான வாய்மொழி இதுவாகும்: இந்திரியங்களை அடக்கு. திருப்தியாக இரு. (வினயபிடகத்தில் கூறப்பட்ட) பாதிமோக்க ஒழுக்கங்களைத் தவறாமல் நடத்து, ஊக்கத் தோடு இரு. தூய வாழ்க்கையுள்ளவரோடு நட்புக் கொள். வினயமாகவும் அன்பாகவும் இருக் கிறவர், மன மகிழ்ச்சியோடு துக்கத்தை நீக்குகிறார்.

ஓ பிக்குகளே! மல்லிகைச் செடி வாடிய பூவை உதிர்த்து விடுவது போல, ஆசையையும் வெறுப் பையும் (ராகத்து வேஷங்களை) உதிர்த்து விடுங்கள்.

உடல் அடக்கம், வாக்கு அடக்கம், மன அடக்கம் உடையவராய், இவற்றில் நன்கு பயின்று பாவங்களை நீக்கினவர் யாரோ அவர் "உபசந்தர்" என்று கூறப்படுகிறார்.

பிக்குகளே! "நான்" என்கிறதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே நீக்குங்கள். பிறகு, நீங்களே உங்களைக் காத்துக்கொண்டு சுகமாக வாழ்வீர்கள்.

ஒருவர் தானே தனக்குப் புகலிடமாம். ஒருவர் தானே தனக்கு எதிர்கால வாழ்க்கையை நியமிக்கிறார். ஆகையினாலே, குதிரை வாணிகர் உயர்ந்த இனத்துக் குதிரையை அடக்குவது போல, நீ உன்னிடமுள்ள "நான்" என்பதை அடக்கு.

மன உவகையோடு புத்தருடைய தர்மத்தில் உறுதியான நம்பிக்கை உடைய பிக்குவானவர், துக்கங்களை அறுத்து இன்பமான சாந்தி நிலையை அடைகிறார்.

புத்தருடைய உபதேசங்களில் மனத்தைச் செலுத்துகிற இளைய பிக்குவானவர், மேகத் திலிருந்து வெளிப்பட்ட வெண்ணிலாவைப் போன்று, உலகத்தில் ஒளிவிட்டு விளங்குகிறார்.

26. பிராமண வர்க்கம்-பிராமணர்

பிராமணா! ஆசையாகிய வெள்ளத்தை முயற்சியோடு நீக்கி, காம இன்பங்களை அகற்றிவிடு.

ஸ்கந்தங்கள் முதலிய யாவும் அழிவுள்ளன என்பதை உணந்தவர் நிர்வாண மோட்சத்தை அடைகிறார்.

பிராமணன், இரண்டினையும் (யோகம், ஞானம்) நன்றாகச் செய்தால், அந்த அறிஞனுடைய பாசத் தளைகள் யாவும் மறைந்து விடுகின்றன.

யார் ஒருவருக்கு இந்தக் கரையும் அந்தக் கரையும் (புறப்புலன்கள் ஆறும், அகப்புலன்கள் ஆறும்) இல்லையோ, இருகரைகளும் இல்லாதவர் யாரோ, யார் புலன்களால் அசைக்கப் படாமல் இருக்கிறாரோ, யார் ஆசையை நீத்தாரோ அவரே பிராமணர் எனப்படுகிறார்.

யோகத்தில் இருந்து, குற்றங்களை நீக்கி, அமைதியாக இருந்து, கடமைகளைச் செய்து, காம இன்பங்களைத் துறந்து உயர்நிலையடைந்தவர் யாரோ அவரை, நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

பகலில் சூரியன் ஒளி கொடுக்கிறான். இரவில் நிலா வெளிச்சந் தருகிறது. போர் வீரன் கவசங்களினால் விளங்குகிறான். பிராமணன் தியானத்தினால் விளங்குகிறான். புத்தர், தமது ஞானத்தினாலே இரவும் பகலும் விளங்குகிறார்.

தீமைகளை நீக்கினவர் பிராமணன் ஆகிறார். நீதியாக நடக்கிறவர் சமணர் ஆகிறார். தன்னுடைய அழுக்குகளைத் (குற்றங்களைத்) தாமே நீக்கிக் கொண்டவர் பப்பஜிதர் ஆகிறார்.

யாரும் பிராமணனை அடிக்கக்கூடாது. அடிக்கப் பட்டாலும் பிராமணன் கோபிக்கக் கூடாது.

பிராமணனை அடிக்கிறவர் வெட்கப்பட வேண்டும். அடிக்கிறவனைக் கோபிக்கிற பிராமணனும் வெட்கப் பட வேண்டும்.

தன் மனதிற்குப் பிரியமானவற்றை (ஆசை எண்ணங்களை) நீக்குகிற பிராமணன், சிறிய நன்மையை அடையவில்லை. (பெரிய நன்மையை அடைகிறான்). இம்சை செய்யாமல் இருக்கிறவன், முழுமையாகத் துக்கத்திலிருந்து நீங்குகிறான்.

மனம், வாக்கு, காயங்களினால் தீய காரியங்களைச் செய்யாமல், இம்மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

புத்தர் உபதேசித்த தர்மோபதேசத்தை யாரிடத்திலாயினும் ஒருவர் கேட்டு அறிவாரானால், அவரை, பிராமணர் நெருப்பை வணங்குவதுபோல வணங்கவேண்டும்.

முடியைச் சடையாக வளர்ப்பதினாலோ, பிறப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர் பிராமணன் ஆக மாட்டார். யாரிடத்தில் உண்மையும், தர்மமும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர். அவர்தான் பிராமணர் ஆவார்.

ஓ தூர்த்தனே! உன்னுடைய சடைமுடியினால் பயன் என்ன? உன்னுடைய மான் தோலினால் பயன் என்ன? உன்னுடைய மனத்தில் (ஆசையாகிய) காடு இருக்கிறது. நீ புறத்தை மட்டும் (உடம்பை மட்டும்) சுத்தம் செய்கிறாய்.

கந்தைகளை ஆடையாக உடுத்து, உடல் மெலிந்து காட்டில் தன்னந்தனியே தியானம் செய்கிற அவரை நான் பிராமணன் என்று கூறுகிறேன்.

தாயின் வயிற்றில் கருவாகக்கிடந்து பிறக்கிறவரைப் பிராமணன் என்று கூறமாட்டேன்.

கிஞ்சனம் (செல்வம்) உடையவராக இருப்பதால் அவரை "ஐயன்" என்று அழைக்கலாம்.

பொருட்களின் மேல் பற்றுக்களை விட்டவர் யாரோ, ஆசையை விட்டவர் யாரோ அவரைப் பிராமணன் என்று அழைக்கிறேன்.

(கிஞ்சனம்-என்பதற்குச் செல்வம் என்றும் ஆசை என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இங்கு இச்சொல் சிலேடையாகக் கூறப்படுகிறது.)

ஆசைத் தளைகளை எல்லாம் அறுத்து அச்சம் இல்லாமல் இருக்கிறவர் யாரோ, எல்லாப் பற்றுக்களையும் நீக்கி உலக இச்சைகளை விட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

(பகை என்கிற) வாரையும் (ஆசை என்கிற) விலங்கையும் (நிந்தனை என்கிற) கயிற்றையும்(அஞ்ஞானம் என்கிற) தடைகளையும் அறுத்த ஞானியானவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

நிந்தனைகளையும் அடிகளையும் சிறையிடுவதையும் மனத்தாங்கல் இல்லாமல் பொறுத்துக் கொண்டு, பொறுமையையே தனது சேனையாகக் கொண்டுள்ளவர் யாரோ அவரையே பிராமணன் என்கிறேன்.

கோபத்தைவிட்டுத் தன் கடமையைச் செய்து, ஞானம் உள்ளவராய் ஆசையற்று அடக்கமாய் இருந்து, இதையே கடைசி உடம்பாகக் கொண்டிருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

தாமரை இலைமேல் தண்ணீர் போலவும், துரப்பணத்தின் (துளைப்பாணம்) நுனியில் கடுகைப் போலவும், காம சுகங்களில் பற்று விட்டவர் யாரோ அவரையே நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

தன்னுடைய (பாவச்) சுமைகளை உதறித்தள்ளி, உலகப் பற்றுக்களை நீக்கி, இப்பிறப் பிலேயே துக்கங்களை நீக்கிவிட்டவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

முழு ஞானம் பெற்ற அறிஞராகி, நன்மையும் தீமையுமான மார்க்கங்களை நன்கறிந்து, அரஹந்த நிலையை அடைந்தவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இல்லறத்தாரோடும் சந்நியாசிகளோடும் கலக்காமல், துறவறம் பூண்டு, தனக்கென்று ஒன்றையும் வேண்டாதவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

பொறுமை இல்லாதவரிடத்தில் பொறுமை உடையவராகவும், துன்பப்படுத்துகிறவர் இடத்தில் அன்புள்ளவராகவும், அவா உள்ளவர்கள் இடையே அவா அற்றவராகவும் யார் இருக்கிறாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

துரப்பணத்தின் (துளைப்பாணம்) நுனியிலிருந்து கடுகு நழுவிப் போவதைப் போன்று, சினம், பகை, இறுமாப்பு, பொறாமை ஆகிய தீய குணங்கள் யாரிடத்திலிருந்து போய்விட்டனவோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

உண்மைபேசி, இனிய வார்த்தைகளைச் சொல்லி, நல்லதைப் போதித்துக் கடுமொழி கூறாதவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இவ்வுலகத்திலே நீண்டதாயினும் குட்டையாயினும், பெரியதாயினும் சிறியதாயினும், நல்லதாயினும் கெட்டதாயினும் யாதொரு பொருளையும் களவு செய்யாதவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இவ்வுலகத்திலாயினும், மறு உலகத்திலாயினும் எதையும் விரும்பாமல், ஆசையற்றுப் பற்றுக்களை விட்டவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

அவாவை அறுத்து, மெய்யை உணர்ந்து ஐயங்களை நீக்கி, இறவாத நிலையை அடைந்தவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

புண்ணிய பாவங்களை விலக்கி, மாசுகளையும் துக்கங்களையும் துடைத்து, தூய்மையாக இருப்பவர் யாரோ அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

வெண்ணிலாவைப் போன்று தூய்மையராய் களங்கம் இல்லாமலும், பாவம் இல்லாமலும், அமைதியாகவும் இருந்து, பிறவியை உண்டாக்குகிற அவாவை அழித்தவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

பிறப்பு, இறப்பு என்னும் சம்சாரத்தையும் மோகத்தையும் உடைய, கடத்தற்கு அரிய இந்தச் சேற்று வழியைக் கடந்து அப்பாலே இருக்கிற, அந்தக் கரையைச் சேர்ந்து, தியானத்தில் அமர்ந்து, ஐயமும் ஆசையும் நீங்கி, ஒன்றிலும் பற்று இல்லாமல், நிர்வாண மோக்ஷத்தை அடைந்தவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இவ்வுலகத்திலே காம ஆசைகளை விட்டு, இல்லறத்தை நீங்கித் துறவுபூண்டு, பற்றுக்களை விட்டுப் பிறவாநிலையை அடைந்தவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இவ்வுலகத்திலே அவாவை (தண்ஹா ) நீக்கி, இல்லறத்தை விட்டுத் துறவு பூண்டு, ஆசையை அறுத்துப் பிறவா நெறியைக் கண்டவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

இவ்வுலகப் பற்றுக்களையும், தேவலோகப் பற்றுக்களையும், எல்லாவிதமான பற்றுக்களையும், யார் ஒருவர் நீக்கினாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

மகிழ்ச்சி துக்கம் இரண்டையும் நீக்கி, ஆறுதல் அடைந்து, பிறப்பினை உண்டாக்கும் பற்றுக்களை அழித்து, உலகத்தை வென்ற வீரனாக இருக்கிறவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

பிறப்பு இறப்புக்களின் தன்மையை எல்லாவிதத்தினாலும் நன்கறிந்து, எவ்விதப் பற்றுக்களும் இல்லாமல், நன்னெறியில் சென்று ஞானம் அடைந்தவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

தேவராலும் கந்தர்வராலும் மானிடராலும் அறிய முடியாத நிலைக்குச் செல்கின்றவரும், எல்லாக் குற்றங்களையும் அழித்துவிட்டவரும், அரஹந்தராக இருப்பவரும் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

முன்பும், பின்பும், இப்போதும் பற்றுக்கள் இல்லாமல், உலக ஆசைகளை விட்டுவிட்ட பற்றற்றவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

உயர்ந்தவரும், தலைவரும், வீரரும், பெரியவரும், வெற்றியுள்ளவரும், ஆசையற்றவரும், பாவங்களைப் போக்கினவரும், ஞானம் பெற்றவரும் ஆக இருப்பவர் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.

தன்னுடைய பழைய பிறப்புக்களை அறிந்தவரும், சுவர்க்க நரகங்களின் இயல்பை நன்கு அறிந்தவரும், பிறவி அறுத்தவரும், அறிவு நிறைந்தவரும், தம்மை முனிவராக்கிக் கொண்டவரும், பிரம்மசாரியாகச் செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்துமுடித்த வரும் யாரோ, அவரையே பிராமணன் என்று அழைக்கிறேன்.