Saṃyutta Nikāya 12

படச்ச சமுப்பாத விபங்க சூத்திரம்

1–2. சார்பிற்றோற்றம் (சார்பில் தோற்றம்) சூத்திரப் பகுப்பாய்வு

சாவத்தியில் தங்கியிருந்தபோது.."துறவிகளே நான் உங்களுக்குச் சார்பில் தோற்றம் பற்றிய கோட்பாட்டினைப் பகுப்பாய்ந்து கூறுகிறேன்.

"சார்பில் தோற்றம் என்றால் என்ன?

பேதைமை சார்வாகச் செய்கை வரும்.
செய்கை சார்வாக உணர்ச்சி உண்டாகிறது.
உணர்ச்சி சார்வாக வருவது அருவுரு ஆகும்.
அருவுரு சார்வாக வருவது வாயிலாகும்.
வாயில் சார்வாக வருவது ஊறாகும்.
ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்.
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்.
வேட்கை சார்ந்து பற்றாகும்.
பற்றில் தோன்றும் பவம்/கருமத் தொகுதி.
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்.
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் (துன்பம்) அரற்றுக் (புலம்புதல்) கவலை
கையாறெனத் (கையாறு - செயலறுகை, helplessness)
தவலில் துன்பந் தலைவரும். (மணிமேகலை 30)
இவ்வாறு எல்லாத் துக்கமும் தோன்றுகிறது."

"மூப்பு (aging), மரணம் (death) என்றால் என்ன?

வயோதிகம், முதுமைத் தளர்ச்சி, நரை மயிர், தோல் சுருக்கம், வாழ்வுச் சக்தி குறைதல், திறமைகளின் தளர்ச்சி - இவற்றை ஜீவன்கள் அணுபவிக்கும் போது அது மூப்பு எனப்படும். மரணமுறுந்தன்மை, மறைந்து போதல், உடைந்து போதல், இறத்தல், கால முடிவு, கந்தங்களின் சிதறல், வாழ்வுத் திறமைகளின் குறுக்கீடு, உடல் வீசப்படுதல்: இவை எல்லாம் ஜீவன்கள் மரணிப்பதைக் குறிக்கும்.

"பிறப்பென்றால் (தோற்றம், Jati – Birth) என்ன?

பிறப்பெடுத்தல், தோன்றுதல், இறங்குதல், கந்தங்கள் வெளிப்படுதல், புலன்களைப் பெறுதல்: இதுவே பிறப்பு என்பது.

"பவம் (Bhava – Becoming) என்றால் என்ன?

மூன்றுவிதமான பவங்கள் (பிறப்பு, ஆகுதல்) உண்டு. அவை அருவம் (formless), உருவம் (form), காமம் (sensual) என்பன. இவையே பவம் எனப்படும்.

"பற்றியிருத்தல்/தாங்கியிருத்தல் (Upadana – Clinging) என்றால் என்ன?

நான்கு வகையான பற்றுக்கள் உண்டு. அவை: புலன் இன்பங்கள் மீது பற்று, காட்சி/கருத்து மீது பற்று, ஒழுக்கங்கள்/பயிற்சி மீது பற்று மற்றும் சாரமிருப்பதாக உள்ள கருத்தின் மீது பற்று. இவையே பற்றென்பது.

"வேட்கை (Tanha – Craving) என்றால் என்ன?

ஆறுவகை வேட்கைகள் உண்டு. அவை: உருவங்கள் மீதுள்ள வேட்கை, சப்தங்கள் மீதுள்ள வேட்கை, வாசனையின் மீதுள்ள வேட்கை, சுவையின் மீதுள்ள வேட்கை, ஸ்பரிசம் மீதுள்ள வேட்கை, கருத்துக்கள் மீதுள்ள வேட்கை. இவையே வேட்கை எனப்படும்.

"நுகர்வு (Vedana – Feelings) என்றால் என்ன?

இவை ஆறும் நுகர்வு வகைகள்:

கண்ணின் தொடர்பினால் உண்டான நுகர்வு, காதின் தொடர்பினால் உண்டான நுகர்வு, மூக்கின் தொடர்பினால் உண்டான நுகர்வு, நாக்கின் தொடர்பினால் உண்டான நுகர்வு, உடலின் தொடர்பினால் உண்டான நுகர்வு, சித்தத் தொடர்பினால் உண்டான நுகர்வு. இவையே நுகர்வு எனப்படும்.

ஊறு (Phassa – Contact) என்றால் என்ன?

ஊறு ஆறு வகைகள் ஆகும்: கண்ணினால் உண்டாகும் ஊறு, காதினால் உண்டாகும் ஊறு, மூக்கினால் உண்டாகும் ஊறு, நாக்கினால் உண்டாகும் ஊறு, உடலினால் உண்டாகும் ஊறு, சித்தத்தினால் உண்டாகும் ஊறு. இவையே ஊறு என்பதாகும்.

"வாயில் (Salayatana – Six sense bases) என்றால் என்ன?

ஆறு வகையான வாயில்கள் உண்டு. அவை: கண் வழியான வாயில், காது வழியான வாயில், மூக்கு வழியான வாயில், நாக்கு வழியான வாயில், உடல் வழியான வாயில் மற்றும் சித்தம் வழியான வாயில். இவையே ஆறு வகையான வாயில்களாகும்.

"அருவுரு (nama-rupa – mind and matter) என்றால் என்ன?

நுகர்வு, கருத்து, நோக்கம், தொடர்பு மற்றும் கவனம். இவையே நாமம். நான்கு பூதங்களும், அவற்றைச் சார்ந்துள்ள உருவமுமே ரூபம் என்பது. இந்த நாமமும் ரூபமுமே நாம - ரூபம் அல்லது அருவுரு எனப்படும்.

"உணர்வு (viññana – rebirth consciousness) என்றால் என்ன?

ஆறுவகை உணர்வுகள் உள்ளன: கண்-உணர்வு, காது-உணர்வு, மூக்கு-உணர்வு, நாக்கு-உணர்வு, உடல்-உணர்வு, சித்த-உணர்வு. இவையே உணர்வுகளாகும்.

"செய்கை (கட்டுமானங்கள், Sankhara – Kammic formations) என்றால் என்ன?

மூன்று விதமான செய்கைகள் உண்டு: உடல் செய்கை, மொழிச் செய்கை மற்றும் மனச் செய்கை. இவையே செய்கைகளாம்.

"பேதமை (Avijja – Ignorance) என்றால் என்ன?

துக்கம் பற்றித் தெரியாமல் இருப்பது. அது தோன்றக் காரணத்தையும், அதன் முடிவையும், முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தைப் பற்றியும் தெரியாமல் இருப்பது. இதுவே பேதமை.

"பேதமை மீளச் செய்கை மீளும்,
செய்கை மீள உணர்ச்சி மீளும்,
உணர்ச்சி மீள அருவுரு மீளும்,
அருவுரு மீள வாயில் மீளும்,
வாயில் மீள ஊறு மீளும்,
ஊறு மீள நுகர்ச்சி மீளும்,
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்,
வேட்கை மீளப் பற்று மீளும்,
பற்று மீளக் கருமத் தொகுதி மீளும்,
கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும்,
தோற்றம் மீளப் பிறப்பு மீளும்,
பிறப்புப் பிணி மூப்புச் சாக்கா டவலம்
அரற்றுக் கவலை, கையா றென்றிக்
கடையில் துன்பம் எல்லாம் மீளும். (மணிமேகலை 30)
இவ்வாறு எல்லாத் துக்கங்களும் மறைந்து விடும்.