Saṃyutta Nikāya 21

தேரானாமோ சூத்திரம்

10. தேரானாமோ

சிராவஸ்தி நகரில் ஜெதா வனத்து விகாரையில் தங்கியிருந்த போது பகவான் புத்தர் கூறிய இவ்வார்தைகளை நான் கேட்டேன். அச்சமயத்தில் தேரா (பெரியவர்) என்கிற ஒரு துறவி எப்போதும் தனித்து வாழ விரும்புபவராக இருந்தார். முடியும் போதெல்லாம் தனித்து வாழும் வழக்கத்தைப் புகழ்ந்து பேசினார். உணவுப் பிச்சை ஏற்பதற்கும் தனியாகவே சென்றார். தியானம் செய்யும் போதும் தனியாகவே செய்தார்.

ஒரு முறை சில பிக்குகள் பகவரைப் பார்க்க வந்தனர். அவர் பாதங்களை வணங்கி அவருக்கு மரியாதை செலுத்திய பின் ஒருபுறம் ஒதுங்கிச் சற்று தூரத்தில் அமர்ந்து அவரிடம், 'பகவரே, தேரா என்னும் பெரியவர் எப்போதும் தனித்தே வாழ விரும்புகிறார். தனித்து வாழும் வழியைப் புகழ்கிறார். உணவு கேட்கக் கிராமத்துக்குத் தனியாகவே செல்கிறார், கிராமத்திலிருந்து தனது குடிலுக்குத் தனியாகவே திரும்புகிறார். தியானத்திலும் தனியாகவே அமர்கிறார்.' என்றனர்.

பகவர் அந்த பிக்குகளுள் ஒருவரிடம், 'தேரா வாழும் இடத்துக்குச் சென்று நான் அவரைப் பார்க்க விரும்புவதாக அவரிடம் கூறவும்,' என்று கேட்டுக் கொண்டார்.

அந்தப் பிக்குவும் அவ்வாறே தேராவிடம் பகவர் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தேரா என்கிற துறவி பகவர் தன்னைப் பார்க்க விரும்புவதாகக் கேள்விப் பட்டவுடன் தாமதிக்காமல் வந்து புத்தர் காலடியைத் தொட்டு வணங்கி, ஒருபுறமாக ஒதுங்கிச் சற்று தூரத்தில் அமர்ந்தார். புத்தர் தேரா என்கிற துறவியைக் கேட்டார், 'நீங்கள் தனிமையில் இருக்க விரும்புவதும், தனியாக வாழும் வாழ்வைப் புகழ்வதும், உணவுப் பிச்சை கேட்கத் தனியாகச் செல்வதும், கிராமத்திலிருந்து தனியாகத் திரும்பி வருவதும், தனியாகத் தியானம் செய்வதும் உண்மையா?' என்று கேட்டார்.

துறவி தேரா, 'உண்மை தான் பகவரே,' என்று பதிலளித்தார்.

புத்தர் அந்தத் துறவியை மேலும் கேட்டார், 'நீங்கள் எவ்வாறு தனியாக வாழ்கின்றீர்கள்?'

தேரர், 'நான் தனியாக வாழ்கின்றேன். என்னுடன் வேறு எவரும் வாழவில்லை. தனியாக வாழ்வதை நான் புகழ்கின்றேன். தனியாகவே உணவு கேட்கச் செல்வேன். தனியாகவே கிராமத்திலிருந்து திரும்பி வருவேன். தியானத்தில் அமரும் போதும் தனியாகவே உட்காருவேன். அவ்வளவு தான்.' என்று பதிலளித்தார்.

புத்தர் இவ்வாறு அந்தத் துறவிக்குப் போதித்தார்: "உங்களுக்குத் தனியாக வாழ்வது பிடித்திருப்பதில் சந்தேகம் இல்லை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் தனியாக வாழ ஒரு அருமையான வழி இருக்கின்றது என்பதைப் பற்றி உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். ஆழமாகப் பிரதிபலித்து, கடந்தது இனிமேல் இல்லை என்பதையும், வருவதும் இன்னும் வரவில்லை என்பதையும், பற்றில்லாமல் நிகழ் காலத்தில் சஞ்சலமில்லாமல் அமைதியோடு வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒருவர் வாழ்ந்தால் அவரது உள்ளத்தில் எந்தத் தயக்கமும் இருக்காது. எல்லாக் கவலைகளையும் வருத்தங்களையும் மறந்து விட்டு, பற்றுள்ள ஆசைகளையும் விட்டுவிட்டால் நாம் சுதந்திரமாக வாழத் தடையாக இருக்கும் மாசுகளைத் துண்டித்து விடலாம். இதுவே 'தனியாக வாழும் சிறந்த முறை' ஆகும். இதைவிடத் தனியாக வாழச் சிறந்த வழியே இல்லை."

பின் பகவர் பா வடிவில் இவ்வாறு கூறினார்:

வாழ்வை ஆழ்ந்து கவனிப்பதால்
உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள முடியும்.
எதற்கும் அடிமையாகாமல்
எல்லாப் பற்றுகளையும் ஒதுக்கி விடலாம்.
இதன் விளைவு: அமைதியான பிரகாசமான வாழ்வாகும்.
இதுவே தனித்து வாழச் சிறந்த வழி.

பகவரின் இவ்வார்தைகளைக் கேட்ட துறவி தேரர் ஆனந்தப் பட்டார். பகவரை மரியாதையுடன் வணங்கிய பின்னர் அவர் தன் இருப்பிடம் திரும்பினார்.