Saṃyutta Nikāya 35
28. எல்லாம் எரிகிறது!
நான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது . புத்தர் ஒரு முறை கயா நகரில் கயாஸிஸ என்ற இடத்தில் ஆயிரம் பிக்குமார்களோடு தங்கியிருந்தார். புத்தர் அந்தப் பிக்குமார்களிடையே உரை நிகழ்த்தினார்.
'பிக்குகளே, எல்லாம் எரிகிறது. எவையெல்லாம் எரிகிறது?
'பிக்குகளே, கண்கள் எரிகின்றன. கண்ணுக்குத்தெரியக்கூடிய உருவங்கள் எரிகின்றன. பார்வைக்குச் சம்பந்தமான உணர்வும் எரிகிறது. பார்வைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. பார்வைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன.
எதனோடு எரிகிறது?
பேராசையென்ற தீயோடு எரிகிறது. வெறுப்பு என்ற தீயோடு எரிகிறது. அறியாமை என்ற தீயோடு எரிகிறது. நான் சொல்கிறேன். பிறப்போடு எரிகிறது, மூப்போடும் மரணத்தோடும் எரிகிறது. சோகத்தோடு எரிகிறது, புலம்பலோடும், வேதனையோடும், துயரத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் எரிகிறது.
'காது எரிகிறது. ஒலியும் எரிகின்றது. செவிக்குச் சம்பந்தமான உணர்வும் எரிகிறது. செவிக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. செவிக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன. எதனோடு எரிகிறது? பேராசையென்ற தீயோடு எரிகிறது. ......
'மூக்கு எரிகிறது. வாசனையும் எரிகின்றது. வாசனைக்குச் சம்பந்தமான உணர்வும் எரிகிறது. வாசனைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. வாசனைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன. எதனோடு எரிகிறது? பேராசையென்ற தீயோடு எரிகிறது. ......
'நாக்கு எரிகிறது. சுவையும் எரிகின்றது. சுவைக்குச் சம்பந்தமான உணர்வும் எரிகிறது. சுவைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. சுவைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன. எதனோடு எரிகிறது? பேராசையென்ற தீயோடு எரிகிறது. ......
'உடல் எரிகிறது. தொடுவதால் உணரத்தக்க பொருட்களும் எரிகின்றன. தொடக்கூடியவை சம்பந்தமான உணர்வும் எரிகிறது. தொடக்கூடியவை சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. தொடக்கூடியவை சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன. எதனோடு எரிகிறது? பேராசையென்ற தீயோடு எரிகிறது. ......
'மனம் எரிகிறது. மனதில் எழும் கருத்துகளும் (எண்ணங்கள் போன்றவை..) எரிகின்றன. மனம் சம்பந்தமான உணர்வும் எரிகிறது. மனம் சம்பந்தமான மனதின் எண்ணங்களும் எரிகின்றன. மனதுக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழும் மனதுக்கினிய உணர்ச்சிகளும், மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளும் இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளும் எரிகின்றன. எதனோடு எரிகிறது? பேராசையென்ற தீயோடு எரிகிறது. வெறுப்பு என்ற தீயோடு எரிகிறது. அறியாமை என்ற தீயோடு எரிகிறது. நான் சொல்கிறேன் பிறப்போடு எரிகிறது, மூப்போடும் மரணத்தோடும் எரிகிறது. சோகத்தோடு எரிகிறது, புலம்பலோடும், வேதனையோடும், துயரத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் எரிகிறது.
பிக்குக்களே, இதை அறிந்து கொள்ளும் படித்த மேன்மையான சீடர் கண்களுடன் பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். உருவங்களுடன் பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். பார்வைக்குச் சம்பந்தமான உணர்வுடன் பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். பார்வைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களுடன் பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். மேலும் பார்வைக்குச் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழக்கூடிய உணர்ச்சிகளோடு - அவை மனதுக்கினிய உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி, மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி - பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார்.
அவர் காதோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். ஒலியோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். ...
அவர் மூக்கோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். நறுமனத்தோடு ...
அவர் நாக்கோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். சுவையோடு ...
அவர் உடலோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். தொட்டு உணரத்தக்க பொருட்களோடு ....
அவர் மனதோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். மனக் கருத்தோடு பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். பார்வைக்குச் சம்பந்தமான உணர்வுடன் பட்ச பாதமில்லா தவராக இருக்கின்றார். மனம் சம்பந்தமான மனதின் எண்ணங்களுடன் பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார். மேலும் மனம் சம்பந்தமான மனதின் எண்ணங்களால் எழக்கூடிய உணர்ச்சிகளோடு - அவை மனதுக்கினிய உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி, மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி இவ்விரண்டும் அல்லாத உணர்ச்சிகளாக இருந்தாலும் சரி - பட்ச பாதமில்லாதவராக இருக்கின்றார்.
'பட்ச பாதமில்லாமல் இருக்கும் அவர், பற்றில்லாமல் இருக்கின்றார். பற்றில்லாமல் இருப்பதால் விடுதலை பெறுகிறார். விடுதலை கண்ட அவர் விடுதலை பெற்று விட்டதை அறிவால் உணர்கிறார். அவருக்குத் தெரியும்: பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.'
இப்படிப் புத்தர் கூறினார். கேட்ட பிக்குக்கள் மகிழ்வுற்றனர். போதனையைக் கேட்ட ஆயிரம் பிக்குமார்களும் பற்றறுத்து மனத் தீமைகளிலிருந்து விடுதலை பெற்றனர்.
முற்றும்
சில விளக்கங்கள்:
புத்தர் அவர் ஞானத்தின் பின் தந்த மூன்றாவது போதனை.
இங்கு பிக்குக்கள் என்று புத்தர் கூறுவது அவரது சீடர்களை அல்ல. யாகம் செய்து அக்கினியைக் கும்பிடும் சந்நியாசிகளை. அப்படிக் கும்பிடுவதால் உள்ளத் தூய்மை பெறுவதாகவும் நம்பினார்கள். அக்கினியைக் கும்பிடுவோருக்குத் தர்மத்தை எப்படி எடுத்துக் கூறுவது? திறமைமிக்க ஆசிரியரான புத்தர் நெருப்பு அடங்கிய உவமானத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தர்மத்தைத் தெளிவாக்குகிறார்.
கண்ணும் (eye), உருவமும் (visible form) இருப்பதால் அதன் ஆதரவில் பார்வை சம்பந்தமான உணர்வு (visual consciousness) தோன்றுகிறது. இவை மூன்றும் சேரும் போது பார்வை சம்பந்தமான மனதின் எண்ணங்கள் (visual contact) உருவாகிறது. இதன் காரணமாகத் தோன்றுவது உணர்ச்சிகள். அவை மூன்று வகை. பிடித்த (pleasant), பிடிக்காத (unpleasant), இரண்டும் அல்லாத (neither pleasant nor unpleasant i.e. neutral) உணர்ச்சிகள். இது போலவே மற்ற ஐந்து புலன்களின் காரணமாகத் தோன்றும் உணர்ச்சிகள்.
தீமைக்கு மூல காரணம் மூன்று - பேராசை, வெறுப்பு, அறியாமை. இவை மூன்றும் 'மூன்று நெருப்புகள்' என்றும் கூறப்படுகின்றன.
பிறப்பு, மூப்பு, மரணம். சோகம், புலம்பல், வேதனை, துயரம், மனச்சஞ்சலம் - இவை எல்லாம் துக்கத்தை விளக்கும் சொற்கள். அவை துக்கத்தோடு எரிகிறது என்றும் சுருக்கமாகச் சொல்லலாம்.