சுத்த நிபாதம் 1.4

காசி பரத்வாஜன் சூத்திரம்: ஏர் ஓட்டும் பரத்வாஜன்

ஒரு சமயம் ஆசீர்வதிக்கப்பட்டவர் மகத மக்களிடையே தக்கிநகரி என்ற இடத்தில் பிராமண கிராமமான ஏகானலாவில் வாழ்ந்து வந்ததாக நான் கேள்வியுற்றேன். அச்சமயம் காசி பரத்வாஜன் என்ற பிராமணனின் சுமார் 500 ஏர்கள் நுகத்தடியில் பூட்டப்பட்டிருந்தன. அது விதை விதைக்கும் காலம். அப்போது அதிகாலையில் தன் கீழ் சீவர ஆடையை அணிந்து கொண்டு பிச்சாபாத்திரத்துடனும் (மேல்) ஆடைகளுடனும், அண்ணல் காசி பரத்வாஜன் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அச்சமயம் காசி பரத்வாஜனின் உணவு விநியோகம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆக அண்ணல் அந்த உணவு விநியோகம் நடைபெறும் இடத்திற்குச் சென்று ஒருபுறமாக ஒதுங்கி நின்றார். காசி பரத்வாஜன் அண்ணல் உணவுக்காக நின்றிருப்பதைக் கவனித்து அவரிடம்: “தியானியே, நான் ஏர் ஓட்டி விதை விதைக்கின்றேன். பின் உண்கிறேன். தியானி நீங்களும் ஏர் ஓட்டி விதைக்க வேண்டும். ஏர் ஓட்டிய பின், விதை விதைத்த பின் நீங்கள் உண்ணலாம்.”

“பிராமணா, நானும் ஏர் ஓட்டி விதை விதைக்கின்றேன். ஏர் ஓட்டிய பின், விதைத்த பின், நான் உண்கிறேன்.”

“ஆனால், தியானியே, கோதமரிடம் நுகத்தடி அல்லது ஏர், ஏர்க்கயிறு, தார்க்கோல், எருதுகள் எதுவும் காணவில்லையே. இருந்தும் கோதமர் இவ்வாறு கூறுகின்றீரே:

‘நானும், பிராமணனே ஏர் ஓட்டி விதை விதைக்கின்றேன். ஏர் ஓட்டிய பின் விதைத்தபின் உண்கிறேன்.’”

பின் காசி பரத்வாஜன் கவிதை வடிவில் அண்ணலிடம் கூறியதாவது:

ஏர் ஓட்டுபவன் [விவசாயி] என்கின்றீர்,
ஆனால் ஓட்டுவதை நான் பார்க்கவில்லை.
உங்கள் ஏர் ஓட்டத்தைப் பற்றிக் கூறுங்கள்
பின் நாங்களும் அதைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.

புத்தர்:
நம்பிக்கை தான் என் விதை,
பயிற்சி என் மழை,
விவேகம் என் நுகத்தடியும் ஏருமாகும்,
அடக்கம் என் கம்பு,
மனம் என் தொடுவான்,
கடைப்பிடி என் ஏர்க்காலும் தார்க்கோலுமாம்.
உடலைக் கண்காணித்து,
மொழியைக் கண்காணித்து,
மிதமான உணவும் பானமும் அருந்தி,
வாய்மையை ஒரு களை பிடுங்கும் கருவியாக்கி,
நிதானமே என்னை நுகத்தடியிலிருந்து விடுவிக்கும்.
விடாமுயற்சியே என் எருது,
என்னை நுகத்தடியின் கட்டிலிருந்து ஓய்வு தர [பாதுகாப்பிற்கு] எடுத்துச் செல்கிறது,
பின் வாங்காமல் முன் நோக்கி எடுத்துச் செல்கிறது,
போகும் இடத்திற்குப் போனபின்
வருந்துவதில்லை.
அப்படித்தான் நான் ஏர் ஓட்டுகிறேன்.
அதன்
பழம் தான்
சாவற்ற நிலை.
இப்படி உழுதவன்
நுகத்தடியிலிருந்து விடுவிக்கப் படுகிறான்
எல்லாத் துக்கத்திலிருந்தும்
அழுத்தங்களிலிருந்தும்
விடுபடுகிறான்.

பின் காசி பரத்வாஜன், பால் சோற்றை ஒரு பெரும் வெங்கலப் பாத்திரத்தில் இட்டு, அண்ணலுக்குக் கொடுக்க முன்வந்தார். [வந்தவர் கூறியது] “அண்ணல் கோதமர் இந்தப் பால் சோற்றை உண்பாராக. அண்ணல் ஏர் ஓட்டுபவர். ஏனென்றால் அவர் உழுததால் கிடைத்த பழம் தான் சாவற்ற நிலை.”

புத்தர்:

மந்திரம் சொல்லப்பட்ட உணவை
நான் உண்ணக் கூடாது.
அது இயற்கையல்ல பிராமணா,
சரியாகப் பார்த்தவனுக்கு.
மந்திரம் சொல்லப்பட்டதை
விழிப்புற்றவர் [புத்தர்] நிராகரிப்பார்.
அவர்கள் இயற்கை குணம் அது, பிராமணா,
அவர்கள் வாழ்வுமுறை அது.
மாற்று [மந்திரம் சொல்லப்படாத] உணவையும் பானங்களையும்
முழுவதும் தூய்மையான மாமுனிக்குத்
தன் கவலைகள் முடித்த ஒருவருக்கு [கொடுங்கள்],
புண்ணியம் தேடுபவருக்கு
அதுவே நல்ல சந்தர்ப்பம்.

“பின் கோதமரே, யாருக்குத் தருவது இந்தப் பால் சோற்றை?”

“பிராமணா, இந்த உலகில் அப்படிப் பட்டவரை நான் காணவில்லை—தேவர்களும், மாரர்களும், பிரமர்களும், இந்தத் தலைமுறையில் அரச குடும்பத்தினரும் சாதாரண மக்களும்—இந்தப் பால் சோற்றைச் சாப்பிட்டுச் சரியாகச் சீரணிக்கக் கூடிய எவரும் இல்லை, ஒரு ததாகதர் அல்லது அவரது சீடர்களைத் தவிர. அதனால் பிராமணா ஏதும் விளையாத [புல்லும் இல்லாத] ஓர் இடத்தில் இந்த பால் சோற்றை எறிந்து விடு அல்லது எந்த உயிரும் வாழாத நீரில் கொட்டிவிடு.”

எனவே காசி பரத்வாஜன் பால் சோற்றை உயிரினம் வாழாத நீரில் கொட்டினான். அந்தப் பால் சோறு நீரில் கொட்டப் பட்டதும், நீர் சீறி உஸ்ஸென்று சப்தத்துடன் கொதித்தெழுந்து அதிலிருந்து ஆவி பறந்தது. ஒரு இரும்புப் பந்து நாள் முழுதும் சூடாக்கப்பட்டு நீரில் போடப்பட்டால் எப்படி அந்த நீர் சீறி உஸ்ஸென்று சப்தத்துடன், கொதித்தெழுந்து ஆவி பறக்குமோ அதே போலப் பால் சோறும் நீரில் போட்டவுடன் சீறி உஸ்ஸென்று சப்தத்துடன், கொதித்தெழுந்து அந்த நீரிலிருந்து ஆவி பறந்தது.

பின் காசி பரத்வாஜன்—வியந்து மயிர் சிலிர்க்க—அண்ணலிடம் சென்று அவர் பாதங்களில் விழுந்து அவரிடம்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற இல்லற சீடராக நினைவில் கொள்வாராக. கோதமர் முன்னால் நான் துறவு பூண விரும்புகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள்.”

பிராமணர் காசி-பரத்வாஜா புத்தர் முன்னிலையில் சங்கத்தில் அனுமதிக்கப் பட்டார். துறவியாகிச் சில காலத்திலேயே—தனிமையுடனும், விலகியும் வாழ்ந்து, ஊக்கமுடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும்—விரைவிலேயே பிரமச்சாரிய வாழ்வின் மேன்மையான நோக்கத்தை அடைந்தார். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவரது உயர்ந்த அறிவினால் அவருக்கு அப்போதே அங்கேயே தெரிந்தது: ‘பிறப்புத் தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாக உலகில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.’ இவ்வாறு போற்றுதலுக்குரிய பரத்வாஜாவும் ஒரு ஞானி ஆனார்.