சுத்த நிபாதம் 1.5

சுண்டா சூத்திரம்: சுண்டனுக்கு

சுண்டன் என்ற தட்டான்:
“ஏக மெய்ஞ்ஞானம் கொண்ட முனிவரைக் கேட்கிறேன்,
விழிப்புற்றவர், தன்மத் தலைவன்,
வேட்கையிலிருந்து விடுபட்டவர்,
இரண்டு கால் ஜீவன்களுள் மேன்மையானவர்,
சிறந்த தேரோட்டி:
“எத்தனை வகையான சமணர்
உலகில் உள்ளனர்?
தயவு செய்து கூறுங்கள்.”

புத்தர்:
“நான்கு சமணர்கள், சுண்டா. ஐந்தாவது இல்லை.
நேரடியாகக் கேட்டமையால், விளக்கிக் கூறுகிறேன்:
மார்க்கத்தில் வெற்றி பெற்றவர்,
மார்க்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்,
மார்க்கவழி நடப்பவர் மற்றும்,
மார்க்கத்தைக் கறைப்படுத்துபவர்.”

சுண்டன்:
“விழிப்புற்றோர் யாரை
மார்க்கத்தில் வெற்றி பெற்றவர் என்பார்கள்?
மார்க்கத்தைக் கற்பிக்கும் தன்னிகரில்லா ஆசிரியர் யார்?
மார்க்கவழி நடப்பவர் யார்?
மார்க்கத்தைக் கறைப்படுத்துபவர் யார்?”

புத்தர்:
“அவர் குழப்பத்தைக் கடந்து விட்டவர்,
தைத்த அம்பை எடுத்து விட்டவர்,
கட்டு நீங்கியதனால் பெருமகிழ்ச்சி அடைந்தவர்,
அவாவிலிருந்து விடுபட்டவர்,
தேவர்களும் உள்ள உலகின் தலைவர்:
இப்படிப்பட்டவரை
விழிப்புற்றோர்
மார்க்கத்தில் வெற்றி
பெற்றவர் என்பார்கள்.

“இவர் முதன்மையானதை முதன்மையானது என்று அறிவார்,
இவருக்கு அறத்தைப் பகுப்பாய்வு செய்து காட்டத் தெரியும்,
அப்படிப்பட்ட முனிவர், சந்தேகங்களைத் தீர்ப்பவர், நிதானமானவர்:
அவர் துறவிகளுள் இரண்டாமவர்,
மார்க்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்.

நற் கடைப்பிடியுள்ளவர், அடங்கியிருப்பவர்,
சிறப்பாகக் கற்பிக்கப்பட்ட தன்மக்கோட்பாடுகளை,
மார்க்கத்தை,
எவையெல்லாம் தடங்களில்லாமல் உள்ளதோ, அவற்றைப் பின்பற்றுபவர்
அவர் துறவிகளுள் மூன்றாமவர்,
மார்க்கவழி நடப்பவர்.

நல்ல பண்புகளைக் கடைப்பிடிப்பவர் போலப்
பாசங்கு செய்து,
தற்பெருமை அடித்துக் கொண்டு, குடும்பங்களைக் கெடுத்து,
மற்றவர் செயல்களில் தலையிட்டு
ஏமாற்றி, தன்னடக்கம் இல்லாமல்,
மதிப்பற்ற வேஷமிட்டுச் சுற்றுபவர்:
அவரே மார்க்கத்தைக் கறைப்படுத்துபவர்.

இவற்றை அறிந்த இல்லறத்தார்
—மேன்மையானோரின் விவேகமுள்ள சீடர்—
எல்லாத் துறவிகளும் ஒன்றல்ல
என்று அறிந்தவர்,
இதைத் தெரிந்தவர், அவரது நம்பிக்கை கெடுவதில்லை.
ஏனென்றால்
கெட்டுப்போனவரும் கெடாதவரும்,
தூய்மையற்றவரும் தூய்மையானவரும்
எப்படிச் சம நிலையில் இருக்க முடியும்?