சுத்த நிபாதம் 1.6

பராபவ சூத்திரம்: வீழ்ச்சி

நான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது. ஒரு முறை போற்றப்பட்டவர் (புத்தர்) சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார்.

இரவு பல நாளிகைகள் கழிந்த பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரன், புத்தபகவானை அணுகி அவரை மரியாதையுடன் வணங்கி ஒருபுறமாக நின்றான். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.

தேவன்:

போற்றப்பட்டவருக்குக் கேள்விகளுடன் வந்துள்ளோம்! கோதமரே மனிதனின் வீழ்ச்சியைப் பற்றிக் கேட்கிறோம். தயவு செய்து வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறவும்!

புத்தர்:

1. முன்னேற்றம் அடைபவனைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். வீழ்ச்சி அடைபவனையும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். அறத்தை விரும்புபவன் முன்னேறுகிறான். அறத்தை வெறுப்பவன் வீழ்ச்சி அடைகிறான்.

தேவன்:

இதை நாம் அறிவோம்: வீழ்ச்சிக்கான முதற்காரணம் இதுவே. தயவு கூர்ந்து இரண்டாம் காரணத்தைக் கூறவும்.

புத்தர்:

2. தீயவர்கள் அவன் அன்புக்குரியவர்களாக உள்ளனர். ஒழுக்கமுள்ளவர்களைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைவதில்லை. தீயவர்களின் நம்பிக்கைகளையே விரும்புகிறான்—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

3. தூக்கத்தை விரும்புகிறான், கூட்டத்தை விரும்புகிறான், சுறுசுறுப்பற்றவன், சோம்பேரி, சுலபமாக எரிச்சலடைபவன்—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

4. வசதியிருந்தும் தந்தை தாயை அவர்கள் வயதான காலத்தில், அவர்கள் இளமை தாண்டிய பின்பு ஆதரிப்பதில்லை—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

5. ஒரு பிராமணனை அல்லது சன்னியாசியை அல்லது வேறு ஒரு துறவியைப் பொய் சொல்லி ஏமாற்றுவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

6. நிறையச் சொத்திருந்தும், ஏராளமான பொன்னும், உணவும் வைத்திருந்தும் ஆடம்பர வாழ்வைத் தான் மட்டும் தனியாக அனுபவிப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

7. பிறப்பை அல்லது செல்வத்தை அல்லது குலத்தைப் பற்றிப் பெருமைப் படுவது, ஒருவன் தன் உறவினர்களை இழிவு படுத்துவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

8. பெண்ணாசை கொள்வது (முறைதவறி நடப்பது), குடிகாரனாக இருப்பது, சூதாடுவது, சம்பாத்தியத்தை வீணாக்குவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

9. தன் மனைவியோடு இல்லற வாழ்வில் திருப்தி அடையாமல், விலைமாதர்களுடனும் மற்றவர் மனைவிகளுடனும் காணப்படுவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

10. இளமை தாண்டிய பின்னர், இளம் பெண்ணை மணம் புரிந்து கொண்டு பின் அவளின் மீது பொறாமையின் காரணமாக [தன்னைவிட ஒரு இளைஞனை விரும்புவாளோ என்ற எண்ணத்தினால்] தூங்க முடியாமல் தவிப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

11. குடிப்பழக்கம் கொண்ட, ஊதாரித்தனமாக நடந்து கொள்ளும் ஒரு பெண்ணை அதிகார பதவியில் நியமிப்பது அல்லது அதே பண்புகள் கொண்ட ஒரு ஆணை அதிகாரப் பதவியில் வைப்பது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

12. வசதி இல்லாத போதும் அதீத ஆசை கொள்வது, சத்திரிய குலத்தில் பிறந்து சுயநலத்தின் காரணமாக (எட்டாத) அரசாட்சியை வெல்ல ஏங்குவது—ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

உலகில் வீழ்ச்சிக்கான இந்தக் (பன்னிரண்டு) காரணங்களை நன்கு அறிந்த மேன்மையான முனிவன் ஞானத்தோடு மகிழ்ச்சியான நிலையில் (நிப்பாண நிலையில்) வாழ்கிறான்.