சுத்த நிபாதம் 1.7

வசல சூத்திரம்: இழிகுலத்தார் பற்றிய போதனை

நான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது:

ஒரு முறை புத்த பகவான் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார். பின் முற்பகலில் பகவர் சீவர ஆடைகளை அணிந்து கொண்டு, பிச்சா பாத்திரத்துடனும் (இரட்டை) மேலாடையுடனும் சாவத்தி நகருக்குள் உணவு கேட்பதற்குச் சென்றார். அச்சமயம் பிராமணன் அக்கிகாபரத்வாஜன் வீட்டில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவன் வீட்டில் படைப்புக்காக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது புத்த பகவான் உணவுக்காக வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தவர், அந்த அந்தணன் வீட்டுக்கு வந்தார். பகவரைத் தூரத்திலிருந்து பார்த்த அந்தணன் இவ்வாறு கூறினான்: “அங்கேயே இரு, தலை மழித்தோனே, தரித்திரத் துறவியே அங்கேயே நில், இழிகுலத்தானே அங்கேயே நில்.”

இவ்வாறு பேசிய அந்தணனிடம் புத்த பகவான் இவ்வாறு கூறினார்: “உங்களுக்குத் தெரியுமா இழிகுலத்தார் யாரென்று, என்ன காரணங்களால் ஒருவன் இழிகுலத்தானாவது என்று?”

“இல்லை. தெரியாது. போற்றுதற்குரிய கோதமரே. இழிகுலத்தார் யாரென்றும் இழிகுலத்தார் ஆவதற்கான காரணமும் தெரியாது. அறத்தைக் கோதமர் எனக்கு விளக்கினால் நல்லது. பின் நான் இழிகுலத்தார் யார் என்பதையும் இழிகுலத்தார் உண்டாவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வேன்.”

“கேள் அந்தணரே. கவனமாகக் கேளுங்கள், நான் கூறுகிறேன்.”

“சரி, போற்றுதலுக்குரிய ஐயா,” என்று அந்தணன் பதிலளித்தான்.

“கோபப்படுபவன், உள்ளத்தில் வெறுப்பை வைத்திருப்பவன், மற்றவரைப் பற்றி நல்லதைப் பேசத் தயங்குபவன் (மற்றவர் செய்த நல்ல செய்திகளைக் குறைப்படுத்திப் பேசுவது), தவறான கருத்துடையவன், ஏமாற்றுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“இந்த உலகில் உயிர்களைக் கொல்பவன், ஒரு முறை பிறந்ததாகவோ இரு முறை பிறந்ததாகவோ இருக்கலாம், உயிர்கள் மீது கருணை இல்லாதவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“கிராமங்களையும், சிற்றூர்களையும் சுற்றிவளைத்து நாசம் செய்கின்றவன், கொடியவனென்று கெட்ட பெயர் எடுக்கின்றவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“கிராமத்திலாகட்டும், வனத்திலாகட்டும் தனக்குக் கொடுக்கப் படாததை, மற்றவர் பொருளைத் திருடுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“யாரொருவன் கடன் வாங்கிய பின்பு, கடனை திரும்பக் கேட்கும் போது ‘உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை,’ என்று சொல்லி ஓடி விடுகின்றானோ—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“பொருள் மீது ஆசைபட்டு, சாலையில் போகிறவனைக் கொன்று அவனிடம் இருப்பதைப் பிடுங்கிக் கொள்கிறவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“தன்னலம் கருதியோ அல்லது மற்றவர் நலத்திற்கோ அல்லது செல்வத்திற்காகவோ பொய்சாட்சி சொல்பவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“வன்மையுடன் அல்லது இணக்கத்துடன் உறவினர் அல்லது நண்பர்களின் மனைவியரோடு கூடிப் பழகுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“வசதியிருந்தும் தாய் தந்தையரை அவர்கள் முதிய காலத்தில் கவனிக்காதவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“எவனொருவன் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மாமனார் அல்லது மாமியாரைக் கைநீட்டி அடிக்கின்றானோ அல்லது அவர்களிடம் கடுமையாகப் பேசுகின்றானோ—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“நல்லது எது என்று கேட்டால், தீயதைக் கூறிச் சாக்குப் போக்குச் சொல்லிப் பேசுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“தீய செயல் செய்து விட்டு, மற்றவருக்குத் தெரியாமல் இருக்க விரும்புபவன், இரகசியமாகத் தீமை செய்பவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“இன்னொருவன் வீட்டுக்குச் சென்று விருந்து உண்டபின், அவன் தன் வீட்டு வரும்போது உபசரிக்காதவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“ஒரு பிராமணனை அல்லது சன்னியாசியை அல்லது வேறு ஒரு துறவியைப் பொய் சொல்லி ஏமாற்றுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“ஒரு பிராமணன் அல்லது ஒரு துறவி உணவு உண்ணும் நேரத்தில் வந்தால் அவரிடம் கடுமையாகப் பேசி உணவு தர மறுப்பவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“யாரொருவன் இந்த உலகில், அறியாமையினால், வன்மையாகப் பேசி, பொய் சொல்லி, பொருள் சேர்க்கப் பார்க்கிறானோ—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“அகங்காரத்தினால் கெட்டுப் போனவன், தன்னை உயர்த்தி மற்றவரைக் குறைகூறுபவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“அடிக்கடி கோபிப்பவன்,
உலோபியாயிருப்பவன் (பொருளிறுக்கமுடையவன்), கீழான சிற்றின்பங்களுக்கு ஆசைப்படுபவன், சுயநலக்காரன், ஏமாற்றுபவன், வெட்கப்படாதவன், (தீமை செய்ய) பயப்படாதவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“விழிப்புற்றவரை (புத்தரை) அல்லது புத்தரின் சீடரை—அந்தச் சீடர் துறவியானாலும் சரி இல்லறத்தானாக இருந்தாலும் சரி—அவர்களை நிந்திப்பவன்—அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.”

“ஞானியாயில்லாத ஒருவன் ஞானியெனக் கூறிக்கொண்டு நடிப்பவன், பிரபஞ்சம் முழுவதும் திருடன் அவன்—அவனை இழிகுலத்தாரில் கீழானவன் என்று அறிந்து கொள்.”

“பிறப்பால் அல்ல இழிகுலத்தார் ஆவது; பிறப்பால் அல்ல பிராமணன் ஆவது. செயலால் மட்டுமே இழிகுலத்தார் ஆக முடியும். செயலால் மட்டுமே பிராமணன் ஆக முடியும்.”

“இந்த உதாரணத்தை வைத்து நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் (பிறப்பால் அல்ல இழிகுலத்தார் ஆவது என்பதை). ஓர் இழிகுலத்தார் மகனான ஸோபாகன், மாதங்கன் என்று தெரியப்பட்டான். “இந்த மாதங்கன் கிடைக்கப் பெறாத புகழ் பெற்றான். வீரகுலத்தாரும் பிராமணரும் அவனுக்குப் பரிகாரம் செய்யக் காத்திருந்தனர். “தெய்வீக இரதம் ஏறி (அட்டாங்க மார்க்கம்) அவா அற்ற நெடுஞ்சாலையில் ஓட்டிக் கொண்டு, (ஸோபாகன் இப்போது துறவரம் பூண்டவர்), பிரம்ம லோகத்தைப் புலன் இன்பங்களைக் கட்டுப்படுத்திச் சென்றடைந்தவர். “தன் (கீழான) பிறப்பு பிரம்ம லோகத்தை அடையத் தடையாக இருக்கவில்லை.

(வேத) மந்திரங்கள் அறிந்த சமயாச்சாரியர் குடும்பங்களில் பிறந்த பிராமணரும் உள்ளனர். அவர்கள் அடிக்கடி தீய செயல்கள் செய்வது கவனிக்கப் படுகிறது. இந்த வாழ்விலேயே அவர்கள் வெறுக்கப் படுகின்றனர். அடுத்த பிறப்பில் கீழான (நரக, மிருக, பூத) உலகத்தில் பிறப்பெடுப்பார்கள். மேலான பிறப்பு அவர்கள் நிந்திக்கப் படுவதற்கும் கீழான மறுபிறப்பெடுப்பதற்கும் தடையாக இருப்பதில்லை.

“பிறப்பால் அல்ல இழிகுலத்தார் ஆவது; பிறப்பால் அல்ல பிராமணன் ஆவது. செயலால் மட்டுமே இழிகுலத்தார் ஆக முடியும். செயலால் மட்டுமே பிராமணன் ஆக முடியும்.”

புத்தர் இவ்வாறு பேசியபின், பிராமணன் அக்கிகாபரத்வாஜன் புத்தரிடம் சொன்னார்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! ஓ! போற்றுதற்குரிய கோதமரே, குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். என்னை கோதமர் அடைக்கலம் சென்ற தன் இல்லறச் சீடனாக வாழ்க்கை நீடிக்கும் வரை ஏற்றுக் கொள்வீராக.”