சுத்த நிபாதம் 1.8

கரணிய மெத்த சூத்திரம்: அன்பு—மைத்திரி பற்றிய புத்தரின் வார்த்தைகள்

நற்பண்புகளில் திறமை வாய்ந்த ஒருவர்
அமைதிக்கான வழியை அறிந்தவர்,
இதைச் செய்ய வேண்டும்:

அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாகவும்
நேர்மையானவர்களாகவும்,
பேச்சில் நேர்மையுடனும், சாந்தமாகவும்,
அடக்கத்துடனும், ஆனால் அகம்பாவமற்றவராகவும்,
நிறைவுடனும் எளிதில் திருப்தியடையக் கூடியவருமாகவும்,
கடமைகள் பாரமாகாமலும்
வழிமுறைகளில் சிக்கனமாகவும் இருப்பார்களாக.

அமைதியாகவும், சாந்தமாகவும் நுண்ணறிவோடும் திறமையோடும்,
கர்வமில்லாமலும் அதிகாரத் தோற்றமில்லாமலும்
சான்றோர் கண்டிக்கத்தக்க
சிறு தவறினையும் அவர்கள்
செய்யாமல் இருப்பார்களாக.

இவ்வாறு வேண்டிக்கொள்ளவேண்டும்:
எல்லா உயிர்களும் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும்,
ஆறுதலோடும் இருப்பார்களாக.
எத்தகைய உயிரினமாக இருந்தாலும்;
பலவீனமானவையாக இருந்தாலும் வலிமையானவையாக இருந்தாலும்,
ஒன்றையும் விடாமல்,
பெரியவையும், மகத்தானவையும், நடுத்தரமானவையும், குள்ளமானவையும் சிறியவையும்,
காணமுடிபவையும், காணமுடியாதவையும்,
அருகில் வாழ்பவையும் தூரத்தில் வாழ்பவையும்,
பிறந்தவையும் பிறக்கப்போகிறவையும்—
எல்லா உயிர்களும் ஆறுதலோடு இருப்பார்களாக!

யாரும் யாரையும் ஏமாற்றாமல்,
எந்த நிலையில் உள்ள எந்த உயிரினத்தையும் வெறுக்காமல் இருப்பார்களாக.
கோபத்தின் காரணமாகவோ வெறுப்பினாலோ
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பாமலும் இருப்பார்களாக.

ஒரு தாய் தன் உயிரையும் பணயம் வைத்துத்
தன் குழந்தையை, தன் ஒரே குழந்தையை எப்படிப் பாதுகாப்பாளோ
அதேபோல எல்லையற்ற அன்புள்ளத்தோடு
எல்லா உயிர்களையும் போற்றிக் காக்க வேண்டும்;

அன்பை உலக முழுதும் பரவச்செய்து:
மேலே விண்ணளவும்,
கீழே ஆழ்நிலத்திற்கும்;
நாற்புறத்திலும் எல்லையற்ற தொலைவிற்கும் பரவச் செய்து,
வெறுப்பிலிருந்தும், மனவெரிச்சலிலிருந்தும் விடுபட்டு,
நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், படுத்தாலும்
அயராமல்,
இந்த எண்ணத்தை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

இதுவே மனத்தின் உன்னத நிலையாம்.
ஒரே கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிராதவனாக,
தூய உள்ளம் கொண்டவனாக, தெளிந்த பார்வையின் காரணமாக
எல்லாப் புலன் ஆசைகளிடமிருந்தும் விடுபட்டவனாக இருப்பவன்
இவ்வுலகில் மறுபிறப்பெடுப்பதில்லை.