சுத்த நிபாதம் 1.9

ஹேமவத சூத்திரம்

சாதாகிரா:
இன்று சந்திர மாதத்துப் பதினைந்தாம் நாள்—
உபோசதா—புண்ணிய இரவு வந்துள்ளது;
ஆசிரியர் கோதமரிடம் செல்வோம்,
அவர் பெரும்புகழ் படைத்தவர்.

ஹேமவத:
அப்படிப்பட்டவரின் மனம்
எல்லோரிடத்தும் நட்புணர்வோடு இருக்குமா?
இன்பமான செயல்களின் மீது உள்ள அவரது எண்ணங்களும்
இன்பமற்றவற்றின் மீது உள்ள எண்ணங்களும் கட்டுப்பாட்டில் உள்ளனவா?

சாதாகிரா:
ஆம், அவர் எல்லோரிடத்திலும்
நல்லெண்ணம் வைத்திருப்பவர்.
இன்பமான செயல்களின் மீது உள்ள அவரது எண்ணங்களும்
இன்பமற்றவற்றின் மீது உள்ள எண்ணங்களும் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஹேமவத:
அவர் திருடாமல் இருப்பவரா?
உயிரினங்களிடம் அடக்கத்துடன் பழகுபவரா?
சோம்பலிடத்திலிருந்து தூரமானவரா?
ஆழ்ந்த தியான நிலைகளை அலட்சியம் செய்பவரா?

சாதாகிரா:
அவர் திருடாமல் இருப்பவர்.
உயிரினங்களிடம் அடக்கத்துடன் பழகுபவர்.
சோம்பலுக்கும் அவருக்கும் வெகுதூரம்.
அவர் ஆழ்ந்த தியான நிலைகளை என்றும் அலட்சியம் செய்வதில்லை.

ஹேமவத:
அவர் பொய் பேசாதவரா?
அவர் கடுமையான வன்முறை வார்த்தைகளைப் பேசுபவரா?
அல்லது புறங்கூறும் பேச்சு உடையவரா?
விதண்டைப் பேச்சு உள்ளவரா?

சாதாகிரா:
அவர் பொய் பேசாதவர்.
அவர் கடுமையான வன்முறை வார்த்தைகளைப் பேசாதவர்.
அவர் புறங்கூறும் பேச்சு உடையவரல்ல,
ஆனால் பயன்தரும் மெய்ஞ்ஞானப் பேச்சு பேசுபவர்.

ஹேமவத:
அவர் அவா உள்ளவரா, விருப்பம் போல நடந்து கொள்பவரா,
மனத்துள் பற்றுக் கொண்டவரா?
அறியாமையை வென்றவரா?
எல்லாப் பொருட்களின் இயல்புகளை அறிந்தவரா?

சாதாகிரா:
அவர் அவா கொண்டவரல்ல. விருப்பம் போல நடந்து கொள்பவருமல்ல.
மனத்துள் பற்றுக் கொண்டவரல்ல.
அறியாமையை வென்றவர்.
எல்லாப் பொருட்களின் இயல்புகளையும் அறிந்தவர்.

ஹேமவத:
அவர் உண்மை அறிவை அடைந்தவரா?
அவர் நடத்தை சரியானதா, தூய்மையானதா?
அவருக்குப் புலன் ஆசைகள் தீர்ந்தனவா?
மறுபிறப்பெடுக்க மாட்டாரா?

சாதாகிரா:
ஆம், அவர் உண்மை அறிவை அடைந்தவர்.
அவர் நடத்தை சரியானது, தூய்மையானது.
புலன் ஆசைகளை வென்றவர்.
அவர் மறுபிறப்பெடுக்க மாட்டார்.

ஹேமவத:
முனிவரின் மனம் தேர்ந்தது.
அவர் செய்கையும், பேச்சும் சிறந்தது.
வாய்மையை அறிந்தவர்.
நடத்தையில் சிறந்தவர்—
கோதமரைச் சென்று பார்ப்பது நல்லது.

மானைப்போலக் கால் உடையவர், மெல்லியவர்,
மெய்ஞ்ஞானம் உடையவர்,
பேராசை இல்லாதவர்,
மிதமான உணவு அருந்துபவர்,
வனத்தில் வாழும் முனி அவர், தனியாகத் தியானிப்பவர்—
கோதமரைச் சென்று பார்ப்போம் வா.

சிங்கத்தைப் போல மாமனிதர் தனியாக வாழ்கிறார்,
எல்லா இன்பங்களிடையே அவர் எதையும் எதிர்பார்ப்பதில்லை,
அவர் அருகில் சென்று அவரிடம் கேட்போம்
மரணத்தினிடமிருந்து தப்புவது எப்படி என்று?

இருவரும்:
தன்மத்தை மொழிந்தவரே,
அதை விளக்குபவரே,
வாய்மையை அறிந்தவரே
பயமும் வெறுப்பும் இல்லாதவரே
நாங்கள் இருவரும் கோதமரைக் கேட்கிறோம்—

ஹேமவத:
உலகம் எதனோடு தோன்றுவது?
எதனோடு இணைந்திருக்கும்?
உலகம் எதனோடு பற்றுக் கொள்கிறது?
எதனால் துக்கப்படுகிறது?

புத்தர்:
உலகம் ஆறோடு தோன்றுகிறது.
ஆறோடு சேர்கிறது.
ஆறோடு பற்றுக் கொள்கிறது.
எனவே ஆறோடு நோய்வாய்ப் படுகிறது.

ஹேமவத:
பற்றுக்கொள்வது—அது என்ன
உலகம் நோய்வாய்படுவது?
இதை பற்றிக் கேட்கிறோம்,
தயவு செய்து கூறுங்கள்:
துக்கத்திடமிருந்து விடுபடுவது எப்படி?

புத்தர்:
ஐந்து புலன் இன்பங்கள் போதிக்கப் படுகின்றன
மனத்தையும் சேர்த்து ஆறு புலன்கள்,
இவற்றுக்குள்ள ஆசையைக் கைவிட்டு
துக்கத்திடமிருந்து விடுதலை பெறலாம்.

இது தான் உலகத்தின் விடுதலையாம்,
உள்ளபடி சொல்லிவிட்டேன்.
இதை மட்டுமே சொல்வேன்
இவ்வாறு துக்கத்திடமிருந்து விடுபடலாம்.

ஹேமவத:
இங்கு யார் வெள்ளத்தைக் கடப்பது,
யார் கடலைத் தாண்டுவது,
நிற்கவோ, தாங்கவோ இடமில்லை
ஆழ் கடலில் மூழ்காமல் இருப்பது யார்?

புத்தர்:
எப்போதும் ஒழுக்கமுள்ளவன்
மெய்ஞ்ஞானத்துடன், மன ஒருக்கத்துடன் (ஒருமைப்பாட்டுடன்),
உள் நோக்கிய மனத்துடன், நற்கடைப்பிடியுடன்
தாண்டிச் செல்லக் கடினமான வெள்ளத்தையும் தாண்டுகிறான்.

புலன் ஆசைகள் மேல் உள்ள எண்ணங்களிடமிருந்து விடுபட்டு,
எல்லாக் கட்டுகளையும் களைந்து,
தோன்றவேண்டும் என்ற விருப்பத்தை அறுத்தவன்—
அவனே ஆழ்கடலில் மூழ்காதவன்.

ஹேமவத:
ஆழமான ஞானம் உடைய முனிவரைப் பாராய்,
நுட்பமாக வாய்மையைத் தெரிந்தவர்,
புலன் இன்பங்களின்மேல் பற்றில்லாதவர், எல்லாவிதத்திலும் விடுவிக்கப் பட்டவர்.
தேவர்கள் பாதையில் நடப்பவர்!

புகழ் பெற்ற முனிவரைப் பாராய்
நுட்பமான வாய்மையைத் தெரிந்தவர், மெய்ஞ்ஞானம் வளர்ப்பவர்
புலன்களுக்குக் கட்டுபடாத ஞானி
எல்லாம் அறிந்தவர்,
மேன்மையான பாதையில் நடப்பவர்!

நல்ல பார்வையைப் பார்த்தோம் நாங்கள் இன்று,
நல்ல விடியல் எங்களுக்கு, நல்ல எழுச்சி:
விழிப்புற்றவரைப் பார்த்தோம்,
அவர் வெள்ளத்தைத் தாண்டி ஆசைகளை அறுத்தவர்.

இங்குள்ள ஆயிரம் யாக்ஷைகளும்
பெரும் சக்திகளும் புகழும் கொண்டவர்கள்,
எல்லோரும் உங்களிடத்தில் அடைக்கலம் புகுகிறோம்—
நீங்களே தன்னிகரில்லா ஆசிரியர் எங்களுக்கு!

இருவரும்:
கிராமம் கிராமமாக நாங்கள் நடமாடுவோம்,
மலை மலையாகச் சென்று அவரைப் போற்றி
முழுமையாக விழிப்புற்ற அவரைப் போற்றுவோம், அத்தோடு
சிறப்பாக மொழியப் பட்டுள்ள தம்மத்தையும் போற்றுவோம்.