சுத்த நிபாதம் 2.1

இரத்தின சூத்திரம்: புதையல்

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்
—பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும்—
நீங்கள் அனைவரும் மகிழ்வோடு இருப்பீர்களாக!
நான் சொல்லப் போவதை மிகக் கவனமாகக் கேளுங்கள்.

ஆவிகளே, நீங்கள் அனைவரும் கவனமாகக் கேளுங்கள்.
மனித இனத்திடம் அன்பு காட்டுங்கள்.
இரவும் பகலும் அவர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.
எனவே விவேகத்துடன் அவர்களைப் பாதுக்காக்கவும்.

எத்தகைய செல்வம் – இங்கும் வேறெங்கும்,
சொர்க்கத்தில் உள்ள அளப்பரிய பொற்குவியலும்,
எங்களுக்கு அவை ததாகதருக்கு ஈடாகாது.
புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

இந்த இணையற்ற சாந்தமான மரணமில்லா முடிவு,
அவாவை அடக்கி மன ஒருக்கத்தால் கண்டுபிடித்த சாக்கிய மாமுனிவர்:
தம்மத்திற்கு ஒப்பானது ஏதும் இல்லை.
தம்மத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

அற்புதமானவர், விழிப்புற்றவர் (புத்தர்) பெரிதும் போற்றிய மன ஒருக்கத்திற்கு (ஒருமைப்பாட்டுக்கு)
எடுத்துச் செல்லும் தியானம் உடனே நல் விளைவுகள் தருவது.
அந்த ஒருக்கத்திற்கு ஒப்பானது ஏதும் இல்லை.
தம்மத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

எட்டு நபர்கள்—நான்கு ஜோடிகள்—
அமைதி உடையவர் போற்றுவார்:
அவர்கள் மகிழ்ச்சியானவரின் சீடர்கள், நன்கொடைபெறத் தகுதியானவர்கள்.
அவர்களுக்குக் கொடுக்கப் படுவது நற்பலன் விளைவிக்கும்.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

யாரெல்லாம் நம்பிக்கையுடன், உறுதியான மனத்துடன்
கோதமரின் போதனைப்படி நடக்கின்றனரோ அவரெல்லாம்
நோக்கத்தை அடைந்தவுடன் மரணமற்ற நிலையை அனுபவிக்கின்றனர்.
தாங்கள் பெற்ற விடுதலையோடு மகிழ்கின்றனர்.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

ஒர் இந்திரர் தூண், பூமியில் நாட்டப்பட்டது
நான்கு காற்றுகளாலும் அசைக்க முடியாதது:
நான் கூறுகிறேன்—அது தான் ஒரு நேர்மைமிக்க மனிதனைப்போல,
அவர்—நான்கு மேன்மையான உண்மைகளைக்
கண்டு கொண்டவர்—அறிந்தவர்.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

ஆழமான விவேகம் உள்ளவர் (புத்தர்) நன்றாகக் கற்பித்த
மேன்மையான உண்மைகளைத் தெளிவாகப் பார்த்தவர்கள்—
[பின்னர்] விவேகமில்லாமல் நடந்து கொண்டாலும்
எட்டாவது முறை மறுபிறப்பெடுக்க மாட்டார்.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

மனக்கண் திறந்தவர்,
மூன்று விஷயங்களைக் கைவிடுகிறார்:
நான்,எனது என்ற எண்ணம், சந்தேகம்,
சடங்கு சாங்கியங்களுக்கான பற்று.
நான்கு இழப்புகளிலிருந்து,
முழுமையாக விடுவிக்கப் படுகிறார்.
ஆறு பெருந்தவறுகளை
அவரால் செய்யவும் முடியாது.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

எந்தத் தவறான செய்கையைச் செய்தாலும்
—உடலால், பேச்சால், மனத்தால்—
அதை மறைக்க முடியாது:
இந்த இயலாமை மார்க்கத்தைக் கண்டவனின் ஒரு இயல்பு.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

கோடைகாலத்தின் முதல் மாதத்தில்
அடர்ந்த சோலையில் பூத்துச் சொரியும் மரங்களின் உச்சியைப்போல,
அவர் கற்பித்த முதன்மையான அறமும்,
சிறந்த பயன் தரும், கட்டவிழ்க்கும் நெறிமுறை.
புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

முதல்வர்,
முதன்மையான—அறிஞர்,
முதன்மையான—தயாளர்,
முதன்மையான—மேன்மையைக் கொண்டுவருபவர்
அவரை மிஞ்சியவர் எவரும் இல்லை, அவர் மேலான அறத்தைக் கற்பித்தார்.
புத்தருள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

பழயது முடிந்தது, இனிப் புதுப்பிறப்பில்லை.
மேலும் பிறப்பெடுக்க அவர்கள் மனம் விரும்புவதில்லை,
அவர்கள், விதைப்பதில்லை, வளர்க்க விருப்பமில்லை,
விவேகமுள்ளவர், இந்த நெருப்பு அணைவது போல மறைவார்.
சங்கத்துள் இதுவும் ஒரு கண்கவரும் செல்வக் குவியல்.
இந்த வாய்மையினால் நன்மை நிலவட்டும்.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்
—பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும்—
புத்தருக்கு மரியாதை செலுத்துவோம்
உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதர்,
மனிதர் தெய்வீகமானவர்.
நன்மை
நிலவட்டும்.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்
—பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும்—
தன்மத்துக்கு மரியாதை செலுத்துவோம்
உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதருக்கு மரியாதை செலுத்துவோம்,
மனிதர் தெய்வீகமானவர்.
நன்மை
நிலவட்டும்.

இங்கு கூடியிருக்கும் உயிரினங்கள் எவையானாலும்
—பூமியில் வாழ்வனவானாலும், ஆகாயத்தில் வாழும் ஆவிகளானாலும்—
சங்கத்துக்கு மரியாதை செலுத்துவோம்
உயிரினங்களால் கும்பிடப்படும் ததாகதருக்கு மரியாதை செலுத்துவோம்,
மனிதர் தெய்வீகமானவர்.
நன்மை
நிலவட்டும்.