சுத்த நிபாதம் 2.11

ராகுல சூத்திரம்: ராகுலருக்குப் போதனை

புத்தர்:
எந்நேரமும் ஆசிரியருடன் வாழ்வதால்,
ஆசிரியரை நீ அவமதிக்கின்றாயா?
மனித இனத்திற்கு அவர் தீப்பந்தம் பிடிப்பவர் (வெளிச்சம் காட்டுவோர்)
அவரை நீ போற்றுகின்றாயா?

ராகுலர்:
எந்நேரமும் ஆசிரியருடன் வாழ்ந்தாலும்,
ஆசிரியரை நான் அவமதிப்பதில்லை.
மனித இனத்திற்குத் தீப்பந்தம் பிடிக்கும்
அவரை நான் போற்றுகின்றேன்.

புத்தர்:
ஐந்து புலன் ஆசைகளையும்
மனத்தை மகிழ்விக்கும் நம் அன்புக்கினிய உருவங்களையும் மறந்த பின்,
நம்பிக்கையோடு இல்லறவாழ்வை நீத்துத்
துக்கத்தை முடிப்பவனாக இரு.

மேன்மையான நண்பர்களோடு நட்புக் கொள்,
தனிமையும் அமைதியும் கொண்ட ஒதுக்கிடமான பயிற்சி செய்யும்
இடத்தை அமைத்துக் கொள்,
உணவு உண்பதில் மிதமாக இரு.

ஆடைகளும் உணவும் பிச்சைகேட்டு வாங்கு,
குடிலும், மருந்தும் அவ்வாறே—
இவற்றால் வேட்கை உண்டாகாது,
எனவே மீண்டும் உலகுக்குத் திரும்பாதே.

பதிமோக்கா விதிகளோடு அடங்கி வாழ்
ஐந்து புலன்களோடும்
உடல் நற்கடைப்பிடியோடும்
பயிற்சி செய்து பற்றில்லாமலும் இரு.

கவர்ச்சியான பொருட்களை
விட்டு விலகியிரு,
அவற்றிற்குக் காமத்தோடு
தொடர்பு இருக்கலாம்.
அழகற்றவைகளின் மீது,
ஒருமுகத்தோடு
மன ஒருக்கம் பெற்று
மனத்தை வளர்.

அறிகுறியற்ற நிலையை வளர்
அகம்பாவம் உண்டாகும் மனப்போக்கை விட்டுவிடு—
இதனை முழுதும் உணர்ந்தால்,
மிக அமைதியான நிலையை நீ உணர்வாய்.

இவ்வாறு பகவர் அடிக்கடி போதித்து போற்றுதற்குரிய ராகுலரை ஊக்குவித்தார்.