சுத்த நிபாதம் 2.12

வங்கீசர் சூத்திரம்: வங்கீசர் கேள்விகளும் புத்தரின் பதிலும்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை அண்ணல் ஆலாவியில் அக்காலவ ஆலயத்தில் தங்கியிருந்தார். சற்று முன்னர் தான் போற்றுதற்குரிய வங்கீசரின் உபாத்தியாயர் (ஆசிரியர்), அவர் பெயர் நிக்ரோதகப்ப பெரியவர், அக்காலவ ஆலயத்தில் இறந்து விடுகிறார். வங்கீசர் மனத்தில் இந்தக் கேள்வி எழுந்தது. ‘எனது ஆசான் முழுமையான குளுமை (நிப்பாண நிலை, பேராசை, வெறுப்பு, அறியாமை ஆகிய நெருப்புகள் இல்லாத குளுமையான நிலை) அடைந்தாரா இல்லையா?’

பின்னர் வங்கீசர் தனிமையை விட்டு எழுந்து அண்ணலிடம் சென்று அவருக்கு மரியாதை செலுத்திய பின் ஒரு புறமாக அமர்ந்து அண்ணலிடம்: “நான் தியானத்தில் அமர்ந்திருந்தபோது என் மனத்தில் இந்தக் கேள்வி எழுந்தது, ‘எனது ஆசான் முழுமையாகக் குளுமை பெற்றுவிட்டாரா இல்லையா?’ ”

பின் வங்கீசர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, தன் மேலாடையை ஒரு பக்கத் தோளின் மீது போட்டுக் கொண்டு, மரியாதையுடன் கைகூப்பி அண்ணலிடம் பா வரிகளில் இவ்வாறு கூறினார்:

வங்கீசர்:
நாங்கள் மேன்மையான ஞானம் பெற்ற ஆசிரியரைக் கேட்கிறோம்—
இந்த வாழ்விலேயே தனது சந்தேகங்களை யெல்லாம் தீர்த்தவர்,
சமீபத்தில் இறந்த புகழ்வாய்ந்த கீர்த்தி பெற்ற அக்காலவ பிக்கு,
உண்மையிலேயே நிப்பாண நிலையை அடைந்து விட்டாரா?

அந்தப் பிராமணருக்கு நிக்ரோதகப்ப என்று
பெயர் சூட்டியது பகவர் தான்.
செல்லும் இடங்களிலெல்லாம் அவர் பகவரைப் போற்றிப் பாராட்டினார்
மேலும், ஓ அண்ணலே அவர் வீடுபேறு அடைவதற்குக் கடும் முயற்சி செய்தார்.

ஓ சாக்கியரே, எல்லாம் உணர்ந்தவரே (புத்தரே),
கப்ப என்ற பெயர் கொண்ட, தம்மத்தைச் செவிகொடுத்துக் கேட்டவரின்
நிலைபற்றி நாங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
உங்கள் பதிலைச் செவிமடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்
—நீங்கள் ஆசிரியர். உங்களை மிஞ்சியவர் எவரும் இங்கு இல்லை.

எங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி அவர் ஞானியானாரா இல்லையா என்பதை
எங்களுக்குத் தெரிவியுங்கள்,
ஓ மெய்ஞ்ஞானம் பெற்றவரே எங்கள் மத்தியில் அதைத் தெரியப் படுத்துங்கள்,
ஓ அனைத்தும் உணர்ந்தவரே, ஆயிரம் கண் கொண்ட சக்கனைச் (தேவர் தலைவணை)
சுற்றியுள்ள தேவர்களைப்போல நாங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளோம்..

அறியாமையினால் உலக விஷயங்களில் கட்டுண்டவர்கள்,
பல விதமான மயக்கத்தினால், சந்தேகமடைகின்றனர்.
ஆனால் ததாகதரிடம் செல்லும்போது அவைகள் களையப் படுகின்றன
அவரது கண்கள் ஞானக் கண்கள். அவர் மனிதருள் மேன்மையானவர்.

சூறைக் காற்று முகிற்கூட்டத்தைத் துரத்தி விடுவதுபோல,
யாராலும் மனமாசுகளை நீக்க முடியாவிட்டால்,
உலகமே நிச்சயமாக இருள் சூழ்ந்து விடும்.
புகழ் பெற்றவரும் பிரகாசிக்க வாய்ப்பு இருக்காது.

ஆனால் மெய்ஞ்ஞானம் உடையவர்களே இவ்வுலகிற்கு வெளிச்சம் காட்டுவோர்.
அண்ணலே நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர்,
நாங்கள் அத்தகைய எல்லாம் தெரிந்தவரிம்,
அறிவு நுட்பம் உடையவரிடம் (தீர்க்கதரிசியிடம்) வந்துள்ளோம்.
இங்கு கூடியிருப்போருக்குக் கப்பரைப் பற்றிக் கூறவும்.

அழகுமிக்கவரே, தங்கள் பதிலுரையை விரைவில் கூறவும்,
அன்னம் (தன் கழுத்தை) மென்மையான சத்தத்துடன் நீட்டுவது போல;
உங்கள் இனிமையான குரல், உயர்வு தாழ்வு இல்லாதது.
நீங்கள் சொல்லப் போவதைக் கேட்கத் துடிப்புடன் உள்ளோம்.

பிறப்பையும், இறப்பையும் விட்டுவிட்ட உங்களை வலியுறுத்துகிறோம்—
தூய்மையானவரைத் தன்மத்தைப் பேச வற்புறுத்துகிறோம்;
சாதாரண மனிதர் தாங்கள் விரும்பியதைச் செய்யவியலாது
ஆனால் ததாகதர்கள் விவேகத்துடன் நடந்து விரும்பியதைச் செய்து முடிப்பர்.

உங்கள் முழுமையான விளக்கம் நேர்மையான மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.
அவை நன்றாகக் கற்கப்பட்டவை;
இறுதியாக மரியாதையுடன் கைகூப்பிக் கேட்கிறேன்: மேன்மையான மெய்ஞ்ஞானம் உடையவரே,
எங்களை அறியாமையில் (கப்பரின் நிலையைப் பற்றி) வைத்திருக்க வேண்டாம்.

உன்னத அறத்தைத் தெரிந்தவரே, ஆற்றலுடையவரே,
(கப்பரின் விதியை) தெரிந்தவரே, எங்களை அறியாமையில் வைத்திருக்க வேண்டாம்.
கோடைகாலத்தில் வெப்பத்தில் வாடிப்போனவர்
நீருக்காக ஏங்குவது போல, உங்கள் வார்த்தைகளுக்கு எங்குகிறோம்.
எங்கள் காதில் மழை பொழியுங்கள்!

கப்பயானர் வாழ்ந்த தூய்மையான
வாழ்க்கை—கண்டிப்பாக வீண் போயிருக்காது;
அவர் எல்லா மாசுகளையும் களைந்தாரா (ஞானியாக இறந்தாரா), இல்லை
இன்னமும் சில மாசுகள் அவரிடத்தில் மிஞ்சியிருக்கின்றனவா (மறுபிறப்பெடுப்பாரா)?
அவர் பெற்ற சுதந்திரத்தை பற்றிக் கூறுங்கள், அவர் எந்த நிலையில் இறந்தார் என்று தெரிந்து கொள்ள ஏங்குகிறோம்.

புத்தர்:
நீண்ட நாள் அவருள் ஓடிக் கொண்டிருந்த வேட்கை ஓடையை—
மனத்திற்கும் உடலுக்கும் இருந்த வேட்கையை அவர் அறுத்து விட்டார்;
முழுமையாகப் பிறப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு அப்பால் சென்று விட்டார்—
இவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டவர் கூறினார், அந்த ஐவருக்கு முதல்வர்.

வங்கீசர்:
முனிவருள் சிறந்தவரே, உங்கள் வார்த்தைகளைக் கேட்டு,
நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன்.
என் கேள்வி வீண்போகவில்லை—
அந்தப் பிராமணர் (என் ஆசிரியர்) என்னை ஏமாற்றவில்லை!

அவர் பேசியது போலவே அவர்
நடந்தும் கொண்டார்,
புத்தரின் போதனைகளைச்
செவிமடுத்துக் கேட்டவர்
ஏமாற்றுகாரன் எமன் போட்ட
விரிவான வலிமையான மரண
வலையில் சிக்கவில்லை.

அண்ணலே, திறமையான கப்பர்
பற்றின், வேட்கையின் ஆதாரத்தைப் (துவக்கத்தைப்) பார்த்தவர்;
கப்பயானர், அடைவதற்குக் கடின இடமான
மரணத்துக்கு அப்பால் சென்று விட்டார்.