சுத்த நிபாதம் 2.13

சம்மாபரிப்பாஜனிய சூத்திரம்—பிழையற்ற நாடோடி வாழ்க்கை

கேள்வி:
பெரும் மெய்ஞ்ஞானம் கொண்ட முனிவர், வெள்ளத்தைத் தாண்டியவர்
அக்கரை சேர்ந்தவர், அமைதியானவர், சமநிலையில் இருப்பவர்,
வீட்டைத் துறந்தவர்,
புலன் இன்பங்களை நீக்கியவர், அவரிடம் கேட்கிறேன்:
ஒரு பிக்கு உலகில் சரியான முறையில் எவ்வாறு வீட்டைத் துறந்து வாழ்வது?

புத்தர்:
சகுனங்கள், அதிர்ஷ்டம், கனவு, மற்றைய நிமித்தங்களில்
உள்ள நம்பிக்கையைத் துறந்தவர்களும்,
நல்ல காலம், நலம் தரும் செயல் என்பன போன்ற நச்சுக் கருத்துக்களைக்
கைவிட்டவர்களும்
உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

புலன் இன்பங்களை—இவ்வுலகிலும்
தேவலோகத்திலும் – விரட்டக் கூடிய பிக்கு
தோற்றத்திற்கு (பவம் எடுப்பதற்கு) அப்பால் சென்றவர், அறத்தை நன்கு தெரிந்தவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

கோபத்தையும், பேராசையையும் கைவிட்ட ஒரு பிக்கு,
அவதூறு பேசாதவர்,
விருப்பு, வெறுப்பு இல்லாதவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

இன்பத்தையும், துன்பத்தையும் கைவிட்டவர்
பற்றில்லாதவர், எதையும் சார்ந்து நில்லாதவர்,
தளைகளுக்கான காரணங்களிடமிருந்து முழுமையாக விடுபட்டவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

மனக் கிளர்ச்சியின் பயனற்ற தன்மையை அறிந்து
உணர்ச்சியைத் தூண்டும் வேட்கையை விலக்கி, யாதொருவர் ஆதரவில் வாழாமலும்,
பிறரால் வழிநடத்தப் படாமலும் இருப்பவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

பேச்சிலும், மனத்திலும், செயலிலும் மற்றவரை எதிர்க்காமல்
அறத்தின் முழுமையை நன்கு தெரிந்தவர்,
நிப்பாண நிலையை அடைய விரும்புபவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

“அவன் என்னைப் போற்றுகிறான்,” என்று அகந்தை கொள்ளாத பிக்கு,
தான் தூற்றப் பட்டாலும் எதிர்த்துத் தூற்றாதவர்,
மற்றவர் தரும் உணவைக் கண்டு குதூகலம் அடையாதவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

அவாவும், தோற்றமும் (பவமும்) விட்டுவிட்ட பிக்கு,
மற்றவரைத் துன்புறுத்துவதையும் அடிமைப் படுத்துவதையும் தவிர்ப்பவர்,
ஐயங்களைக் கடந்தவர், (பேராசை என்ற) அம்பை நீக்கியவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

தனக்கு ஏற்றது எது என்பதை அறிந்த பிக்கு,
உலகில் எவருக்கும் தீமை செய்யாதவர்,
உள்ளது உள்ளபடி அறத்தை அறிந்தவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

மறைந்திருக்கும் தீயமனப்போக்குகள் யாதும் இல்லாதவர்,
தீமையின் வேர்களை முழுமையாகப் பிடுங்கியெறிந்தவர்,
ஆசைகளைக் களைந்ததால் அவற்றிலிருந்து விடுபட்டவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

மாசுகளை அழித்து அகந்தையைக் கைவிட்டவர்
காம இச்சைகளைக் கடந்தவர், அடக்கமானவர்,
கரையேறியவர் (நற்கதி சேர்ந்தவர்), இடுக்கணழியாதவர் (சமநிலையான மனம் கொண்டவர்)—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

தன்னம்பிக்கையுடையவர், கற்றவர், (நிப்பாணத்துக்கு எடுத்துச் செல்லும்) மார்க்கத்தைக் கண்டவர்,
மெய்ஞ்ஞானம் உடையவர், பிரிவுகளுக்கு மத்தியில் எப்பிரிவையும் சாராமல் விலகி நிற்பவர்,
ஆசையையும், வெறுப்பையும், கெட்ட எண்ணங்களையும் கைவிட்டவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

வெற்றி கொண்டவர்—தூய்மையானவர், தீமையின் திரையை அகற்றியவர்,
அறத்தில் நன்கு ஒழுகியவர், அக்கரையை அடைந்தவர், உறுதியானவர்
காரணகாரியத் தொடர்பில் உண்டாவனவற்றின் (அதாவது கன்மச் செயல்களின்) முடிவை அறிந்தவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

மெய்ஞ்ஞானத்தைத் தூய்மைப் படுத்தி,
கடந்த காலம் வருங்காலம் பற்றிய ஆணவ எண்ணங்களை விட்டவர்,
புலன் ஆசைகளிலிருந்து முழுமையாக விடுபட்டவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

வாய்மையை அறிந்தவர், அறத்தை
முழுதும் உள்வாங்கியவர்,
மாசுகளின் அழிவைத் தெளிவாக அறிந்தவர், அனைத்துப் பற்றுகளையும் விட்டவர்—
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.

கேள்வி கேட்டவர்:
ஆம், பகவரே, நீங்கள் சொல்வதுபோல
இவ்வாறு வாழும் பிக்கு அடக்கமானவராகி
எல்லாத் தளைகளையும் உடைத்தவராகிறார்.
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.