சுத்த நிபாதம் 2.14

தம்மிக்க சூத்திரம்—தம்மிக்கவிற்கு—செவிமடுத்துக் கேட்பவர் நடத்தை

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.

ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகர் ஆசிரமத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கு வந்த உபாசகர் தம்மிக்கரும், ஐநூறு உபாசகர்களும் பகவரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தனர். பின் உபாசகர் தம்மிக்க பகவரிடம் பா வடிவில் இவ்வாறு கேட்டார்.

தம்மிக்கர்:
மேன்மையான மெய்ஞ்ஞானம் கொண்ட கோதமரைக் கேட்கிறேன்:
எந்த வழியில் நடந்து கொள்வது செவிமடுத்துக் கேட்பவருக்கு (சீடருக்கு) நல்லது
இல்லறத்தைத் துறந்து துறவியாவதா?
அல்லது இல்லறவாழ்வு வாழ்ந்து உபாசகராக இருப்பதா?

இந்த உலகத்தில் தோன்றியவர்களையும், தேவர்களையும்,
இறுதி வீடுபேற்றையும் நீங்கள் தெளிவாக அறிவீர்கள்.
இந்த ஆழமான அறிவை வேறு எவரோடும் ஒப்பிட முடியாது,
ஏனென்றால், அவர்கள் சொல்வது போல நீங்கள் மேன்மையான புத்தர்.

எல்லா அறிவையும் எட்டியவர் நீங்கள், உயிர்கள் மேல் உள்ள கருணையின் காரணமாக
அறத்தைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்,
(அறியாமையின்) திரையை விளக்கியவர் நீங்கள், அனைத்தையும் காணும் கண் உடையவர்,
தூய்மையான நீங்கள் உலகுக்கு ஒளியேற்றியுள்ளீர்கள்.

பின் நீங்கள் வெற்றிபெற்றவர் என்று கேள்விப் பட்டு
இராவணன் என்ற பெயர் கொண்ட நாகர் வந்தார்,
உங்களிடம் தனிமையில் பேசியபின் மிக மகிழ்ந்து
“அருமையிலும் அருமை!” என்று பாராட்டிவிட்டுத் திருப்தியுடன் புறப்பட்டார்.

பின் வேஸாவன, குவேரா போன்ற
மன்னர்களும் உங்களிடம் அறம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்க வந்தனர்.
ஓ ஞானியே, நீங்கள் கேட்கப் பட்ட வினாக்களுக்கு உரிய பதிலளித்தீர்.
அதைச் செவிமடுத்து அவர்களும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

இந்தச் சித்தாந்தம் பேசும் சமயவாதிகள்
ஆஜிவகர்களும், நிகந்தகர்களும் உங்களோடு வாதிட்டும்
ஞானத்தில் உங்களை வெல்ல முடியவில்லை,
நின்று கொண்டிருப்பவர் வேகமாக ஓடுபவரை மீற முடியாதது போல.

பின் பிராமணர்களும் உங்களோடு வாதிட்டனர்—
சில அறிஞர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர்;
மற்றவர்கள் தற்பெருமை கொண்டு விவாதஞ் செய்வோர்:
அவர்களும் விளக்கம் கேட்க உங்களையே நாடினர்.

இந்த அறம் பேரின்பமூட்டுவது, ஆழமானது,
உங்களால் நன்கு போதிக்கப்பட்டது.
ஓ! பிராகாசமானவரே, நாங்கள் கேட்கக் காத்துக் கொண்டிருக்கின்றோம்,
எங்கள் வினாக்களுக்குப் பதில் கூறுங்கள், சிறந்த புத்தரே.

இங்கு அமர்ந்திருக்கும் பிக்குகளும்,
கேட்க விரும்பும் உபாசகர்களும்,
கறைபடியாத உங்கள் வார்த்தைகளால் அறத்தைக் கேட்கட்டும், தேவர்கள்
வாசவரின் நன்கு மொழியப்பட்ட வார்த்தைகளைக் கேட்டது போல.

புத்தர்:
கேளுங்கள் பிக்குகளே! பிக்குகளுக்கான நடத்தையைப் பற்றிக் கூறுகிறேன்—
திட்டவட்டமான அறத்தைக் கேளுங்கள்—நினைவில் வைத்திருந்து அறிவுடையோர்
அதன் பலனை அறிந்து துறவு பூண்டவருக்கான
சுபாவத்துடன் அதன் படி ஒழுகுங்கள்.

ஒரு பிக்கு தடைசெய்யப்பட்ட நேரங்களில் உணவுக்காக அலைந்து கொண்டிருக்கக் கூடாது
சரியான நேரங்களிலேயே யாசிக்க (உணவு பிச்சை கேட்க) நகர்வழி செல்ல வேண்டும்;
தவிர்க்க வேண்டிய நேரத்தில் சென்றால் தவறு செய்யத் தூண்டப் படலாம்.
எனவே விழிப்புற்றோர் தவறான நேரங்களில் செல்வதில்லை.

காட்சிகளும், ஒலிகளும், சுவைகளும், நுகர்வுகளும், ஸ்பரிசங்களும் கூட—
இவை மனிதருக்குப் போதை தருவன,
இந்தப் பற்றுகளை விட்டபின்
சரியான நேரத்தில் காலை உணவு கேட்கச் செல்ல வேண்டும்.

சரியான நேரத்தில் உணவு பெற்ற பிக்கு
தானாகத் திரும்பி வந்து, தனியாக அமர்ந்து,
மனத்தில் பிரதிபலித்தவாறு, அமைதியுடன்
புறப்பொருட்களால் கவனம் திசை திரும்பாதவாறு உணவு உண்ண வேண்டும்.

மற்ற செவிகொடுத்துக் கேட்பவருடன் (பௌத்த சீடருடன்) பேச நேர்ந்தால்,
அது மற்ற பிக்குகளாகவோ வேறு யாராக இருப்பினும்,
உன்னதமான அறத்தைப் பற்றியே பேசவேண்டும்,
பிறரை இகழவோ, குறை கூறவோ கூடாது.

சிலர் சர்ச்சையைத் தோற்று வித்து வார்த்தைப் போர் நடத்துவார்கள்,
ஆனால் நாம் அதைப் போற்றுவதில்லை. அறிவிலிகள் இப்படிப்பட்ட பேச்சுக்களோடு
பற்றுக் கொள்வதால் அதனால் உண்டாகும்
மனவெழுச்சி அவர்களை இழுத்துக் கொண்டு செல்கிறது.

உண்மையான மெய்ஞ்ஞானம் உள்ள சீடர்
பகவரால் போதிக்கப்பட்ட அறத்தைக் கேட்ட பின்:
கொடுக்கப்பட்ட உணவையும், உட்காரும் இடத்தையும், உறங்கும் இடத்தையும்,
நீரையும் அக்கறையுடன் பயன்படுத்த வேண்டும். ஆடைகளையும் கவனமாகத் துவைக்க வேண்டும்.

எனவே ஒரு பிக்கு யாசித்த உணவுடனும்,
உட்காரவும்,படுக்கவும் உள்ள குடிலுடனும்,
ஆடைகளைத் துவைக்கும் நீரோடும்
தாமரை இலைமீது நீர்த்துளி ஒட்டாதது போல கறைபடியாமலும்,

நான் இப்போது இல்லற மக்களுக்கான விதிமுறைகளைக் கூறுகிறேன்,
இதன் படி ஒழுகினால் அவர்கள் ஒழுக்கமானவராவார்கள்.
ஏனென்றால் பொருட்செல்வம் உள்ள ஒருவர்
ஒரு பிக்கு பயிலும் பயிற்சியை மேற்கொள்ள முடியாது.

உயிர்களைக் கொல்லாதீர்கள். அவற்றை கொல்வதற்குக் காரணமாகவும் இருக்காதீர்கள்,
உயிர்க்கொலை செய்வதைப் போற்றாதீர்கள்,
எந்த உயிரையும்—அது பலவீனமாக இருப்பினும்
அல்லது பலமுள்ளதாக இருப்பினும்—துன்புறுத்தாதீர்கள்.

மற்றவருடையது என்று தெரிந்த பின்—எதுவானாலும், எங்கும்—
கொடுக்கப் படாதவற்றைத் திருடாதீர்கள்.
அப்படித் திருடவும் மற்றவரைத் தூண்டாதீர்கள்,
திருடுதலைப் போற்றாதீர்கள்—இந்தக் கொடுக்கப் படாதவை எதனையும்


எரியும் நிலக்கரித் துண்டுகள் கொண்ட குழியைத் தவிர்ப்பது போல,
அறிவுள்ளவர் பிரமச்சரிய வாழ்வு வாழட்டும்;
அப்படிப் பிரமச்சரிய வாழ்வை மேற்கொள்ள முடியா விட்டால்
மற்றவர் துணையோடு எல்லை தாண்டி தவறான பாலியல் உறவுகள் கொள்ள வேண்டாம்.

ஒரு அரச சபையிலும், தொழிலாளர்கள் சங்கத்திலும் அல்லது
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போதும், பொய் பேச வேண்டாம்,
மற்றவரைப் பொய் பேச வற்புறுத்தவும் வேண்டாம்,
எல்லாவிதப் பொய்களையும் தவிர்க்க வேண்டும்.

இந்த அறத்தைப் பயில்கின்ற இல்லறத்தார்
ஒருபோதும் போதை தரும் பானங்களை அருந்த வேண்டாம்.
மற்றவரை மது அருந்தக் கட்டாயப் படுத்த வேண்டாம், அருந்தியவரைப் போற்ற வேண்டாம்.
ஏனென்றால் போதை மனத்தைக் குழப்பிவிடும்.

மது அருந்தியமையால் முட்டாள்கள் பல தீமைகளைச் செய்கின்றனர்,
விவேகமற்று மற்றவரையும் அக்கறையின்றிச் செயல்படச் செய்கின்றனர்.
எனவே இல்லறத்தார் மனத்தைக் கெடுக்கும் இத்தகாத செய்கையைத் தவிர்க்க வேண்டும்,
ஆனால் குழம்பிய மனத்தையும் பொருட்படுத்தாமல் முட்டாள்கள் குதூகலமடைகின்றனர்.


உயிர் கொலை செய்யாதே, கொடுக்காததை எடுக்காதே,
பொய் பேசாதே, போதைக்கு அடிமையாகாதே,
பாலியல் உறவைத் தவிர்த்து பிரமச்சரிய வாழ்வை மேற்கொள்,
தவறான நேரத்தில் உணவு யாசிக்கச் செல்லாதே, இரவில் உண்ணாதே.

ஆபரணங்களை அணியாதே, நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தாதே,
தரையைப் படுக்கையாக்கு அல்லது ஒரு பாயில் படு:
இதுவே உபோசத தினங்களில் எடுக்கும் எட்டு நேர்த்திக்கடன்கள்
இவை துக்க முடிவுக்குச் சென்ற புத்தர் போதித்த அறிவுரை.

உள்ளத்தில் பக்தியுடன் அந்த உபோசதர்கள்
பதினான்காம், பதினைந்தாம், எட்டாம் நாட்களிலும், மற்றும்
நிலவின் அரை மாதச் சிறப்பு நாட்களிலும்
இந்த எட்டு ஒழுக்கங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பக்தியுள்ளம் கொண்ட உபோசதம் கடைபிடித்த அந்த அறிவாளி,
மறுநாள் அதிகாலை,
—அவர்களால் முடிந்த—உணவையும் பானங்களையும்
பிக்கு சங்கத்திற்கு வழங்கி அச்செயலால் ஆனந்தப் படட்டும்.

அறம்கூறும் வழியில் தாயையும் தந்தையையும் தாங்கி நிற்க வேண்டும்,
வணிகர்கள் தங்கள் தொழிலை நேர்மையோடு செய்ய வேண்டும்,
இந்த இல்லறமக்களுக்கான விதிமுறையை ஊக்கத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்—
பின் அவர்கள் அந்தச் சுயமாகப் பிராகாசிக்கும் தேவர்களிடம் வந்து சேர்வார்கள்.