சுத்த நிபாதம் 2.2

ஆமகந்த சூத்திரம்: உணவும் “துர்நாற்றத்தின்”—உண்மையான பொருளும்

கேள்வி:
காட்டுத் தினையும், தானியமும், பயறும்
இளம் தழைகளும், கிழங்குகளும், காட்டுப் பழங்களும்—
நேர்மையாகப் பெற்ற இவற்றை ஒழுக்கம் உள்ளோர் உண்கின்றனர்,
அவர்கள் புலன் இன்பங்களுக்காகப் பொய் சொல்வதில்லை.

நீங்கள் மற்றவர் தரும் நன்கு தயாரிக்கப்பட்ட
சமைக்கப்பட்ட அரிசி சாதமும், மற்ற
சுவையான உணவையும் அருந்துகின்றீர்கள்.
ஆனால் ஓ கஸ்ஸப்பரே! துர்நாற்றத்தையும் [அழுகும் மாமிசத்தையும்] உண்கின்றீர்.

“துர்நாற்றம் எனதல்ல,” என்று
ஓ பிரம்மனின் உறவினனே நீங்கள் சொல்லலாம்,
நன்றாகத் தயாரிக்கப்பட்ட அரிசி சாதமும்
கோழிக் கறியும் உண்ணும்போது;
ஆனால், ஓ கஸ்ஸப்பரே! இதன் பொருள் என்ன?
உங்கள் உணவின் துர்நாற்றம் [தூய்மையற்ற தன்மை] எது போன்றது?

பதில்:
கொலை புரிவது, சித்தரவதை செய்வது, ஏன் உருக்குலைப்பதும் கூட,
கட்டிவைத்து, திருடி, பொய் பேசி, ஏமாற்றுவது;
பித்தலாட்டம், கள்ள உறவு, திருட்டு வழிகளை ஆராய்வது:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

அளவற்ற ஆசைகளும் இன்பங்களையும் வேண்டுவோர்
சுவைக்கு ஆசைப்படுவோர், தூய்மையற்ற செயல் புரிவோர்
எல்லாம் சூனியமென்று வாதிப்போர், சமத்துவமற்றவர், பயில்விக்கக் கஷ்டமானோர்:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

முரட்டுத்தனமுடையவராய், இரக்கமற்றவராய் இருப்பது,
ஒருவரைக் காணாதபோது பழியுரைப்பது, ஒருவரின் நண்பர்களுக்குத் துன்பம் விளைவிப்பது,
கல்நெஞ்சுடையவராய் இருப்பது, அகந்தையுடனும், பேராசையுடனும் இருப்பது:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

கோபப்படுவோர், முரண் பிடிப்போர், விரோதம் உடையோர், போலி மமதை கொண்டோர்,
ஏமாற்றுவோர், பொறாமைப் படுவோர், தற்பெருமையும் கூட உள்ளவர்,
அதீத ஆணவம், தீயவரோடு பழகுதல்:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

நெறிகெட்ட நடத்தையும், வாங்கிய கடனைத் திருப்பித் தராததும்,
வஞ்சனை செய்வதும், மக்களிடையே பிளவை உண்டாக்குவதும், தொழில் முறையில் ஏமாற்றுவதும்—
உலகில் தீய செயல் செய்யும் துச்சமான மனிதர்:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

மற்ற உயிரினங்களிடம் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வது,
மற்றவர் பொருளை எடுத்துக் கொள்வது, தீங்கு செய்வது,
ஒழுக்கக் கேட்டோடு, குரூரமாக, கொடுமையாக, மரியாதையில்லாமல் நடப்பது:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

பேராசையோடு அல்லது வெறுப்போடு மற்றவரைத் தாக்குவது,
தீச்செயல் செய்வதற்கே மனம் நாடுவது,
மரணத்தின் பின் இருட்டான இடம் செல்கின்றனர்;
அவர்கள் கீழான [நரகத்தில்] மறுபிறப்பெடுப்பார்:
இவையே ஒருவரைத் தூய்மையற்றவராக்குகிறது. புலால் உண்பதால் ஒருவர் ஒழுக்கங்கெட்டவராவதில்லை.

மீனை, மாமிசத்தை உண்பதால் அல்ல, அம்மணமாகச் செல்வதால் அல்ல,
தலைமுடியைப் பிய்த்துக் கொள்வதால் அல்ல,
தலைமுடியை வளர்த்துச்
சடைத் தலையராவதால் அல்ல,
எரிக்கப்பட்ட பிணத்தின் சாம்பலைப் பூசிக் கொள்வதால் அல்ல,
கரடுமுரடான தோலாடைகளை [புலித் தோல் போன்று] அணிவதால் அல்ல,
யாகங்கள் செய்வதால் அல்ல,
சாவற்ற நிலையை அடைவதற்குக் கடுந்தவம் செய்வதால் அல்ல,
மந்திரங்கள் சொல்வதாலோ, காணிக்கை செலுத்துவதாலோ அல்ல,
பூசை, ஹோமம், காலத்துக்கேற்ற [பண்டிகை சமயங்களில்] சமயச்சடங்குகள் செய்வதால் அல்ல
சந்தேகங்கள் கொண்ட ஓர் உயிர் தூய்மை அடைவது.

புலன்களைப் பாதுகாத்து, நற்கடைப்பிடியுடன் [கவனத்துடன்] இருந்து,
அறத்தில் உறுதியுடன், நேர்மையோடு வாழ்ந்து
பற்றுகளுக்கு அப்பாற்சென்று, துக்கங்களை விட்டொழித்த மேன்மையானவர்,
பார்த்ததையும் கேட்டதையும் கண்டு கறைபடியமாட்டார்.

விவரிப்பவர்:
அந்த வேதம் தெரிந்தவருக்கு, மந்திரங்களில் தேர்ந்தவருக்கு [கேள்வி கேட்டவருக்கு]
திரும்பத் திரும்ப இனிமையான செய்யுள் வடிவில் இந்தத் தலைப்பைப் [யார் தூய்மையானவர் என்ற]
போதித்துத் தெளிவாக்கினார்.
மாசில்லாத, பற்றில்லாத தொடர்வதற்குக் கஷ்டமான அவர்—தூய்மையானவர்.

தூய்மையான, துக்கங்களை ஒழித்த
[கஸ்ஸப்ப] புத்தர் நன்றாக விளக்கியதைக் கேட்டவர்
பணிவான உள்ளத்தோடு ததாகதரின் பாதங்களை வணங்கி
தன்னை அங்கேயே துறவற வாழ்க்கையில் [சங்கத்தில்] அனுமதிக்கக் கேட்டுக் கொண்டார்.