சுத்த நிபாதம் 2.3

ஹிரி சூத்திரம்: மனச்சாட்சி

“நான் உன் நண்பன்,” என்று சொல்லியும் ஒருவன்
நண்பன் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், அவன்
மனச்சாட்சி இல்லாதவன்,
உங்களை வெறுக்கின்றான்.
அவனை இவ்வாறு தெரிந்து கொள்ளுங்கள்:
“நீ என் நண்பன் இல்லை.”

எவனொருவன் இன்பவார்த்தைகளை நண்பர்களிடம் பேசியும்
அதன்படி நடக்காவிட்டால்,
மெய்ஞ்ஞானம் உள்ளவர் இதைப்
புரிந்து கொள்வார்:
“வெட்டிப் பேச்சாளன், செய்கையைக் காணோம்.”

தவறாமல் குறை கண்டு பிடிப்பான், பிரச்சனையை வளர்ப்பான்
அப்படிப்பட்டவன் ஒரு நண்பன் இல்லை;
ஆனால் ஒருவனை நம்பமுடிந்தால், குழந்தை மார்பை நம்புவதுபோல,
அவனே உண்மையான நண்பன்.
யாரும் பிரித்து விட முடியாத நண்பன்.

ஆசீர்வாதங்களையும் நல்வினைப்பயனையும் மனத்தில் வைத்தவாறு
தன் பொறுப்புகளைச் சுமக்கும் ஒருவன் (கடும் முயற்சி செய்பவன்)
புகழக் கூடிய மகிழ்ச்சியையும் ஆனந்த நிலைகளையும்
தோற்றும் காரணங்களை வளர்க்கிறான்.

தனிமை என்ற போஷாக்கை அருந்தி,
உன்னத அமைதியில் திளைத்து
அறத்தின் ஆனந்தத்தைச் சுவைப்பவன்
துக்கத்திலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் விடுபடுகிறான்.