சுத்த நிபாதம் 2.4

மங்கள சூத்திரம்: மங்களம்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகன் அச்சிரமத்தில் எழுந்தருளியிருந்தபோது, இரவு வெகு நாளிகை சென்ற பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரன், புத்தபகவானை அணுகி அவரை வணங்கி ஒருபுறம் நின்றான். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.

‘பெருத் தொகையான தேவரும், மனிதரும் தமது சிறப்பை (அபிவிருத்தியை) விரும்பி, மங்களந்தருபவை எவை என எண்ணி வந்தார்கள். உத்தமமான மங்களம் எது எனக் கூறியருள்வீராக.’

அறிவில்லாதவரோடு பழகாதிருத்தல், அறிவாளிகளோடு பழகுதல், போற்றத்தக்கோரைப் போற்றுதல் என்னும் இவை உத்தமமான மங்களங்கள்.

உகந்த பிரதேசத்தில் வாசஞ் செய்தல், முன்னே புண்ணிய கன்மங்களைச் செய்தவராயிருத்தல், தன்னை நல்வழியில் உய்த்துக் கொள்ளுதல் இவை உத்தமமான மங்களங்கள்.
நிறைந்த கேள்வி (அறிவு) உடையவராயிருத்தல், கலைகளில் திறமையுடையவராயிருத்தல், நன்கு பயிற்றப்பட்ட விநயமுடையவராயிருத்தல், இனிய பேச்சுடையவராயிருத்தல் இவை உத்தமமான மங்களங்கள்.

தாய் தந்தையரை ஆதரித்தல், மனைவி மக்களைப்பேணுதல், வியாகூல மில்லாத தொழில் இவை உத்தமமான மங்களங்கள்.

பாவங்களை மேற்கொள்ளாதிருத்தல், மேற்கொண்ட பாவச் செயல்களை மேலும் செய்யாது விலக்குதல், மது பானத்தை விலக்குதல், அறத்தில் அயர் வின்றியிருத்தல் இவை உத்தமமான மங்களங்கள்.

கௌரவம், பணிவு, திருப்தி, நன்றியறிதல், சரியான நேரத்தில் அறவுரை கேட்டல் இவை உத்தமமான மங்களங்கள்.

பொறுமை, இனிய சுபாவம் சமணர்களைத் தரிசித்தல், உசிதமான காலத்தில் அறநெறிபற்றி உரையாடல் இவை உத்தமமான மங்களங்கள்.

தவம், புனித வாழ்வு, ஆரிய சத்தியங்களை உணர்தல், நிர்வாணத்தை அனுபூதியாக்கிக் கொள்ளுதல் (மெய்யுணர்வாக்கிக் கொள்ளல்) இவை உத்தமமான மங்களங்கள்.

உலகத்தொடர்பினால் கலங்காத உள்ளம், துயரின்மை, களங்கமின்மை, சேஷமம் இவை உத்தமமான மங்களங்கள்.

எங்கும் இவ்வாறு நடந்து கொள்பவர், எவ்வாற்றானும் தோல்வியின்றி யாண்டும் சுகம் அடைவார். அவர்களுடையதே இந்த உத்தமமான மங்களங்கள்.