சுத்த நிபாதம் 2.5

சூசிலோம சூத்திரம்—யாக்ஷை சூசிலோமவிற்கு

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை புத்த பகவான் கயாவில் சூசிலோம என்ற யாக்ஷையின் இடத்தில் இருந்த கல் படுக்கையில் தங்கியிருந்தார். அப்போது யாக்ஷைகளான காரா மற்றும் சூசிலோம இருவரும் அருகில் நின்று இவ்வாறு பேசிக் கொண்டனர்:

“அது ஒரு துறவி.” என்றான் காரா.

“அவன் உண்மையான துறவி அல்ல. ‘சாதாரணத் துறவி’ தான்; ஆனால் பொறு. நான் சென்று அவன் உண்மையான துறவியா அல்லது ‘சாதாரணத் துறவி’ யா என்று விசாரித்து விட்டு வருகிறேன்.”

பின் யாக்ஷை சூசிலோம பகவரிடம் சென்று தன் உடலை பகவர் மீது அழுத்தினான். இதைக் கண்ட பகவர் பின் வாங்கினார். யாக்ஷை அவரிடம், “என்ன, என்னைக் கண்டு பயமா துறவியே?” என்று கேட்டான்.

“நண்பனே உன்னை கண்டு எனக்குப் பயம் இல்லை, ஆனால் உன் தொடுகையில் கேடு உள்ளது.”

“உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன், துறவியே. பதில் கூறாவிட்டால், உன் மனத்தைக் கட்டிப் போட்டு அல்லது நெஞ்சைப் பிளந்து அல்லது கால்களைப் பற்றிக் கங்கை ஆற்றின் மறுகரையில் வீசி விடுவேன்,” என்று மிரட்டினான்.

“நண்பரே! தேவர்கள், மாரர்கள், பிரமர்கள் வாழும் உலகிலோ அல்லது துறவிகள், பிராமணர்கள், தெய்வங்கள், ஆவிகள், மனிதர்கள் வாழும் உலகங்களிலோ எவராலும் என் மனத்தைக் கட்டிப்போட அல்லது என் நெஞ்சைப் பிளக்க அல்லது கால்களைப் பற்றிக் கங்கை ஆற்றின் அக்கரையில் வீசுக்கூடியவர் யாரையும் காணவில்லை; இருந்தாலும் நண்பரே, கேட்க விரும்புவதைக் கேள்.”

பகவரை சூசிலோம பா வடிவில் கேட்டான்:

சூசிலோம:
எங்கிருந்து வந்தன காமம், வெறுப்புக்கான காரணங்கள்?
பிடிப்பது, பிடிக்காதது, பீதி ஆகியவை எவற்றிலிருந்து பிறந்தன?
எண்ணங்கள் தோன்றி மனத்தை எவ்வாறு தொந்தரவு செய்கின்றன?
சிறுவர்கள் (பிடிபட்ட) காக்கையைத் துன்புறுத்துவது போல?

புத்தர்:
ஆணவத்திலிருந்து காமமும், வெறுப்பும் தோன்றின,
பிடிப்பது, பிடிக்காதது, பீதி ஆகியவையும் அங்கிருந்தே தோன்றின,
எண்ணங்களும் அங்கிருந்தே தோன்றி மனத்தை உருக்குலைக்கின்றன.
சிறுவர்கள் (பிடிபட்ட) காக்கையைத் துன்புறுத்துவது போல.

ஆசையிலிருந்து பிறந்த அவை
ஆணவத்தில் தோன்றுகின்றன
ஆலமரக் கிளைகளில் பிறக்கும் வேர்களைப்போல,
புலன் ஆசைகளுக்குப் பற்றுக் கொள்கின்றன,
வனத்திலுள்ள மரங்கள் துர்நாற்றமுள்ள கொடிகளால் (ஒரு வகைக் கொடி) சுற்றப் படுவதுபோல.

கேள், யாக்ஷையே, இவற்றின் காரணங்களைத்
தெரிந்தவர்—அவற்றை வெற்றி கொள்கின்றனர்.
இதுவரை கடக்க முடியாத, கடக்கக் கடினமான
வெள்ளத்தைக் கடந்துவிட்டு, இனிமேல் மீண்டும் பிறப்பதில்லை.