சுத்த நிபாதம் 2.6

தம்மச்சாரிய சூத்திரம்: ஒரு பிக்குவின் வாழ்வில் தவறான நடத்தை

இல்லற வாழ்க்கையை நீத்துத்
துறவற வாழ்க்கை மேற்கொண்டு
அறவழி வாழும் நெறிநின்ற வாழ்க்கையே
சிறந்த செல்வம் என்பார்கள். ஆனால்,
இல்லறத்தை நீத்துத் துறவறம் மேற்கொண்ட பின்னும்,
கண்டபடி காட்டுமிராண்டி போல,
இழிந்த மொழிகளைப்பேசி, பிறர்க்குத்
தீங்கிழைப்பதில் மகிழ்வுற்றுத் தீய வாழ்வு வாழ்ந்தால்
அவர்களின் மன மாசுகளே அதிகரிக்கும்,

அத்தகைய அறியாமையால் சூழப்பட்ட பிக்கு
பிறரோடு சண்டையிடுவதில் மகிழ்வுற்றால்
எவ்வளவு விளக்கிக் கூறினாலும் அவர்
புத்தரின் தம்மத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்;

அறியாமையின் விளைவாக
மேன்மையானோருக்குத் தீங்கிழைப்பது,
நரகவாழ்வு அனுபவிக்க இட்டுச் செல்லும்
பெரும் குற்றம் என்பதை அவர் அறியார்.

அப்படிப்பட்ட பிக்கு மரணத்தின் பின்
துக்கமே அனுபவிப்பார்.
ஒரு பிறப்பிலிருந்து மற்றதற்கு
மேலும் மேலும் கீழ் உலகங்களுக்கே செல்வார்.

அத்தகைய மாசுகள் உள்ள ஒருவர்
பல ஆண்டுகள் பயன்படுத்தப் பட்ட,
சுத்தம் செய்ய மிகக் கடினமான,
முழுமையாக நிரம்பிய
பொதுக்கழிவறையைப் போன்றவர்.

ஓ பிக்குகளே, அப்படிப்பட்ட ஒருவரைக்
காண்பீர்களானால் – துறவு பூண்டும் இல்லற இன்பத்தில் பற்றுக் கொண்டு
தீய ஆசைகளையும், தீய எண்ணங்களையும், தீய நடத்தைகளையும் கொண்ட அவரை,
நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
ஒதுக்கி வைத்து, அவரிடமிருந்து நீங்கள் ஒதுங்கியிருந்து,
குப்பை கூலத்தைப் பெருக்கி எறிவது போல விலக்கித் தள்ளி விடுங்கள்.

நெல்லில் உள்ள பதரைக் கொழித்துப் பிரித்தெடுப்பதைப்போல
அந்தப் போலித் துறவிகளை,
அகம்பாவம் கொண்ட துறவிகளை,
தீய ஆசைகளையும் தவறான வழிகளையும் கொண்ட அவர்களை ஊதித் தள்ளுங்கள்.

பின் தூய வாழ்வு வாழுங்கள், தூய்மையானவரோடு சேருங்கள்
நற்கடைப்பிடியுடன் வாழுங்கள்
இணக்கத்துடன் வாழுங்கள், அறிவோடு—
துக்கத்தின் முடிவை வந்தடைவீர்கள்.