சுத்த நிபாதம் 2.7

பிராமண தம்மிக்க சூத்திரம்—தன்மப்படி பிராமணர் எப்படி வாழ்ந்தார்கள்?

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகர் ஆசிரமத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது அரண்மனை போன்ற வசதியான பெரும் வீடுகளில் வாழும், முதுமையினால் பலவீனமடைந்து, நைந்து, தளர்ந்துபோன கோசல பிராமணர்கள் சிலர், பகவரைப் பார்க்கச் சென்று அவரிடம் நலம் விசாரித்த பின்னர் ஒருபுறமாக அமர்ந்து பகவரிடம் கேட்டனர், “கோதமரே, முற்காலத்தில் பிராமணர் நடந்து கொண்ட முறையில் இன்றும் பிராமண தர்மத்தைப் பின்பற்றும் பிராமணர்கள் உள்ளனரா?” என்று கேட்டனர்.

“இல்லை பிராமணர்களே, முற்காலத்தில் பிராமணர் நடந்து கொண்ட வழியில் இன்றும் பிராமண தர்மத்தைப் பின்பற்றி வாழும் பிராமணர்கள் எவரும் இப்போது இல்லை.”

“உங்களுக்குத் தொல்லையேதும் இல்லையெனில் அருமை கோதமர் பழைய பிராமண தர்மத்தைப் பற்றி விளக்கிப் கூறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

“அப்படியானால் பிராமணர்களே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேளுங்கள். மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.”

“சரி போற்றுதற்குரிவரே.” என்று அந்த பெரும் மாளிகைகளில் வாழும் பிராமணர்கள் பகவரிடம் கூறினர். அவர் சொன்னதாவது:

பழங்காலத்தில் முனிவர்கள் எளிமையாக வாழ்ந்தனர்,
கட்டுப்பாட்டோடு வாழ்ந்தனர்,
அவர்கள் தங்கள் நன்மைக்காக ஆசைக்கு வித்திடும்
ஐந்து அடித்தளங்களைக் கைவிட்டு விட்டனர்.

அக்காலப் பிராமணர்கள் ஆடுமாடுகளை வைத்திருக்கவில்லை,
அவர்களிடம் தங்கமும் இல்லை, தானியங்களையும் அவர்கள் சேமித்து வைத்திருக்க வில்லை.
அவர்களுக்குத் தானியமாகவும், செல்வமாகவும் இருந்தது அவர்களது வேத மரபே
—இந்தச் செல்வத்தை, அவர்கள் நன்கு பாதுகாத்து வந்தனர்.

அவர்களுக்குத் தேவையான சமைக்கப்பட்ட உணவு வகைகள்
கதவருகில் வைக்கப்பட்டது (மேன்மையை நாடுவதால்).
அவர்கள் மீது இருந்த பக்தியின் காரணமாக அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்
என்று மக்கள் (தானம் கொடுப்பவர்கள்) நினைத்தனர்.

பின் பல மாகாணங்களிலும், மாநிலங்களிலும்
செல்வந்தர்கள் பிராமணர்களுக்கு மரியாதை செலுத்தும்
வகையில் பல வண்ணங்களில் உருவாக்கப்பட்ட
ஆடைகளும், ஆசனங்களும், வீடுகளும் கூடத் தானமாகக் கொடுத்தனர்.

வென்றெடுக்க முடியாதவர்களாக இருந்த பிராமணர்கள்,
தூய்மையானவர்களாகவும் இருந்தனர்—
அறவழி நடந்ததால் பாதுகாக்கப் பட்டனர். இல்லறமக்கள் வீட்டருகில் சென்றால்
எவரும் அவர்களுக்கு இடையூறு தரவும் இல்லை, அவர்களைத் தடுக்கவும் இல்லை.

நாற்பத்தெட்டு வயதாகும் வரை
அவர்கள் பிரமச்சரிய மாணவ வாழ்க்கை நடத்தினார்கள்—
அந்தக் காலத்துப் பிராமணர்கள் அறிவைத் தேடியும்
நன்னடத்தையைத் தேடியும் வாழ்ந்தனர்.

அந்தக் காலப் பிராமணர்கள், மற்றவர் மனைவியரிடம்
உறவு தேடிச் செல்லவில்லை; மற்ற குலத்துப் பெண்களையும் மனைவியராக ஏற்கவில்லை;
இருவர் மனம் ஒத்துப் போனால் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தினர்.
ஒருவருக்கொருவர் திருப்தியோடு இருந்தனர்.

அக்காலப் பிராமணர்கள், பெண்களின்
மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவு
கொள்ளவில்லை. மற்ற சமயங்களில்
மட்டுமே மனைவியரோடு கூடினர்.

பிரமச்சரிய வாழ்வை அவர்கள் புகழ்ந்தனர்.
ஒழுக்கத்தையும், நேர்மையையும், நட்புணர்வையும், தவம் செய்வதையும்,
அமைதியையும், எவருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதையும்,
பொறுமையையும் போற்றிக் காத்தனர்.

அவர்களுள் பிரம்மனைப் போலக்
கடும் தவ முயற்சி செய்தோர் (அவர்களுள் சிறந்தவர்) பாலியல் உறவுகளில்
ஈடுபடவில்லை. அவர்கள் கனவில்கூடப்
பாலியல் உறவை நாடவில்லை.

பின் அவர்களுள் சிலர் மார்க்கத்தைத் தொடர்ந்து
மெய்ஞ்ஞானம் பெற்று
பிரமச்சரிய வாழ்வையும், ஒழுக்கத்தையும்
பொறுமையையும் போற்றினர்.

சாதம், வெண்ணை, எண்ணெய் ஆகியவற்றையும், துணிகள்,
படுக்கை போன்றவற்றையும், பிச்சைகேட்டுப் பெற்றபின்
அவற்றை நேர்மையாகச் சேர்த்து வைத்தனர். பின் அவற்றை யாக ஆகுதியில் இட்டு
முன்னோர்களுக்குச் சமர்ப்பணம் செய்தனர்:
அத்தகைய சடங்குகளில் ஆடு,மாடுகளை
உயிர்ப்பலி கொடுக்கவில்லை.

தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் வேறு சொந்தங்களைப்
போலவே மாடுகளும் எமது சிறந்த சொந்தங்களே.
அவற்றிலிருந்து பல பிணி தீர்க்கும் மருந்துகள்
தமக்குக் கிடைக்கின்றன என எண்ணினர்.

மாடுகள் நன்மையும், சக்தியும் தருபவை, நல்ல
தோற்றமும், உடல் நலமும் தருபவை.
இந்த உண்மையை அறிந்ததனால்
மாடுகளை அவர்கள் ஒருபோதும் கொல்ல வில்லை.

தர்ம நெறி நடந்த அந்தப் பிராமணர்கள்
செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்தனர், செய்யக் கூடாததை முற்றாகத் தவிர்த்தனர்.
இதை அறிந்து வாழ்ந்த அவர்கள் அழகாகவும், உடற்கட்டோடும்,
ஒளிரும் தோல் கொண்டவராகவும், கீர்த்தியும் பெற்றிருந்தனர்.
உலகில் இவர்களது இத்தகு நல்லியல்புகள் தெரியவந்த போது
இம்மக்கள் செழுமையோடு வாழ்ந்தனர்.

ஆனால் பின்னர் அவர்களது ஒழுக்கம் குன்றத் துவங்கிக் களங்கப் பட்டது.
மெல்ல மெல்ல அவர்கள் மன்னர்களின் அரசபோக ஆடம்பர வாழ்க்கையையும்,
அரண்மனைப் பெண்டிரின் அலங்காரத்தையும் சுக வாழ்வையும்
கவனித்து அத்தகைய வாழ்க்கையை விரும்பலாயினர்.

வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட இரதங்களும்,
சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய குதிரைகளின் சேணமும்,
அழகாக வடிவமைக்கப்பட்ட
பல அறைகளைக் கொண்ட மாளிகைகளும்,

அழகிய பெண்கள் கூட்டம்சூழ வாழ்வதும்,
செல்வத்திற்கு அடையாளமாக இருந்த மாட்டு மந்தைகளும்—
இந்தப் பெரும் செல்வர்களை யெல்லாம் பார்த்துப் பார்த்து பிராமணர்கள் உள்ளத்தில்
அத்தகைய வாழ்வு வாழ வேண்டுமென்ற பேராசை எழுந்தது.

எனவே சிலர் வேத மந்திரங்களைப் புனைந்து
அவற்றை ஓதிச் சென்று, ஒக்காக மன்னனைச் சந்தித்து
“மன்னனே உங்களிடம் இருப்பது பெரும் செல்வம், பெரும் தானியக்குவியல்,
எங்களுக்கும் அவற்றைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்” எனக் கேட்டனர்.

அந்த ராஜா, இரதங்களின் பிரபு,
பிராமணர்களால் யாசிக்கப்பட்ட அந்தக் கோரிக்கைக்கு
இணங்குமாறு வற்புறுத்தப் பட்டான்.
அதன் விளைவாக மன்னன் அவர்களுக்குக் குதிரைகளையும், பணியாட்களையும்,
யாக குண்டம் அமைக்க அளக்கப் பயன்படும் கட்டையையும் ,
சோம பானம் தயாரிக்கத் தேவையானவற்றையும் தானமாக அளித்தான்.

மேலும் மாடுகளையும், படுக்கைகளையும் துணிவகைகளையும்,
அலங்காரம் செய்து கொண்ட ஒயிலான பெண்களையும்,
குதிரைகள் பூட்டப்பட்டு வேகமாகச் செல்லும் இரதங்களையும்,
குதிரைக்கு மேலிடும் அலங்காரப் போர்வையையும், அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகளையும்

தங்குவதற்குச் சுகமான
பல அறைகளோடு கூடிய வீடுகளையும்,
பலவிதமான தானியங்களும்,
பிராமணர்களுக்கு அளித்தான்.

இந்தச் செல்வங்களைப் பெற்ற அவர்கள்
அவற்றை யாக குண்டத்திலிட்டுச் சமர்ப்பணம் செய்யாமல்
சேர்த்து வைக்கவே ஆசைப் பட்டனர்.
பேராசை அவர்களை மேலும் ஆட்கொண்டது
—அவர்களது அவா அதிகரிக்க அதிகரிக்க—அவர்கள் மேன்மேலும்
புதிது புதிதாக வேத மந்திரங்களை இயற்றி அவற்றை
உச்சரித்துக் கொண்டு ஒக்காக மன்னனிடம் மீண்டும் மீண்டும் சென்றனர்.

“நீரும் நிலமும் உள்ளன
தங்கமும், தானியங்களும் செல்வம்.
அது போல மனிதருக்கு
ஆடுமாடுகளும் தேவை;
“உங்களிடம் இருப்பது பெருஞ்செல்வம் பெரும் தானியக் குவியல்,
எங்களுக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும் தானியத்தையும் செல்வத்தையும்”.

அந்த ராஜா, இரதங்களின் பிரபு
பிராமணர்களால் இணங்கச் செய்யப் பட்டான் – எனவே
சமர்ப்பணமாகப் பலி கொடுத்தான்,
மாடுகளை நூற்றுக்கணக்காக, ஏன் ஆயிரக்கணக்காகவும்.

ஆனால் குளம்பினாலும் (பாதம்), கொம்பினாலும்
மாடுகள் யாருக்கும் தீங்கு செய்ததில்லை.
ஆடுகளைப்போலச் சாந்தமானவை அவை
நமக்கு வாளி வாளியாகப் பால் தருகின்றன;
ஆனாலும் அந்த ராஜா அவற்றின் கொம்பைப் பிடித்தவாறு
வாளால் வெட்டிக் கொன்றான்.

பின் தேவர்களும், அசுரர்களும், அரக்கர்களும்,
இந்திரன் தலைமையில், நமது முன்னோரும் கூட இச்செயலைக் குறை கூறினர்,
“இவையெல்லாம் தர்மத்திற்கு மாறுபட்டது!”
இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
வாள் மாடுகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தது.

முற்காலத்தில் மூன்று தீமைகள் இருந்தன:
அவை ஆசை, பசி, சிதைவு; அவ்வளவே.
ஆனால் மாடுகள் கொல்லப் பட்டவுடன்
தொண்ணூற்று எட்டு நோய்கள் புதிதாகத் தோன்றின.

அதர்மத்துடன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்
பழங்காலத்திலிருந்து வந்தவை:
அவற்றினால் அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர்,
தர்மத்திலிருந்து விலகினர் சடங்கு செய்யும் பூசாரிகள்.

எனவே இந்தப் பழமையான பழக்கம், கீழ்த்தரமான பழக்கத்தைச்
சான்றோர் கண்டிக்கின்றனர்;
அதுபோன்ற நடத்தை இன்று காணப்படும்போது மக்கள்
சடங்கு செய்யும் பூசாரிகள் மீதே குறைகண்டனர்.

இவ்வாறு தர்மம் திசை திருப்பப் பட்ட போது,
வணிகரும் தொழிலாளரும் பிரிந்தனர்,
க்ஷத்திரியருக்குள்ளும் பிளவு ஏற்பட்டது.
மனைவியரையும் கணவர் வெறுத்தனர்.

பின் க்ஷத்திரியரும், அந்தப் பிரமனின் “உறவுகளும்” (பிராமணரும்)
ஜாதியின் மீது இருந்த பற்றிற்குக் கட்டுப்பட்டு
“பிறப்பு” பற்றிய நியதியை மறந்து
இன்பங்களுக்குக் கட்டுப்படலாயினர்.

இப்படிச் சொன்ன பிறகு அந்தப் பெரும் மாளிகைகளில் வழ்ந்த பிராமணர்கள் பகவரிடம் கூறினர்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவதுபோல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நாங்கள் அடைக்கலம் செல்கின்றோம். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றோம். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றோம். இன்றிலிருந்து எங்கள் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் எங்களை அவரிடம் அடைக்கலம் சென்ற உபாசகர்களாக (இல்லறச் சீடர்களாக) நினைவில் கொள்வாராக.”