சுத்த நிபாதம் 2.8

நவ சூத்திரம்—ஒரு ஓடம்

ஏனெனில்:
தன்மத்தை கற்றுக் கொடுக்கும் ஒருவரைப்
போற்றும் போது
—தேவர்கள் இந்திரனைப் போற்றுவது போல—
அவர் (கற்பிப்பவர்) கற்றவர், போற்றப்பட்டவர்,
உங்கள் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக
அறவழியைக் காட்டுவார்.

நீங்கள், தெளிவாக, விவேகத்துடன்,
பயிற்சிதரும் ஒரு ஆசிரியருடன் நட்புக் கொள்ளும் போது
அறத்தை அறவழியில் பயிற்சி செய்து,
பிரதிபலித்து,
முக்கியத்துவம் கொடுத்து,
கற்றவராகின்றீர்கள்,
தெளிந்த மனம் உடையவராகின்றீர்கள்,
மெய்ஞானம் உடையவராகின்றீர்கள்.

ஆனால் அற்பமான முட்டாளோடு பழகினால்
அவன் பொறாமைக்காரன்,
நோக்கத்திற்கு வராதவன்
நீங்கள் மரணம் அடையும் போது
அறத்தை இங்கேயே (இவ்வாழ்விலேயே) தெளிவுபடுத்திக் கொள்ளாததால்
உங்கள் சந்தேகங்கள் நிவர்த்திக்கப் படாது.

இது ஆற்றங்கரைக்குச் சென்ற ஒருவனைப் போல—
கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்—
அதில் அடித்துச் செல்லப் படுகின்றான் அவன்:
மற்றவர்களுக்கு எப்படி அவன் அக்கரைக்குச் செல்ல உதவ முடியும்?

அதேபோல:
எவனொருவன்
அறத்தைத் தெளிவு படுத்திக் கொள்ளவில்லையோ
அதன் கற்றவர் கூறிய
பொருளைப் புரிந்து கொள்ள வில்லையோ
சந்தேகங்களைக் கடக்க வில்லையோ:
அவன் எவ்வாறு மற்றவர்களைப்
புரிந்து கொள்ளச் செய்ய முடியும்?

ஆனால் ஒரு திடமான ஓடத்தில்
—சுக்கானும் துடுப்பும் உள்ள ஓடத்தில்—
செல்லும் ஒருவன்
கவனத்துடனும் (நற்கடைப்பிடியுடனும்) திறமையுடனும்
ஓடத்தைச் செலுத்தும் திறமை கொண்டவன்,
மற்ற பலருக்கும் ஆற்றைக் கடக்க உதவி செய்ய முடியும்.

அதேபோல
அறிவை அடைந்தவன், கற்றவன்,
தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவன், தடுமாற்றம் இல்லாதவன்
மற்றவர்களையும் அறிந்து கொள்ள வைக்க முடியும்—
அவர்கள் செவிகொடுக்க விரும்பினால்,
அவர்கள் கற்கத் தயாராக இருந்தால்.

எனவே:
நீங்கள்
நேர்மையான ஒருவரிடம்
நட்புக்கொள்ள வேண்டும்—
கற்றவர், அறிவாளி.

அவ்வாறு பயின்றால்
நோக்கத்தைத் தெரிந்து கொண்டு,
அறத்தை அனுபவிக்கும் போது,
உங்களுக்குக் கிடைப்பது பேரானந்தம்.