சுத்த நிபாதம் 2.9

கிம்சீல சூத்திரம்: எத்தகைய ஒழுக்கம் தேவை?

“ எத்தகைய ஒழுக்கத்தோடு,
எனென்ன பண்புகளோடு,
எப்படிப்பட்ட நடத்தையைப் பேணுவதால்
ஒருவர் சரியான முறையில் இருந்து
மேலான நோக்கத்தை அடைய முடியும்?

ஒருவர் தன்னைவிட மேன்மையானவரை
மதிக்க வேண்டும்
பொறாமைப்படக் கூடாது;
எந்த நேரத்தில் ஆசானைப் பார்ப்பதென்ற
அறிவு நுட்பம் இருக்க வேண்டும்;
ஒரு தம்ம போதனை நிகழும் போது
அதன் முக்கியத்துவத்தை
உணர வேண்டும்;
தெளிவாகப் போதிக்கப் படுவதை
உன்னிப்பாகக் கேட்க வேண்டும்;
சரியான நேரத்தில் தாழ்மையுடன், பிடிவாதத்தை விட்டுவிட்டு
ஆசிரியரிடம் செல்ல வேண்டும்;
போதனைகளை, அதன் பொருளை,
அடக்கத்தை, புனித வாழ்வை
நினைவுக்குக் கொண்டுவந்து
அதன்படி ஒழுக வேண்டும்.

அறத்தில் மகிழ்ந்து,
அறத்தைச் சுவைத்து,
அறத்தில் நிலைத்து,
அறத்தை எப்படி ஆராய்வதென்று அறிந்து
நுட்பத்தோடு பேச வேண்டும்.
அறத்தைக் தாழ்த்தும் வகையில்
ஒருவர் பேசக் கூடாது,
நேர்மையாக நன்கு கூறப்பட்ட வார்த்தைகளால்
தனது வாழ்க்கைக்கு
வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

சிரிப்பு, விதண்டைப் பேச்சு,
புலம்பல், வெறுப்பு,
ஏமாற்றுதல், தவறான வழிகாட்டுதல்,
பொறாமை, அகம்பாவம்,
எதிர்ப்பு, முரண்படுதல்,
கசப்பு, மோகமயக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து
போதை இல்லாமல் உறுதியோடு
சுதந்திரமாக வந்து போக வேண்டும்.

நன்றாக பேசப்பட்ட வார்த்தைகளின்
சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும்;
கற்றதும், அறிந்ததும்: அதன் சாரம் தான்
ஒருக்கம் (ஒருமுகப்படுதல்).

ஒருவர் அவசரப்பட்டாலோ, விவேகமற்று நடந்து கொண்டாலோ,
அவர் விவேகமும், கற்றதும்
வளர்வதில்லை.
மேன்மையானோர் கற்பித்த போதனைகளைக்
கேட்டு மகிழ்வோர்
பேச்சிலும், நடத்தையிலும், மனத்திலும்
சிறந்து விளங்குகின்றனர்.

அவர்கள் அமைதியில்,
சாந்தத்தில்
ஒருக்கத்தில் நிலை பெற்று
விவேகமானவரும், கற்றவரும்
அடைந்த (மரவைரம் போன்ற) உறுதியான நிலையை
அடைகின்றனர்.