சுத்த நிபாதம் 3.1

பபஜ்ஜ சூத்திரம்—துறவு மேற்கொள்வது

நான் துறவு மேற்கொள்வது பற்றி விவரிக்கிறேன்.
அவர், நற்காட்சி பெற்றவர் (பகவர்) எவ்வாறு துறவு மேற்கொண்டார் என்பதையும்,
துறவு மேற்கொள்ள என்ன விளக்கம் தந்தார் என்பதைப் பற்றியும் கூறுகிறேன்.
“இல்லற வாழ்வு நெரிசலானது,
குப்பைக்கூடம்.
துறவு மேற்கொள்வது
திறந்த வெளி.”
இதை அறிந்து அவர் துறவறம் பூண்டார்.

வீடு துறந்தபின்,
உடலால் தீவினைகளைத் தவிர்த்தார்.
தவறான பேச்சைக் கைவிட்டார்.
வாழ்வைத் தூய்மையாக்கிக் கொண்டார்.
பின் அவர், புத்தர், இராஜகிருஹம் நோக்கிச் சென்றார்.
மகத மக்களின் மலைக்கோட்டை அது.
அங்கு சென்று யாசித்து அலைந்தார்,
பல மேன்மையான அறிகுறிகளைக் கொண்டவராக.

பிம்பிசார மன்னன் அரண்மனையில் நின்றவாறு, அவரைப் பார்த்தார்.
பூரணமான உடல் அறிகுறிகளைப் பார்த்து:
“இவரைப் பாருங்கள், ஐயா.
என்ன அழகு, கம்பீரம், தூய்மை!
சிறந்த சுபாவம்!
கண்கள் கீழ் நோக்கியிருக்க, கடைப்பிடியுடன்,
ஒரு கலப்பையின் நீளத்திற்கு மட்டுமே முன் நோக்குகிறார்.
கீழ் குடியிற்பிறந்தவர் போலத் தெரியவில்லை:
அரண்மனைத் தூதர்களை உடனே அனுப்பி
அந்தத் துறவி எங்கு செல்கின்றார் என்று பார்த்து வரச் சொல்லுங்கள்.”

அவர்கள்—அனுப்பப்பட்ட தூதுவர்கள்—
அவரைப் பின் தொடர்ந்தனர்.
“எங்கு செல்வார் இந்தத் துறவி?
அவர் இருப்பிடம் எங்குள்ளதோ?”
அவர் வீடுவீடாக யாசித்துச் சென்றார்—
நல்ல கட்டுப்பாட்டோடு, புலன் கதவுகள் அடக்கப்பட்டு,
கடைப்பிடியுடன், விழிப்புடன்—
அவர் பிச்சா பாத்திரம் விரைவில் நிரம்பியது.
பின் அவர், அந்த முனிவர், யாசித்து முடிந்தவுடன்
நகரைவிட்டு நடந்தார் பாண்டவ மலைநோக்கி.
“அங்கு தான் அவர் இருப்பிடம் இருக்கும்.”
அவர் இருப்பிடம் சென்றதை அறிந்தவுடன்,
மூன்று தூதர்கள் அங்கேயே உட்கார்ந்தனர்,
ஒருவன் அரசனிடம் செய்தி கூறத் திரும்பினான்.
“அரசே! அந்தத் துறவி,
பாண்டவ மலை ஓரத்தில்,
ஒரு புலியைப்போல, ஒரு காளையைப்போல,
மலைப் பிளவில் உள்ள சிங்கத்தைப்போல அமர்ந்திருக்கிறார்.”

தூதுவனின் செய்தி கேட்ட
வீர ஆரிய மன்னன்
அரச வாகனத்தில்
நேரடியாகப் பாண்டவ மலைக்குச் சென்றார்.
வாகனம் செல்லக்கூடிய தூரத்திற்கு வாகனத்தில் சென்று பின் இறங்கி
நடக்கத் துவங்கினார்.
சென்றபின் அமர்ந்து
நலம் விசாரணைப் பரிமாற்றம்
செய்த பின்னர் அரசர்:
“நீர் இளையவர், இளமையுடையவர்,
கம்பீரமும், ஆரிய வீரனின்
தோற்றமும் கொண்டுள்ளீர்.
யானைப்படை அணிவகுப்புடன்
உள்ள சேனையின் தலைமையில்
நீர் நிற்பது மாட்சிமையுடையதாக இருக்கும்.
உங்களுக்கு நான் செல்வம் தருகிறேன்: அனுபவியுங்கள்
உங்கள் பிறப்பு பற்றிக் கேட்கிறேன்: எனக்குத் தெரியப்படுத்துங்கள்.”

“அரசே, அதோ நேர் எதிரில்
இமயமலை அடிவாரத்தில்
செல்வமும், வலிமையும் கொண்ட
கோசளர்கள் குடியிருக்கும்
நாடு உள்ளது:
சூரியவம்சத்தவன் நான்,
சாக்கிய குலத்தில் பிறந்தவன்.
அந்த வம்சாவழியிலிருந்து வீடு துறந்துள்ளேன்,
ஆனால் சிற்றின்பங்களை நாடி அல்ல.
சிற்றின்பங்களின் ஆபத்தை உணர்ந்து,
—துறவறத்தைப் பாதுகாப்பாகக் கருதி—
நான் முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளேன்.
அதை நினைத்து என் உள்ளம் குதுகலப்படுகிறது.”