சுத்த நிபாதம் 3.11

நாளக சூத்திரம்:நாளகருக்குப் போதனை

அசித முனிவர் தன் மதியத் தியானத்தின் போது,
முப்பது தேவர்கள் கொண்ட கூட்டத்தினர்
– மகிழ்ச்சியோடும் பேரானந்தத்தோடும்—
தூய வெள்ளை ஆடைகளை அணிந்தவர்களாக,
இந்திரனைப் போற்றி, விருது கொடிகளைப் பிடித்துக் கொண்டு,
ஆரவாரம் செய்வதைக் கண்டார்.
தேவர்கள் மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்டு அவர்
அவர்களுக்கு மரியாதை செலுத்தியபின் அவர்களிடம்:

“தேவர் சமூகம் ஏன் இவ்வளவு
ஆரவரம் செய்கின்றது?
ஏன் கொடிகளை ஏந்திக் கொண்டும்
அவற்றை அசைத்துக் கொண்டும் இருக்கின்றனர்?
அசுரர்களுடன் போர் முடிந்த போதும்
—தேவர்கள் அந்தப் போரில் வெற்றி பெற்றபோதும்
அசுரர்கள் தோற்கடிக்கப்பட்ட போதும்கூட—
இந்த அளவு கிளர்ந்த உணர்ச்சி
காணப்படவில்லையே.
என்ன அதிசயத்தைக் கண்டு
தேவர்கள் இப்படி மகிழ்கின்றனர்?
சத்தமிடுகின்றனர், பாடுகின்றனர்,
இசைக் கருவிகள் வாசிக்கின்றனர்,
கைதட்டுகின்றனர்,
ஆட்டம் போடுகின்றனர்.
மேரு மலை உச்சியில் வாழும்
உங்களைக் கேட்கிறேன்,
என் சந்தேகத்தை முடித்து வையுங்கள் வணக்கத்துக்குரியவர்களே.”

“போதிசத்துவர், மேன்மையான இரத்தினம்,
தன்னிகரில்லாதவர்,
மக்களின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் மானிட உலகில்
சாக்கிய நாட்டில்
இலும்பிணி என்ற ஊரில்
பிறப்பெடுத்திருக்கின்றார்.
அதனாலேயே நாங்கள் குதூகலத்தோடு உள்ளோம்.
அவர், உயிரினங்களுள் உயர்ந்தவர்,
மேன்மையான மனிதர்,
ஆண்களுள் காளை, மக்களுள் முதன்மையானவர்,
முனிவரின் பேர் கொண்ட சோலையில்
(தன்மச்) சக்கரத்தைச் சுழல வைப்பார்—
உயிரினங்களை வெல்லும்
வலிமையுள்ள கர்ச்சிக்கும் சிங்கத்தைப் போல.

இந்த வார்த்தைகளைக் கேட்ட அசிதர்
விரைவில் (சொர்க்கத்திலிருந்து) இறங்கி வந்து
சுத்தோதனர் இருப்பிடம் சென்றார்.
அங்கு ஒரு ஆசனத்தில் அமர்ந்து, சாக்கியரிடம்:
“இளவரசர் எங்கே? அவரை நானும்
காண வேண்டும்,” என்றார்.

பின் சாக்கியர்கள்
அசித முனிவரிடம்
அவர்கள் மகனை, இளவரசனை,
திறமையுள்ள பொற்கொல்லன்
உலையின் வாயில் வேலைப்பாடு செய்த
மிக அழகாகத் தூய நிறமுள்ள
தங்கம் போல
மின்னியவரைக் காட்டினர்.

கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளிவீச்சைப்போலத் தோன்றிய
இளவரசரைக் கண்டவர், தூய தாரகைகளுள் காளை வானில் போவது போல—
எரியும் சூரியன், இலையுதிர் கால
முகிற் கூட்டத்திடமிருந்து
விடுவிக்கப் பட்டது போல—
(அசிதர்) பெருமகிழ்ச்சி கொண்டார்,
அவர் உள்ளம் பேரானந்தம் அடைந்தது.

ஆகாயத்தில் தேவர்கள் ஆயிரம்
வட்டங்களாகப் பல ஆரைகள் கொண்ட
நிழற்குடை பிடித்திருந்தனர்.
தங்கக் கைப்பிடி கொண்ட
விசிறிகளை அசைத்தனர்.
ஆனால் விசிறிகளையும், நிழற்குடைகளையும்
பிடித்தவர்கள் கண்ணுக்குத் தென்படவில்லை.
கரும் பிரகாசம் என்றழைக்கப்பட்ட முனிவர்
சிவப்புக் கம்பளத்தின் மீதிருந்த
தங்க ஆபரணத்தைப் போன்று தோன்றிய
வெள்ளை நிழற்குடை தலைக்குமேல்
பிடிக்கப் பட்டிருந்த சிறுவனை
மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வரவேற்றார்.

சாக்கியரின் காளையை வரவேற்றபின்
ஏக்கத்துடன், மந்திரங்களின் (உடலின்) அறிகுறிகளில் கைதேர்ந்தவரான அவர்
உறுதியான உள்ளத்துடன் கூறியதாவது:
“இருகால் உயிரினங்களுள்
தன்னிகரில்லாதவன் இவன்.”
பின் நிகழ்வதற்கு அண்மையிலுள்ள தனது இறப்பைத் தெரிந்தவராக அவர்
வருத்தத்துடன் கண்கலங்கினார்.

அவர் அழுவதைப் பார்த்த சாக்கியர்கள்:
“இளவரசனுக்கு ஆபத்து
ஏதும் இல்லையே?” என்று வினவினர்.
சாக்கியரின் கவலையை உணர்ந்து அவர்
“இளவரசருக்கு அபாயம்
எதையும் நான் காணவில்லை.
அவருக்கு இடர்பாடும் ஏதும் நேராது.
இவர் கீழானவர் இல்லை: நம்பிக்கை கொள்ளுங்கள்.
இளவரசர் மேன்மையான
சுய-விழிப்புப் பெறுவார்.
அவர், தூய்மையான நடத்தையைக் கண்டு
மக்கள் நலன்மீது கருணை கொண்டு
தன்மச் சக்கரத்தைச் சுழற்றுவார்.
அவர் புனித வாழ்வு வெகுதூரம் பரவும்.
ஆனால் நானோ அவ்வளவு
நீண்ட நாட்கள் வாழப்போவதில்லை;
அதற்கு முன் என் மரணம் நேர்ந்துவிடும்.
என்னால் இவருடைய
நிகரில்லாத தன்மத்திற்குச்
செவிமடுக்க முடியாது.
அதனாலேயே நான் துன்புறுகிறேன்,
துயரப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.”

சாக்கியருக்குப் பரவசமிக்க மகிழ்ச்சியை உண்டாக்கிய பின்
புனித வாழ்வை மேற்கொண்டவர்
(அரண்மனையின்) அந்தப்புர அறையை விட்டுத்
தனது மருகனின் மீதிருந்த கருணையின் பால்
அவனைத் தன்னிகரில்லாதவரின் தன்மத்தைப்
பயிலுமாறு கேட்டுக் கொண்டார்:
“எவராவது ஒருவர் ‘விழிப்புற்றவர்’
என்று கூறினாலோ அல்லது
‘சுயவிழிப்புப் பெற்று தன்ம மார்க்கத்தைப் பிரகடனம் செய்தார்’
என்று கேள்வியுற்றாலோ நீ அங்கு சென்று அவரிடமே கேட்டுக் கொள்.
அந்த ஆசீர்வதிக்கப்பட்டவரிடம்
புனித வாழ்வை மேற்கொள்.”

தன் நலன் மீது அக்கரை கொண்டிருந்தவர்
(அசிதர்) சொற்படி தூய எதிர்காலத்தை எதிர்பார்த்தவராய்
நாளகர், புண்ணியம் சேர்த்தவாறு, புலன்களைக் கட்டுப்படுத்தியவாறு
வெற்றி கொண்டவரை ஆவலுடன் எதிர்பார்த்தார் (அசிதரின் மருகன் நாளகர்).
வெற்றி கொண்டவர் தன்மச் சகரத்தைச் சுழற்றியதாகக்
கேள்வியுற்றுச் சென்று முனிவருள் காளையைக் கண்டார்.
அசிதர் சொன்னபடி நடந்து விட்டதால்
நம்பிக்கையுடன் அந்தச் சிறந்த முனிவரை
மேன்மையான விவேகத்தைப் பற்றிக் கேட்டார்.

நாளகர்:
அசித முனிவர் எதிர்பார்த்தபடி
நடந்துவிட்டதால்,
கோதமரே, அக்கரை சென்ற
உங்களைக் கேட்கிறேன்:
துறவற வாழ்வைக்
கடைப்பிடிக்க நான் விரும்புகிறேன்;
யாசித்து வாழ்வதை எதிர்நோக்குகிறேன்.
மேன்மையான விவேகத்துடன்
வாழ்வது பற்றிக் கூறுங்கள் முனிவரே.

புத்தர்:
உனக்கு விளக்கிக் கூறுகிறேன்
விவேகத்தைப் பற்றி,
அதைச் செய்வதும் கடினம்,
சகித்துக் கொள்வதும் கடினம்.
தடுமாற்றமில்லாமல் இருக்க வேண்டும். உறுதியாக இருக்க வேண்டும்.
சமநிலையான மனத்தோடு
இருக்க வேண்டும்,
ஏனென்றால் ஒரு கிராமத்தில்
புகழ்ச்சியும் இருக்கும், இகழ்ச்சியும் இருக்கும்.
உள்ளத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை உதறித் தள்ளி விடு.
அமைதியாகவும் இறுமாப்பில்லாமலும்
இருக்க வேண்டும்.
உயர்வையும் தாழ்வையும் சந்திப்பது சகஜம்,
காட்டுத்தீயைப்போல.
பெண்கள் முனிவர்களையும் வசீகரிப்பார்கள்.
உன்னை வசீகரிக்காமல் இருக்கட்டும்.
பாலியல் உறவுகளைத் தவிர்,
பலதரபட்ட புலன் இன்பங்களை விடு,
எதிர்ப்பில்லாமல் இரு, பற்றில்லாமல் இரு,
நகர்வன அசையாத உயிரினங்களிடமெல்லாம்.
‘நான் இருக்க, அவர்களும் அப்படியே.
அவர்கள் இருப்பது போலவே, நானும்.’
அவர்கள் நிலையை உன்னிடத்திலும் பார்த்து,
உயிர்க் கொலை செய்யாதே, மற்றவரை உயிர் வதை செய்வதற்கும் தூண்டாதே.
விருப்பங்களையும், அவாவையும் கைவிடு
சாதாரணமக்கள் அவற்றுள்
சிக்கிச் சுழல்வார்கள்.
தெளிவான பார்வையோடு பயிற்சி செய்து
இந்த நரகத்தைத் தாண்டிச்செல்.
மிதமாக உண்,
வயிற்றை நிரப்ப வேண்டாம்,
குறைந்த தேவைகளுடன்,
பேராசை கொள்ளாமல்,
எப்போதும் ஆசைபட்டுக் கொண்டிராமல் இரு.
வேட்கை இல்லாதவன்
சுமையில்லாமல் இருப்பான்.

யாசித்தபின் (பிச்சைச் சோறு பெற்றபின்) சமணர் காட்டுக்குத் திரும்பி,
ஒரு மரத்தடியில் நிற்க அல்லது உட்கார வேண்டும்.
ஞானமுள்ளவர் ஆழ்தியானத்தை விரும்பி,
காட்டில் மகிழ்ச்சி காண வேண்டும்,
மரத்தடியில் தியானம் செய்ய வேண்டும்,
அவ்வாறே தியானத்தில் குதூகலம்
அடைய வேண்டும்.
பின், இரவின் முடிவில்,
கிராமத்துக்குச் செல்லவேண்டும் (உணவு பெற), அழைப்பைக் கண்டு அல்லது
கிராமத்தில் காணிக்கை கொடுக்கப் படும்போது குதூகலப்படக் கூடாது.
கிராமத்துக்குச் சென்றபின்,
அக்கறை இல்லாமல் ஒரு சமணர்
பிற குடும்பங்களோடு பழகக் கூடாது.
விதண்டைப் பேச்சை தவிர்,
வஞ்சகமான வார்த்தைகளைப் பேசக் கூடாது.
‘எனக்குக் காணிக்கை கிடைத்தது,
நல்லது.
எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.
அதுவும் நல்லதே.’
இவ்வாறு இரண்டு நிலையிலும் சமமான மனநிலை வைத்திருந்து
அதே மரத்தடிக்குத் திரும்ப வேண்டும்.
பிச்சாபாத்திரத்தோடு நடமாடி
—ஊமையாக இல்லை,
ஆனால் ஊமையைப்போல—
ஒரு அற்பக் காணிக்கையை
வெறுக்கவும் கூடாது
அதைக் கொடுத்தவரை நிந்திக்கவும் கூடாது.

மேலான மற்றும் கீழான பயிற்சிகளைப்
பற்றிச் சமணர் கூறுகின்றனர்.
அக்கரைக்கு இரண்டு முறை செல்வதில்லை.
இந்தக் கட்டவிழ்ப்பு ஒரு தடவை மட்டுமே அனுபவிப்பதும் இல்லை.

பற்று இல்லாதவர்—
ஓடையைத் தாண்டியவர்,
‘இதைச் செய்ய வேண்டும்,
அதைச் செய்யக் கூடாது’
என்பனவற்றைக் கைவிடுபவர்—
அவரிடம் நோய் ஏதும் இருப்பதில்லை.

விவேகத்தை விளக்கிக் கூறுகிறேன்:
சவரக்கத்தியின் விளிம்பைப் போலக் கூர்மையாக இரு.
நாக்கை மேல்வாய்ப் பக்கம் அழுத்தி
வயிற்றை அடக்கு.
மனத்தில் சோம்பல் வேண்டாம்,
அதீத எண்ணங்களும் வேண்டாம்.
மாசற்றிருக்க உறுதி செய்,
சுயமாக,
புனித வாழ்வை நோக்கமாகக் கொண்டிரு.
தனிமையில் பயிற்சி செய்
சமணர்களின் வாழ்க்கை முறைப்
படி பயிற்சி செய்.
அதுவே தனிமையென்பது.
இவ்வாறு தனிமையில் இருந்தால்
பத்துத் திசைகளிலும்
உண்மையில் மகிழ்வாய்.

அருகர்களின் (ஞானிகள்) புகழைக் கேட்டு
—தியானம் பயில்வோர்,
புலன் இன்பங்களைக் கைவிட்டு—
எனது சீடர் மேலும்
திடமான மனத்துடனும் தங்கள் மனசாட்சியின் படியும் இருக்க வேண்டும்.

நீரில் இருந்து அறிந்து கொள்வீர்:
மலையில் பிளவுகளிலும்,
வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ
அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.

வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறிவிலி அரை நிறை குடம்,
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.

நிறையப் பேசும் ஒரு துறவி
பொருளுள்ளதைப் பேசுகிறார்:
தெரிந்து, தன்மத்தைக் கற்பிக்கிறார்,
தெரிந்து, நிறையப் பேசுகிறார்.
ஆனால்
தெரிந்தும், அடக்கமானவர்,
தெரிந்தும், நிறையப் பேசாதவர்
அவரே ஞானமுடையவர்
ஞானமுடையவர் என்று அழைக்கப்படத் தகுதியானவர்;
அப்படிப்பட்டவர்
அமைதியைக் கண்டவர்.