சுத்த நிபாதம் 3.2

பதான சூத்திரம்: முயற்சி

எனக்கு—
ஊக்கத்தோடு முயன்று
நெரஞ்ஜரா நதியோரம்,
இடையறாது முயற்சி செய்து
ஆழ்ந்த தியானத்தில் இருப்பது
நுகத்தடியிலிருந்து விடுபடவே.

மாரன் வந்து,
கருணை நிறைந்த வார்த்தைகளைக் கூறுகிறான்:
“நீ வெளிறிப்போன முகத்தோடும் மெலிந்தும் தோன்றுகிறாய்.
மரணம் உன் அருகில் உள்ளது.
சாவு உன்னில் ஆயிரம்
பாகங்களைக் கொண்டுள்ளது.
ஒரு பாகம் மட்டுமே
உனது வாழ்வு.
வாழ வழி தேடு, நல்லவனே!
வாழ்வது மேலானது.
உயிரோடு இருந்தால்
பல புண்ணியச் செயல்கள்
செய்யலாம்.
புனித வாழ்க்கை மேற்கொண்டு
அக்கினித் தியாகம் செய்தால்
பல புண்ணியங்களைக் குவிக்கலாம்.
இப்படி முயற்சி செய்து என்ன பயன்?
முயற்சி எடுக்க வேண்டிய பாதையைத் தொடர்வது கடினம்—
செய்வது கடினம்,
விடாப்பிடியோடு முயற்சி செய்வதும் கடினம்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு,
மாரன் விழிப்புற்றவரின் அருகில் நின்றான்.
இவ்வாறு பேசிய மாரனிடம்,
பகவர் இதைச் சொன்னார்:

“விவேகமற்றவரின் சொந்தமே,
தீயவனே,
இங்கு எதற்கு வந்தாயோ:
புண்ணியம் வேண்டியவருக்கே
மாரனது அறிவுரை தேவையாக உள்ளது.

என்னிடம் திட நம்பிக்கை,
துறவறம் (எளிமை),
விடாப் பற்று,
விவேகம் ஆகியவை உள்ளன.
நான் இவ்வளவு உறுதியுடன்
இருக்கும்போது
ஏன்
(இன்பம் தேடி) வாழச்சொல்கிறாய்?
இந்த வீசும் காற்று
ஆற்று வெள்ளத்தையும்
வரண்டு போகச் செய்து விடும்.
பின் ஏன் நான் உறுதியாக இருக்க
எனது உதிரம் காய்ந்து போகக் கூடாது?
எனது உதிரம் காய
ஈரலும் கோழையும் காய்ந்து விடும்.
தசைகளும் வீணாக,
மனம் தெளிவாகிறது;
கடைப்பிடி, விவேகம்,
ஒருக்கம் மேலும்
உறுதி பெறுகின்றன.
இவ்வாறு இருந்து
மேலான நுகர்ச்சியை அடைகிறேன்.
புலன் இன்பங்கள் மீது மனம்
கவனம் செலுத்துவதில்லை.
பார்:
ஓர் உயிரின்
தூய்மையை!

சிற்றின்ப ஆசைகளே உனது முதற் படை.
திருப்தியின்மை உனது இரண்டாம் படை.
உனது மூன்றாம் படை பசியும், தாகமும்.
நான்காவது பற்று.
ஐந்தாம் படை சோம்பலும், தூக்கமும்.
ஆறாவது படை பயங்கரவாதம்.
உனது ஏழாம் படை உறுதியின்மை.
கபடமும் பிடிவாதமும் உனது எட்டாம் படை.
செல்வம், காணிக்கை, புகழ், அந்தஸ்து—
எல்லாம் தவறான வழியில் பெற்றது,
தன்னைத் தானே புகழ்ந்து
மற்றவரை இகழ்வது.

மாரனே, இவையே உனது படை
இருண்ட உள்ளம் கொண்டவனின் அதிரடிப்படை.
(உன் படைகளை) ஒரு கோழையால் தோற்கடிக்க முடியாது,
ஆனால் தோற்கடிப்பவன்
பேரின்பம் பெறுகிறான்.
நான் நாணல் புல் வைத்திருக்கின்றேனா?
எனது உயிர் மீது துப்புகிறேன்.
போரில் தோற்றுவிட்டால், உயிர் வாழ்வதை விட
மாண்டு போவதே மேலானது.

சில பிராமணர்களும், சன்னியாசிகளும்
சரணடைந்து விட்டார்கள். அவர்கள் பின்பு காணப் படுவதில்லை.
அவர்களுக்குச் சரியாகப் பயிற்சி செய்வோரின்
மார்க்கம் தெரியவில்லை.

மாரன் தன் குதிரைமீது அமர்ந்திருக்க,
நாற்புறமும் அவனது கொடிபடையைக்
கண்டும்—
நான் போருக்குச் செல்கிறேன்.
அவன் படைகள் என்னை என் இடத்தை விட்டு
நகர்த்திவிடக் கூடாது (என்பதே என் விருப்பம்).
தேவர்களும் உள்ள இந்த உலகினால்
தோற்கடிக்க முடியாத உனது படையை
நான் மெய்ஞ்ஞானம் கொண்டு
தகர்த்து விடுவேன்—
நெருப்பில் சுடப்படாத மட்பாண்டத்தை
ஒரு கல்லால் உடைப்பது போல.

மன உறுதியுடன்
நற்கடைப்பிடியோடு,
நான் நாடு நாடாகச் சென்று
பல சீடர்களைப் பயில்விப்பேன்.
அவர்கள்—விவேகத்துடன், உறுதியுடன்
என் சொற்படி—
உனது குறிக்கோளுக்கு மாறாக,
சேர வேண்டிய இடம் சேர்வார்கள்—
அது துயரற்ற இடம்.”

மாரன்:
“ஏழு ஆண்டுகளாகப் பகவரின்
பாதச் சுவடுகளைத் தொடர்ந்து வந்தேன்,
ஆனால் மகிமையும், சுய-விழிப்பும் உள்ள
உங்களைத் தடுமாற வைக்க முடியவில்லை.
கொழுப்பு நிறத்தில் இருந்த
கல்லை ஒரு காகம் சுற்றிச் சுற்றி வந்தது
—‘ஓ, இது மென்மையான தின்பண்டமோ?
சுவையானதாகவும் இருக்குமோ?’ என்று நினைத்து—
ஆனால் தின்பதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை அதற்கு.
காகமும் சென்று விட்டது.
(இறைச்சி என்று நினைத்து) கல்லைக் கொத்திய காகத்தைப் போல
நான் கோதமரை அசைக்க முடியாமல் களைப்படைந்து விட்டேன்.’

பெரும் துயரம் கொண்ட மாரன்
கையிலிருந்த யாழ் தவறிக் கீழே விழுந்தது.
பின், நம்பிக்கையற்றவனாக அங்கிருந்து அவன்
மறைந்து விட்டான்.