சுத்த நிபாதம் 3.3

சுபாசித சூத்திரம்: நன்றாகப் பேசுவது

ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தாக நான் கேள்விப் பட்டேன். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார், “துறவிகளே!”

“ஆம், அண்ணலே!” என்று துறவிகள் பதிலளித்தனர்.

பகவர் கூறினார்: “துறவிகளே, நான்கு இயல்புகளைக் கொண்ட பேச்சு நற்பேச்சாகும், தவறான பேச்சாகாது—குறையற்ற பேச்சாகும், அது சான்றோரால் குறைகூறப் படாதது.

எந்த நான்கு?

ஒரு துறவி எப்போதும் சிறப்பாகப் பேசுகிறார், மோசமாகப் பேசுவதில்லை; நியாயமாகப் பேசுகிறார், நியாயமற்றதைப் பேசுவதில்லை; பிரியமானதைப் பேசுகிறார், பிரியமற்றதைப் பேசுவதில்லை; உண்மையைப் பேசுகிறார், பொய்மையைப் பேசுவதில்லை.

இந்த நான்கு இயல்புகளைக் கொண்ட பேச்சு சிறந்த பேச்சாகக் கருதப்படும், மோசமான பேச்சாகாது—குறையற்ற பேச்சாகும், சான்றோரால் குறை கூறப்படாதது.”

பகவர் இவ்வாறு கூறினார். இதைச் சொன்ன பிறகு பகவர் மேலும்:

அமைதியானோர் சிறந்த பேச்சையே நல்லதெனக் கூறுகின்றனர்;
இரண்டாவதாக, ஒருவர் நியாயமான பேச்சைக் கூற வேண்டும், நியாயமற்றதை அல்ல;
மூன்றாவது பிரியமானதைப் பேச வேண்டும், பிரியமற்றதைப் பேசக்கூடாது;
உண்மையைப் பேச வேண்டும், பொய்மையைப் பேசக்கூடாது.

பின் போற்றுதற்குரிய வங்கீசர், தன் இருக்கையிலிருந்து எழுந்து, தனது சீவர ஆடையைத் தன் தோள் மீது ஒழுங்கு படுத்தியபின், பகவரைப் பார்த்து, கைகளை அஞ்சலி செலுத்தும் வழியில் ஒன்றுகூட்டி, “எனக்கு ஒரு மனவெழுச்சி உண்டாக்கும் எண்ணம் தோன்றியுள்ளது, பகவரே! எனக்கு ஒரு மனவெழுச்சி உண்டாக்கும் எண்ணம் தோன்றியுள்ளது! அண்ணலே,” என்றார்.

“உங்களுக்கு மனவெழுச்சி உண்டாகட்டும், வங்கீசரே,” என்றார் அண்ணல்.

பின் போற்றுதற்குரிய வங்கீசர் பகவரை இந்த அழகான பா வரிகளுடன் போற்றினார்:

தன்னையும் துன்புறுத்தாத,
மற்றவரையும் துன்புறுத்தாத
பேச்சைப் பேசுவது.
அதுவே சிறப்பாகப்
பேசப்பட்ட பேச்சு.

அன்பான பேச்சைப் பேச வேண்டும்,
வரவேற்கப்படும் பேச்சைப் பேச வேண்டும்.
மற்றவருக்குத் தீமை விளைவிக்காத பேச்சு
இனிமையான பேச்சாக இருக்கும்.

வாய்மை பேசுவதே சாவற்ற பேச்சாகும்:
இதுவே பழங்காலக் கோட்பாடு.
நோக்கமும், தன்மமும்
வாய்மையை அடிப்படையாகவே கொண்டுள்ளன
—என்று அமைதியானோர் கூறுவர்.

விழிப்புற்றவர் பேசும் பேச்சு,
கட்டுகள் இல்லாத நிலைக்கு,
ஓய்விற்கு,
துக்கம் என்ற சுமையை இறக்கக்
கூறப்படும் பேச்சு
அப்படிப்பட்ட பேச்சே மீற முடியாத உயர்வான பேச்சாகும்.