சுத்த நிபாதம் 3.4

சுந்தரிக்க-பரத்வாஜர் சூத்திரம்:காணிக்கைகள் பற்றிச் சுந்தரிக்க-பரத்வாஜருக்குப் போதித்தல்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை பிரகாசிப்பவர் கோசளர்கள் மத்தியில் எழுந்தருளியிருந்தார். அப்போது சுந்தரிக்க-பரத்வாஜ என்ற பிராமணர் சுந்தரிக்க நதிக்கரையில் அக்கினிகோத்திரத்தில், அக்கினியை வணங்கிப் படைப்புகளையும் ஓமத்தீயில் அர்ப்பணித்தார். ஓமம் முடிந்தவுடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த பிராமணர் நான்கு திசைகளையும் பார்வையிட்டவாறு இவ்வாறு நினைத்தார், “ஓமத்தில் எஞ்சியதை யார் உண்ணுவார்?” அதே சமயம் அந்தப் பிராமணர் அருகில் ஒரு மரத்தடியில் பகவர் தலையை மூடியவாறு அமர்ந்திருப்பதைக் கவனித்தார். இதைக் கண்டவுடன் அந்தப் பிராமணர் இடது கையில் யாகத்தில் மிஞ்சியதைப் பற்றிக் கொண்டு வலது கையில் நீர்ச் செம்புடன் பகவரை அணுகினார். யாரோ வருவதை உணர்ந்த பகவர் தலையை மூடியிருந்த துணியை அகற்றினார்.

பின் அந்தப் பிராமணர் “ஓ, இந்தத் துறவி மொட்டைத் தலையுடையவர், சாதாரணத் தலை மழித்தோன்,” என எண்ணித் திரும்பிப் போக விரும்பினார். ஆனால் அவர் மேலும் இதை நினைத்தார்: “தலை மழித்தவரென்றாலும் சில பிராமணர்களும் அவ்வாறே மழிக்கின்றனர். எனவே அவர் ‘பிறப்பை’ விசாரிப்பது நல்லது.” பின் சுந்தரிக்க-பரத்வாஜர் பகவரை அணுகி இந்தக் கேள்வியைக் கேட்டார்: “போற்றுதற்குரியவரே, உங்கள் ‘பிறப்பு’ என்ன?” பகவர் பா வடிவில் அந்தப் பிராமணரிடம் சொன்னதாவது:

புத்தர்:
நான் அந்தணன் இல்லை, அரசனும் இல்லை,
வணிகர் குலத்தவனும் இல்லை, மற்ற குலத்தவனும் (ஜாதியினனும்) இல்லை,
ஆனால் சாதாரண மக்களின் இனத்தை நன்கு உணர்ந்தவன்.
எனவே எதற்கும் சொந்தம் கொண்டாடாமல் உலகில் வாழ்கிறேன்.

என் உடையே என் இருப்பிடம், எனக்கென்று குடிலில்லை,
என் தலை மழிக்கப் பட்டது, முழுமையாகத் தாகம் தீர்த்தவன்;
இங்கு எந்தச் சீடர்களிடமும் பற்றுக் கொள்ளாமல் உள்ளேன் (எனக்கு உறவு இல்லை),
எனவே பிராமணா, என் குலத்தைப் பற்றிக் கேட்பது முறையல்ல.

சுந்தரிக்க:
ஆனால் ஐயா, பிராமணர்கள் மற்ற பிராமணர்களைச் சந்தித்தால்
“நண்பரே, நீரும் பிராமணரா?.” என்று கேட்பது வழக்கம்.

புத்தர்:
நீர் பிராமணர் என்றும், நான் பிராமணன் அல்ல என்றும் கூறினீரென்றால்,
சாவித்திரி நூலில் உள்ள
நான்கும் இருபதும் அசைகள் கொண்ட
மூன்று வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

சுந்தரிக்க:
இந்த உலகில் மனிதராகவும், மன்னராகவும், பிராமணராகவும்
பிறந்த இவர்கள் எல்லோரும்
தேவர்களுக்கு என்ன காரணத்துக்காக, எதை எதிர்பார்த்துக்
காணிக்கை தருகிறார்கள்?

புத்தர்:
முடிவுக்குப் போனவர், அறிவை எட்டியவர்,
அப்படிப்பட்டவருக்குத் தரும் காணிக்கை
கொடுப்பவருக்குக் கிடைக்கும் ஒரு வரம்.

சுந்தரிக்க:
அப்படியானால் நான் தரும் காணிக்கை எனக்குப் பலன் தரும்,
ஏனென்றால் அத்தகைய குணம் கொண்ட ஒருவரை உங்களில் கண்டோம்—
அறிவை எட்டியவர், உங்களைப் பார்த்திரா விட்டால்
வேறொருவர் இதைப் பெற்று உண்டிருப்பார்.

புத்தர்:
அப்படியானால் கேளும் பிராமணரே,
நீர் தெளிவு தேடி வந்துள்ளீர்.
இங்கு ஒரு ஞானியைக் காணலாம்,
அமைதியானவர், தெளிவானவர், மாசற்றவர், அவாவற்றவர்.

சுந்தரிக்க:
காணிக்கை செலுத்தற்கு மகிழ்கிறேன், கோதமரே,
ஆனால் எப்படிச் செய்வதென்று தெரிய வில்லை. எனக்கு விளக்கிக் கூறுங்கள் ஐயா,
எப்படிக் காணிக்கை செலுத்தினால் அது பலன் தரும் என்பதை எனக்குக் கூறுங்கள்.

புத்தர்:
அப்படியென்றால் செவிமடுங்கள் பிராமணரே,
தன்மத்தை விளக்குகிறேன்.
“பிறப்பை"ப் பற்றிக் கேட்காதீர், நடத்தையைப் பற்றிக் கேளுங்கள்—
புனித வேள்வித்தீயும் (சாதாரண) மரக் குச்சிகளிலிருந்தே பிறக்கின்றது,
சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும், ஒரு முனிவர் மேன்மையுறுகிறார்,
சுய மரியாதையினால் திடமானவராகவும், தன்னடக்கத்தோடும் இருக்கின்றார்.

வாய்மையினால் அடக்கப்பட்டோர், தன்னடக்கமுடையோர்,
அறிவின் எல்லையை அடைந்தவர்,
புனித வாழ்வை வாழ்பவர்:
அப்படிப்பட்டவருக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்—
புண்ணியம் தேடும் பிராமணர் அவருக்குக் காணிக்கை செலுத்தட்டும்.

புலன் இன்பங்களைவிட்டு வீடு துறந்து—மனக்
கட்டுப்பாட்டோடும் நேர்மையானவருமாக வாழ்பவர்—
அப்படிப்பட்டவருக்கு காணிக்கை செலுத்தவேண்டும்—
புண்ணியம் தேடும் பிராமணர் அவருக்குக் காணிக்கை செலுத்தட்டும்.

காமத்திடமிருந்து விடுபட்டவர், புலன்களை அடக்கியவர்,
ராகுவின் பிடியிலிருந்து தப்பிய நிலவைப் போல:
அப்படிப்பட்டவருக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்—
புண்ணியம் தேடும் பிராமணர் அவருக்குக் காணிக்கை செலுத்தட்டும்.

முழுமையாகப் பற்றில்லாமல் உலகில் அலைபவர்கள்,
ஆணவத்தை வளர்ப்பதைத் தவிர்த்து, எப்போதும் அதைக் கைவிடுபவர்:
அப்படிப்பட்டவருக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்—
புண்ணியம் தேடும் பிராமணர் அவருக்குக் காணிக்கை செலுத்தட்டும்.

வெற்றி பெறுவோர், புலன் இன்பங்களை விட்டவர்,
பிறப்பு இறப்பின் முடிவை அறிந்தவர், குளிர்ந்த நீருள்ள ஏரியைப்போலக்
குளிர்ந்தவர்
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

நியாயமானவர்களுக்கு நியாயமாகவும், நியாமில்லாதோரிடத்திலிருந்து விலகியும்,
அளவற்ற ஞானமுடைய ஒரு ததாகதர்,
இவ்வுலகிலும் வேறு எங்கும் எதுவும் அவரைக் கறைப்படுத்த முடியாது.
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

வஞ்சனையும், அகம்பாவமும் இல்லாதவர்,
அவா அற்றவர், சுயநலமில்லாதவர், ஆசையில்லாதவர், கோபத்தைத் துறந்தவர்,
அமைதியான நிலையிலுள்ள பிராமணர்,
துயரம் என்ற களங்கத்தைப் போக்கியவர்
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

மனத்தின் ஓய்வெடுக்கும் இடங்களையெல்லாம் நீக்கியவர்,
பற்றேதும் இல்லாதவர்,
இவ்வுலகிலும் வேறு எங்கும் எந்தப் பற்றும் இல்லாதவர்:
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

சாந்தமான மனமுள்ளவர், வெள்ளத்தைத் தாண்டியவர்,
மேன்மையான அறிவினால் வாய்மையை அறிந்தவர்
மாசுகள் நீக்கப்பட்டு, கடைசி உடலில் வாழ்பவர்:
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

பிறப்பெடுக்க நோக்கமில்லாதவர், கடுமையான வார்த்தைகளைப் பேசாதவர்—
சினமற்றவர்—பற்றற்ற நிலைக்குச் சென்றவர்,
அறிவை எட்டியவர், முழுமையாக விடுவிக்கப்பட்டவர்:
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

கட்டுகளுக்கு அப்பாற் சென்றவர், சுமையில்லாதவர்,
அகம்பாவமுள்ள மனிதரிடையே அகம்பாவம் இல்லாதவர்,
துக்கத்தை முழுமையாகப் புரிந்து, அதை அகற்றியவர்:
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

தனிமையைத் தேடுபவர், ஆசையைச் சார்ந்திராதவர்,
மக்களின் கருத்துக்களால் பாதிக்கப் படாதவர்,
எந்தப் புலன் பொருட்களோடும் பற்றுக் கொள்ளாதவர்
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

எல்லாவிதக் கட்டுகளும் முழுமையாக
ஆராயப்பட்டுக் கைவிடப்பட்டுள்ளன
பற்றை முடித்ததால் சுதந்திரமாகவும் அமைதியாகவும் உள்ளவர்—
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

பிறப்பை முடித்தவர், தோற்றத்திற்கான காரணங்களை அறிந்தவர்,
மாசுகளை முடித்தவர், புலன் இன்பங்களை முடித்தவர்,
தூய்மையானவர், குற்றமற்றவர், களங்கமற்றவர், பிழையற்றவர்—
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

தன்னைத் தானாகப் பாராமல்,
உறுதியானவராக, நேர்மையானவராக, பிரதிபலிப்பவராக,
காமத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர், கடுமையற்றவராக, சந்தேககங்களைத் தீர்த்தவர்:
அப்படிப்பட்ட ஒரு ததாகதர் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்.

அவருள் மயக்கத்துக்கான காரணம் எதுவும் இல்லை,
எல்லாத் தன்மங்களையும் அறிந்தவர், நுண்ணறிவு உள்ளவர்,
கடைசி உடலைக் கொண்டவர்,
மிகச்சிறந்த, ஆனந்தமான முழுமையான ஞானத்தைப் பெற்றவர்,
தூய்மை நிறைந்தவர்.
அப்படிப்பட்ட ததாகதர்கள் காணிக்கை செலுத்தத் தகுதியானவர்கள்.

சுந்தரிக்க:
நான் ஞானம் பெற்றவரைச் சந்தித்து விட்டேன்,
எனது காணிக்கை சரியானதாக இருக்கட்டும்;
பிரம்மனை வெளிக் காட்டுகின்றீர்கள் நீங்கள்,
எனது காணிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் பிரகாசிப்பவரே,
எனது காணிக்கையை உண்ணுங்கள்.

புத்தர்:
மந்திரங்கள் ஓதித் தரப்படும் காணிக்கைகளை
நான் ஏற்பது இல்லை.
தெளிவான பார்வை உள்ளவரின் வழி இதுவல்ல.
ஞானம் பெற்றவர்கள் மந்திரம் ஓதிக்
காணிக்கை பெறுவதை நிராகரிக்கின்றனர்.
வாய்மை உள்ள வரை இதுவே
புத்தர்களின் வழி.

இறுதி அறிவு பெற்ற மாமுனிவர், கலகங்களை முடித்தவர், மாசுகளை முடித்தவர்,
முழுமையாக விடுவிக்கப் பட்டவர்—
அப்படிப் பட்டவர்க்கு (மந்திரம் ஓதாத) உணவும், பானமும் காணிக்கையாய்த் தருவது:
புண்ணியம் சேர்க்க விரும்புவோருக்குத்
தகுந்த வாய்ப்பு அது.

சுந்தரிக்க:
நல்லது ஐயா. இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்:
உங்கள் போதனையைக் கேட்ட நான் (இப்போது கேட்கிறேன்)
நான் தரும் காணிக்கை யாருக்குப் பொருந்தும்?
காணிக்கை செய்வதற்கு எப்படிப் பட்டவரை நான் தேடுவது?

புத்தர்:
கோபத்தைத் தீர்த்தவர்,
மயக்கம் இல்லாத மனம்,
காமம் இல்லாத உள்ளம்,
சோம்பலை நீக்கியவர்,

அவாவை வெற்றிகண்டவர்,
பிறப்பும் இறப்பும் தெரிந்தவர்:
இந்த பண்புகளைக் கொண்டவர் ஒரு முனிவர்.
இப்படிப்பட்ட ஒருவர் காணிக்கை தரும் இடத்தில் இருப்பாரானால்,

தற்பெருமை இல்லாமல் (முகம் சுளிக்காமல்)
கூப்பிய கைகளுடன் அவரை வணங்கி
உணவும் பானமும் தந்து கௌரவித்து
காணிக்கை தந்து பலன் பெறுவீர்.

சுந்தரிக்க:
ஐயா, காணிக்கை செலுத்துவதற்குப் புத்தர் சிறந்தவர்.
புண்ணியம் சேர்க்கவும்
உலகில் சமர்ப்பணம் செய்யவும் நல்ல வழி.
உங்களுக்குத் தரும் காணிக்கை பெரும் பலன் தரும்.

இது கூறப்பட்ட பின் பிராமணர் சுந்தரிக்க-பரத்வாஜர் புத்தரிடம் சொன்னார்:

“அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். என்னைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டு கௌதமரின் சீடனாகத் துறவிப் பட்டம் அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.’

பிராமணர் சுந்தரிக்க-பரத்வாஜ சங்கத்தில் அனுமதிக்கப்பட்டுத் துறவிப் பட்டமும் பெற்றார். துறவியாகிச் சில காலம் கழித்து, போற்றுதலுக்குரிய பரத்வாஜர் தனிமையுடனும் விலகியும் வாழ்ந்து, ஊக்கமுடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும் அந்தத் ‘தன்னிகரில்லா நிலையை’ அடைந்தார். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவரது உயர்ந்த அறிவினால் அவருக்குத் தெரிந்தது: ‘பிறப்புத் தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.’

இவ்வாறு போற்றுதலுக்குரிய பரத்வாஜருவும் ஒரு ஞானி ஆனார்.