சுத்த நிபாதம் 3.5

மாக சூத்திரம்—தானம் செய்வது பற்றி மாகருக்குத் தந்த போதனை

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை பகவர் ராஜகிருகத்தில் பிணந்தின்னிக் கழுகு முகட்டு மலையில் எழுந்தருளியிருந்தார். அப்போது இளைய பிராமணரான மாகர் பகவரைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பரிமாற்றஞ் செய்து கொண்டார். பின் ஒருபுறமாக உட்கார்ந்து புத்தரிடம் அவர்:

“கோதமரே, நான் நன்கொடை வழங்குபவன், யாரேனும் உதவி கேட்டால் மகிழ்வோடும், தாராளமாகவும் நன்கொடை தருவேன். சரியான முறையில் பெற்ற, சேர்த்த செல்வத்தை, அறவழி பெற்ற செல்வத்தை ஒருவருக்கு, இருவருக்கு, பத்து, இருபது ஏன் நூறு பேருக்கும் அதைவிட அதிகமானோருக்கும் தருவதுண்டு—ஆக அண்ணல் கோதமரே இவ்வாறு நான் செய்யும் தானம் எனக்குப் புண்ணியம் சேர்க்குமா?”

“கண்டிப்பாக, பிராமணரே, இவ்வாறு செய்யும் தானம் உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும். உதவி கேட்போருக்கு மகிழ்வோடும், தாராளமாகவும் நன்கொடை தருவோர், சரியான முறையில் பெற்ற, சேர்த்த செல்வத்தை, அறவழி பெற்ற செல்வத்தை ஒருவருக்கு, இருவருக்கு, பத்து, இருபது, நூறு பேருக்கும் அதைவிட அதிகமானோருக்கும் தருவது—அவ்வாறு செய்யும் தானம் பெரும் புண்ணியம் சேர்க்கும்.”

பின் இளைய பிராமணரான மாகர் பகவரிடம் செய்யுள் வடிவில் இவ்வாறு கூறினார்:

மாகர்:
காவி உடை அணிந்து, வீடு துறந்து அலையும்
உலகம் அறிந்த கோதமரைக் கேட்கிறேன்:
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர்—
அப்படித் தரப்படும் காணிக்கைகள் எவ்வாறு தூய்மைப்படும்?

புத்தர்:
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர்—
காணிக்கை பெறத் தகுதியானவர்களால் தமது நோக்கத்தை அடைவார்.

மாகர்:
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர்—
அத்தகைய காணிக்கைகளைப் பெறத் தகுதியானவர் யார் ஐயா?
அதைப் பற்றிக் கூறுங்கள்.

புத்தர்:
உண்மையிலேயே பற்றற்று உலகில் வாழ்பவர்,
எதற்கும் சொந்தம் கொண்டாடாதவர், முழுமையானவர், தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர்:
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

சுமைகளையெல்லாம் இறக்கியவர்,
அடங்கியவர், விடுவிக்கப்பட்டவர், பிரச்சனையும் எதிர்பார்ப்பும் இல்லாதவர்:
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

கட்டுகளிலிருந்து விடுபட்டவர்,
அடங்கியவர், விடுவிக்கப்பட்டவர், பிரச்சனையும், எதிர்பார்ப்பும் இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

அவாவும், வெறுப்பும், அறியாமையும்—விட்டவர்,
புறபாதிப்புகள் இல்லாதவராக, மேன்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

வஞ்சனையும், அகம்பாவமும் இல்லாதவர்,
பேராசை இல்லாதவர், சுயநலமில்லாதவர், பிரச்சனை இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

அவா அற்றவர், சுயநலமில்லாதவர், ஆசை இல்லாதவர்,
புறபாதிப்புகள் இல்லாதவர், புனித வாழ்வில் செய்யவேண்டியதைச் செய்து முடித்தவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

வேட்கைக்கு இடம் கொடாதவர்,
வெள்ளத்தைத் தாண்டியபின் சுயநலமில்லாமல் வாழ்பவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

இத்தகைய வாழ்வு வேண்டும், அத்தகைய வாழ்வு வேண்டும்,
இப்போதோ அல்லது வருங்காலத்திலோ என்ற உலக விருப்பங்கள் இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

வீடு துறந்தவர், புலன் இன்பங்களை விட்டவர்,
தன்னடக்கம் உள்ளவர், நெசவுநாடா நேராகச் செல்வதுபோல நேர்மையுள்ளவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

ஆசை இல்லாதவர், இந்திரியங்களை அடக்கியவர்,
ராகு (என்ற அசுரனின்) பிடியிலிருந்து விடுபட்ட நிலவைப்போல,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

அமைதியுடனும், அவா விட்டவராகவும், கோபமற்றவராகவும்,
இங்கும் அங்கும் போக வேண்டும் என்ற எண்ணங்களில்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

பிறப்பையும், இறப்பையும் கைவிட்டவர்—கைவிட வேறு ஏதும் இல்லாதவர்,
எல்லா ஐயங்களையும் தீர்த்துக் கொண்டவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

தாமே தமக்கு ஒரு தீவாக உலகில் வாழ்பவர்,
எதற்கும் சொந்தம் கொண்டாடாமல் முழுமையான சுதந்திரத்துடன் இருப்பவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

இதன் கருத்தைத் தெளிவாக உணர்ந்தவர்கள்—
“இதுவே கடைசி (பிறப்பு), இனிமேல் தோன்றப் போவதில்லை”—
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

கேட்ட தன்மத்தை மனத்தில் பொதிந்து, தியான நிலைகளில் ஆனந்தப் படுவோர்,
ஞானம் பெற்றவர், பலருக்குப் புகலிடம் தருபவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.

மாகர்:
ஐயா, நான் கேட்ட கேள்வி வீண்போகவில்லை.
காணிக்கை செலுத்தற்கு உரியோர் யார் என்பதைப்பற்றிப் பகவர் கூறியுள்ளீர்.
அவர்கள் எப்படிபட்ட பண்புகளுடையவர் என்பதை உள்ளது உள்ளபடி கூறியுள்ளீர்கள்
இந்த வாய்மையை நீங்களே கண்டுள்ளீர்கள்.

மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர்—
அதனைத் தருவதால் எவ்வாறு
அவர்களுக்கு நற்பலன் கிடைக்கும்?

புத்தர்:
காணிக்கை செலுத்துவீராக!
ஆனால் காணிக்கை செலுத்தும் போது உள்ளத்தை
மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும், திருப்தியோடும் வைத்திருங்கள்.
இவ்வாறு முழுமன நிறைவுடன் தானம் செய்வோரின் வாழ்வில் குறைகள் இருக்காது.

மனத்தில் பேராசைகளைப் பொங்க விடாமல் வெறுப்பைக் களைந்து
அல்லும் பகலுமாகத் தொடர்ந்து கவனித்தவாறும், விழிப்புடனும்
எல்லையற்ற நட்புணர்வை மனத்தில் தேக்கி வளர்த்து வந்தால் அ
ந்த அன்பு எல்லாத் திசைகளிலும் பல்கிப் பெருகும்.

மாகர்:
ஐயா, யார் தூய்மையடைந்து, விடுவிக்கப்பட்டு, விழிப்புற முடியும்?
பிரம்ம-உலகிற்கு (சொர்க்கத்திற்கு) நாமாக எப்படிச் செல்வது?
ஓ ஞானத்தில் சிறந்தவரே எனது கேள்விக்குப் பதில் கூறுங்கள்.—எனக்குத் தெரியவில்லை—
நான் இன்று பிரம்மனை உங்கள் வடிவில் பார்த்தேன். பகவரைப் பார்த்தது பிரம்மனைப்
பார்த்தது போலவே—இது உண்மை! பிரம்ம-உலகில் ஒருவர் எப்படித் தோன்றுவது, பகவரே?

புத்தர்:
காணிக்கை செலுத்துவதன் மூன்று இயல்புகளில் மூன்றாவது
தகுதியானவருக்குத் தானம் கொடுத்து முடிப்பதனால் முடிவுறுகிறது.
இவ்வாறு கொடுத்து முடித்த காணிக்கை தருவதில் திறமைசாலி, மற்றவர் வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவர்,
பிரம்ம-உலகில் தோன்றுவார் என்கிறேன்.

கௌதமர் இதைச் சொன்னவுடன் இளைய பிராமணரான மாகர் புத்தரிடம் சொன்னார்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற இல்லற சீடராக நினைவில் கொள்வாராக.”