சுத்த நிபாதம் 3.6

சபிய சூத்திரம்—சபியரின் கேள்விகள்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.

ஒருமுறை பகவர் ராஜகிரகத்தில், மூங்கில் காட்டில், அணில்களுக்கு உணவூட்டப்படும் இடத்தில் எழுந்தருளியிருந்தார். அச்சமயத்தில் ஒரு தேவர், அவருடைய முன் ஜன்மத்து உறவினரான சபிய என்ற நாடோடியிடம் (ஓர் இடத்தில் வாழாதவர்) ஒரு கேள்வியைத் தந்து, “சபிய, எதேனும் துறவியோ, பிராமணரோ இந்தக் கேள்விக்குப் பதில் கூறமுடிந்தால் நீ அவர்களோடு புனித வாழ்வை மேற்கொள்,” என்று கூறினார்.

தேவரிடம் கேள்வியைப் பெற்றுக் கொண்ட சபிய என்ற அந்நாடோடி பல மதிக்கப்பட்ட துறவிகளிடமும், பிராமணர்களிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டார். அவர்களுள் பல சீடர்களைக் கொண்ட கீர்த்தியும் புகழும் வாய்ந்த, மக்களால் அக்கரை சேர்ந்து விட்டதாக நம்பப்பட்ட ஆசிரியர்களும் அடங்குவர். புராண கஸ்ஸப்பர், மக்காளி கோசாளர், அஜீத கேசகம்பளர், பகுதா கச்சானர், சஞ்ஜய பேலத்புத்திரர் மற்றும் நிகந்த நாதபுத்திரர் போன்றவர்களிடமும் இந்தக் கேள்வி கேட்கப் பட்டும் அவர்களால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. மேலும் அவர்கள் அதீத கோபத்தையும், மனச்சஞ்சலத்தையும் காட்டினார்கள். பின் அவர்கள் சபியரிடம் எதிர்க் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

சபியருக்கு அப்போது இந்த எண்ணம் தோன்றியது, “இந்த ஆசிரியர்களால் பதில் கூறமுடியவில்லை. பதிலுக்கு என்னிடம் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்கின்றனர். நான் மீண்டும் கீழான (இல்லற) வாழ்விற்குத் திரும்பிப் புலன் ஆசைகளையாவது அனுபவிப்பது நல்லது.”

பின் அவர் நினைத்தார், “துறவி கோதமர் உள்ளார். அவரும் பல சீடர்களைக் கொண்ட ஆசிரியர். கீர்த்தியுடையவர். புகழ்பெற்றவர். மக்களால் அக்கரை சேர்ந்து விட்டதாக நம்பப் படுபவர். அவரிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது?”

ஆனால் மற்றொரு எண்ணமும் அவருக்குத் தோன்றியது, “மதிப்புள்ள துறவிகளும் பிராமணர்களுமான புராண கஸ்ஸப்பர், மக்காளி கோசாளர், அஜீத கேசகம்பளர், பகுதா கச்சானர், சஞ்ஜய பேலத்புத்திரர் மற்றும் நிகந்த நாதபுத்திரர் போன்றவர்களை நான் இந்தக் கேள்வியைக் கேட்டும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. அவர்கள் வயதானவர்கள், வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள், மூத்தவர்கள், புகழ்பெற்றவர்கள், நீண்ட நாள் துறவு பூண்டவர்கள். ஆனாலும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. துறவி கோதமர் இளையவர், சமீபத்தில் தான் துறவு பூண்டவர். அவரால் எப்படி என் கேள்விக்குப் பதில் கூற முடியும்?”

பின் அவர் நினைத்தார், “ஒரு துறவி இளவயதானதால் அவருக்கு மதிப்புத் தராமலோ அவரைக் குறை கூறவோ கூடாது. துறவி கோதமர் இளைய வயதானவராக இருந்தாலும், அவர் சித்தி சக்திகளும், ஆற்றலும் கொண்டுள்ளவர். அவரிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது?”

பின் சபிய என்ற நாடோடி ராஜகிரகம் நோக்கிப் புறப்பட்டார். பல இடங்களில் அலைந்த பின் ராசகிரக, மூங்கில் காட்டிற்கு, அணில்களுக்கு உணவூட்டப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் புத்தரை பணிவுடன் அணுகி அவரிடம் நலம் விசாரித்து வணக்கம் கூறிய பின்னர் அவர் அருகில் அமர்ந்தார். பின் புத்தரிடம் பா வடிவில் அவர் கேட்டதாவது:

சபியர்:
நான் சந்தேகங்கள் நிறைந்தவனாய் உள்ளேன்.
உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்; அவற்றைக் கேட்ட பின்
நீங்கள் அவற்றை விளக்கி என் சந்தேகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
ஒவ்வொரு செய்தியையும் விளக்கிக் கூறுங்கள்.

புத்தர்:
சபியரே, நீர் என்னிடம் கேள்வி கேட்க நீண்ட தூரத்திலிருந்து வந்துள்ளீர்.
அவற்றைக் கேட்ட பின்
ஒவ்வொரு சந்தேகத்தையும் விளக்கிக் கூறி
அவற்றை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்.

கேளுங்கள், சபியரே, நீங்கள் கேட்க
விரும்பியதைக் கேளுங்கள்,
ஒவ்வொரு கேள்வியையும் விளக்கி
ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

சபிய என்ற நாடோடிக்கு இந்த எண்ணம் தோன்றியது: “அருமை! அருமை! அந்த மற்ற துறவிகளிடமும், பிராமணர்களிடமும் கேட்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. ஆனால் துறவி கோதமரோ எனக்கு வாய்ப்பை அமைத்துத் தருகிறார்!” சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

சபியர்:
எதை அடைவதால் ஒருவர் “பிக்கு” என அழைக்கப் படுகிறார்?
ஒருவர் எப்படி “சாந்த"மாவது? ஒருவர் எப்படி தன்னைத் தானே “வசப்படுத்துவது”?
ஒருவர் ஏன் “விழிப்புற்றவர்” எனக் கூறப்படுகிறார்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

புத்தர்:
மார்க்கத்தில் அவர்களே தனித்து நடந்து,
நிப்பாண நிலையை அறிந்த பின், சந்தேகங்கள் அனைத்தும் களையப்பட்டு விடுகின்றன;
தோற்றமும், தோற்றமின்மையும் கைவிடப் படுகின்றன,
முழுமையானவர், மறுபிறப்பை முடித்தவர்: அவர் தான் “பிக்கு”.

எப்போதும் கடைப்பிடியுடனும் (கவனம்) சமநிலையிலும்,
உலகில் யாருக்கும் தீமை செய்யாமலும்;
(பிறவி ஓட்டம் என்ற ஆற்றின்) அக்கரை சென்றடைந்தவர், துயரப்படாதவர்
தற்பெருமை இல்லாதவர்: அவர் தான் “சாந்தமானவர்”.

சிந்தனா சக்திகளை உலகத்தில் வளர்த்து
உள்ளும் வெளியிலும்; (உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்)
இந்த உலகையும் அடுத்த உலகையும் புரிந்து கொண்டவர்கள்,
செய்ய வேண்டியதைச் செய்து விட்டவர்கள்: அவர்களே “அடங்கியவர்கள்”.

காலங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர்
பிறப்பு, இறப்பு என்ற தொடர்ச்சியை அறிந்து (சம்சாரச் சுழலை),
அவாவும் மாசுகளும் நீக்கப்பட்டு, தூய்மையாக,
மறுபிறப்பை முடித்தவர்: அவரே “விழிப்புற்றவர்”.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

சபியர்:
எதை அடைவதால் ஒருவர் “பிராமணர்” என அழைக்கப் படுகிறார்?
ஒருவர் எப்படி “சமணர்” ஆவது”? ஒருவர் எப்படிச் “சுத்தமானவர்” ஆவது?
ஒருவர் ஏன் “நாகர்” எனக் கூறப் படுகிறார்?
இந்தக் கேள்விகளுக்குத் தயை கூர்ந்து பதில் தரவும், அண்ணலே.

புத்தர்:
தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்ட பின்,
கறையில்லாமல், நல் அமைதியுடன், உறுதியுடன்;
பிறப்பு, இறப்பு என்ற தொடர்ச்சிக்கு அப்பாற் சென்று,
பூரணமானவராக, பற்றில்லாதவராக இருப்பவர் எவரோ,
அவர் தான் “பிராமணர்”.

அமைதியுடன், இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கைவிட்டு, தூய்மையாக,
இந்த உலகையும் அடுத்த உலகையும் புரிந்து கொண்டவர்கள்,
பிறப்பு இறப்பு என்ற தொடர்ச்சிக்கு அப்பாற் சென்று,
வாய்மையோடு செயல்படுபவர் எவரோ அவர் தான் “சமணர்”.

தீச்செயல்களை விட்டுவிட்ட பின்,
உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்,
மனிதனாகவோ, தேவராகவோ பிறக்க
விருப்பமில்லாதவர் எவரோ, அவர் தான் “சுத்தமானவர்”.

உலகில் தீங்கு செய்யாமல் இருந்து,
சுமை ஏதும் தாங்காதவர்;
எதன்மீதும் பற்றில்லாமல், சுதந்திரமாக,
வாய்மையோடு செயல்படுபவர் எவரோ, அவர் தான் “நாகர்”.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதில் மொழியைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

சபியர்:
“உலகங்களை வென்றவர்” எனப் புத்தர்கள் கூறுவது யாரை?
ஒருவர் எப்படித் “திறமையானவர்” ஆவது”? “பண்டிதர்” யார்?
ஒருவர் ஏன் “முனிவர்” எனக் கூறப்படுகிறார்?
இந்த கேள்விகளூக்குப் பதில் தரவும், அண்ணலே.

புத்தர்:
பிறவி எடுக்கும் உலகங்களைப் பகுப்பாய்வு செய்த பின்,
தேவர், மக்கள், பிரம்மர் உலகங்கள் உட்பட்ட,
இந்தப் பிறவிகளுடன் பற்றுக் கொள்வதிலிருந்து விடுபடுகிறவர்,
வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் “உலகங்களை வென்றவர்”.

பொக்கிஷங்களைளைப் பகுப்பாய்வு செய்த பின்,
தேவர், மக்கள், பிரம்மர்களுடைய பொக்கிஷங்கள் உட்பட்ட
பொக்கிஷங்களுடன் பற்றுக் கொள்வதிலிருந்து விடுபடுகிறவர்,
வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் “திறமையானவர்”.

புலன்களையும் புலன் பொருட்களையும் பகுப்பாய்வு செய்த பின்,
உள்ளும் வெளியிலும், ஒருவர் தெளிந்த அறிவுடன்,
நன்மை தீமை ஆகியவற்றிற்கு அப்பாற் சென்று,
வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் “பண்டிதர்”.

நன்மையான விதிகளையும், தீயவிதிகளையும் தெரிந்து,
உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்;
தேவர்களும் மனிதரும் போற்றக் கூடிய,
ஒரு கட்டும் இல்லாமல், எந்த வலையிலும் சிக்காமல் இருப்பவரே, “முனிவர்”.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

சபியர்:
எதை அடைவதால் ஒருவர் “அறிவுடையவர்” எனப்படுகிறார்?
ஒருவர் எப்படி “அறிந்தவர்” ஆவது”?
ஒருவர் எப்படி “ஊக்கமுடையவர்” ஆவது?
ஒருவர் ஏன் “மேன்மையானவர்” எனக் கூறப்படுகிறார்?
இந்த கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

புத்தர்:
புலமை, கல்வி, கேள்விகளால் பெற்ற அறிவுகளையெல்லாம்
அது துறவிகள் வழியாகவோ பிராமணர் வழியாகவோ, எவ்வழியாக வந்ததாக இருப்பினும்
முழுமையாக ஆராய்ந்தவர், எல்லா நுகர்ச்சிகளின் மீதுள்ள (இன்பமான, துன்பமான, இரண்டும் அல்லாத)
ஆசைகளிடமிருந்து விடுபடுகிறவர், அனைத்து நுகர்ச்சிகளுக்கும் அப்பால் சென்றவர், அவர் தான் “அறிவுடையவர்”.

மனம் மற்றும் பொருள் (அருவுரு, நாம ரூப)) சம்பந்தப்பட்ட ஏராளமாகத்
தோன்றும் செய்திகளைப் புரிந்தவர், உள்ளும் வெளியிலும்,
இவையே நோய்க்கான வேர் என அறிந்து நோய்களிடமிருந்து விடுபடுகிறவர்,
வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் “அறிந்தவர்”.

தீய செயல்களைத் தவிர்த்தவர்,
ஊக்கமுடையர், நரக வேதனையிலிருந்து தப்பிக்கின்றவர்,
சுறுசுறுப்பாகவும், திடமாகவும்
வாய்மையோடும் செயல்படுபவர்: அவர் தான் “வீரர்”.

சுமையை இறக்கியவர், உள்ளும் வெளியிலும்,
இவையே பற்றுக்கான வேர் என்பதை அறிந்து
பற்றுக்கான வேரிலிருந்து விடுபடுகிறவர்,
வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் “மேன்மையானவர்”.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

சபியர்:
எதை அடைவதால் ஒருவர் “அறிஞர்” எனப்படுகிறார்?
ஒருவர் எப்படி “ஆரியர்” ஆவது”?
ஒருவர் எப்படி “நன்னடத்தை” உடையவராவது”?
ஒருவர் ஏன் “நாடோடி” எனக் கூறப்படுகிறார்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

புத்தர்:
நேர்முக அறிவினால் உலகிலுள்ள
அனைத்து உணரத்தக்க காட்சிகளையும் அறிந்தவர்,
எது நிந்திக்கத் தக்கது, எது நிந்திக்கத் தகாதது என்பதை அறிந்தவர்;
வெற்றி பெற்றவர், சந்தேகம் இல்லாதவர், சுதந்திரமானவர்,
எதற்காகவும் கலக்கம் அடையாதவர், அவரே “அறிஞர்”.

கறைகளையும், பற்றுகளையும் விட்டொழித்து,
தான் மீண்டும் கருவில் தோன்ற மாட்டோம் என்பதைத் தெரிந்தவர்,
மூன்று தவறான குறிப்புகளையும் நீக்கியவர், மீண்டும் பிறவித் துன்பம் அனுபவிப்பதில்லை.
அவரைத்தான் “ஆரியர்” என்கின்றனர்.

நன்னடத்தையில் தேர்ந்தவர், விதிமுறைகளைத் திறமையுடன் அறிந்து;
எதன் மேலும் பற்றில்லாமல், விடுவிக்கப்பட்ட மனத்துடன்,
எவர் மீதும் வருத்தம் கொள்ளாமலிருப்பவரே
“நன்னடத்தை” யுள்ளவர்.

துக்கத்திற்கு எடுத்துச் செல்லும் எச்செயலும்,
மேல், கீழ், மறுகரையில் அல்லது நடுவில்—எங்கிருந்தாலும் சரி;
வீடு துறந்தவர் முழுமையாகப் புரிந்து கொண்டு மாயம், அகம்பாவம், அவா மற்றும் வெறுப்பை
மனத்தாலும் உடலாலும் களைந்து விட்டவர், அவரைத்தான் “நாடோடி” என்கின்றனர்.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து அவர் மேலாடையை ஒரு தோலின் மீது சரி செய்து வணங்கிய கைகளுடன் புத்தரைப் போற்றுவதற்காக இவ்வரிகளைக் கூறினார்:

சபியர்:
பெரும் மெய்ஞ்ஞானம் உடையவர் நீங்கள் (ஆபத்தான) கொடும் வெள்ளத்தைக் கடந்தவர்,
மனக் குறிப்புகளையும் உலக வழக்கங்களையும்
சார்ந்துள்ள போலிப் புகலிடங்களான மூன்றும், அறுபதுமான
பல துறவிகளின் கோட்பாடுகளை வென்றவர்.

துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளவர், துக்கத்தின் மறுகரைக்குச் சென்றவர்,
உங்களை நான் ஒரு அருகர் என்று அழைக்கின்றேன்,
முழுமையாக விழிப்புற்றவர், மாசுகளை முடித்தவர்;
அருமையானவர், பிரதிபலிப்பவர், பரந்த ஞானமுடையவர்,
என்னைக் கரை சேர்த்து விட்டீர்கள், துக்கத்தை முடிப்பவரே.

சூரிய வம்சத்தவரே! எனது கவலைகளைப் புரிந்து கொண்டு
எனது சந்தேகங்களை முடித்து வைத்தவரே,
உங்களை நான் போற்றுகிறேன்!
அமைதியான வழிகளில் திறமையுள்ள முனிவர் நீங்கள், சாந்தமானவர், இரக்கமற்றவரல்ல.

முன் இருந்த எனது கவலைகளுக்குப்
பதில் கொடுத்த தீர்க்கதரிசியே; நீங்கள் கண்டிப்பாக ஒரு முனிவர் தான்,
முழுமையாக விழிப்புற்றவர்,
உங்களுக்கு மனத்தடங்கல் ஏதும் இல்லை.

உங்கள் துயரமெல்லாம்
அழித்துத் தகர்க்கப்பட்டு விட்டன.
குளுமையானவர், அடக்கமானவர்,
உறுதியுடையவர், வாய்மையில் வலிமையானவர்.

நாகர்க்கு நாகர், ஒரு மாவீரர்,
நீங்கள் பேசும் போது, தேவர்களும்,
நாரதர்களும், பப்பத்தர்களும்,
மகிழ்ச்சியடைவர்.

உங்களைப் போற்றுகிறேன், மனிதருள் முழுமையானவரே!
உங்களைப் போற்றுகிறேன், மனிதருள் சிறந்தவரே!
கடவுளரும் உள்ள இந்த உலகில்,
உங்களைப் போன்றவர் எவரும் இல்லை.

நீங்களே புத்தர், நீங்களே ஆசான்,
மாரனை வென்ற முனிவரும் நீங்களே, உள்மனத்துள் உள்ள வேட்கைகளை வெட்டியெறிந்தவர்,
அக்கரை சேர்ந்தவர்,
இந்தத் தலைமுறையினரையும் அக்கரை சேர்ப்பவர்.

எல்லாப் பற்றுகளையும் விட்டவர்,
எல்லா மாசுகளையும் துண்டித்தவர்,
நீங்கள் ஒரு சிங்கம், பற்றில்லாமல்,
பயத்தையும், பீதியையும் கைவிட்டவர்.

பனித்துளி தாமரையை மாசு செய்யாதது போல,
நல்லதும், தீயதும் உங்களைப் பாதிப்பதில்லை.
உங்கள் காலை நீட்டுங்கள், எனது தலைவனே!
சபியன் தன் ஆசானை வணங்குகிறேன்!

பின் சபியர் புத்தர் பாதங்களில் விழுந்து வணங்கி இவ்வாறு கூறினார்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். உங்கள் முன்னிலையில் சங்கத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி கேட்கிறேன், பாந்தே (ஐயா).”

“சபியரே, மற்ற சமயப் பிரிவைச் சேர்ந்தவர் சங்கத்தில் சேர்வதற்கும், இந்த தம்மத்தையும் வினய விதிகளையும் கடைபிடிக்க அனுமதி கேட்கும் போது அவர் நான்கு மாதங்கள் சோதனை நிலையில் இருக்கவேண்டும். நான்கு மாதங்களுக்குப் பின்னர் சங்கத் துறவிகள் திருப்தியடைந்தால் அவரைப் பிக்குவாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒருசிலரைப் பொருத்தவரை மாற்று முடிவையும் எடுப்பதுண்டு.”

“போற்றுதற்குரிய, ஐயா, அப்படியானால் நான் நான்கு மாதங்கள் சோதனை நிலையில் இருப்பேன். நான்கு மாதங்களுக்கு பின் துறவிகள் திருப்தி அடைந்தால் என்னை பிக்குவாக அனுமதிக்கட்டும்.”

பின் சபியர் புத்தர் முன்னிலையில் சங்கத்தில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரும் ஒரு அருகர் ஆனார்.