சுத்த நிபாதம் 3.7

சேல சூத்திரம்—சேலரும் அவர் புத்தரைப் போற்றியதும்

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை பிரகாசிப்பவர் (புத்தர்) அங்குத்தராபான்களின் நிலங்கள் வழியாக ஒரு பெரும் பிக்கு சங்கத்தினருடன், ஆயிரத்து இருநூற்றைம்பது பிக்குகளுடன் ஆபனா என்ற ஊருக்கு வந்தார்.

சடைத்தலையரான சன்னியாசி, கேனியா இதைப் பற்றிக் கேள்விப் பட்டார்: “சமணர் கோதமர், சாக்கியரின் புதல்வர், சாக்கியர் மத்தியில் வீடு துறந்தவர், அங்குத்தராபான்களின் மத்தியில் பெரிய பிக்கு சங்கக் கூட்டத்தோடு, ஆயிரத்து இருநூற்றைம்பது பிக்குகளுடன் ஆபனா என்ற ஊருக்கு வந்துள்ளார். இதைப் பற்றி ஒரு சிறந்த கருத்துப் பரவியிருக்கிறது: “பிரகாசிப்பவர் ஒரு அரஹந்தர், முழுமையாக விப்புற்றவர், முழுமையான அறிவும், நடத்தையும் கொண்ட அவர், நல்ல வழியில் சென்ற அவர், பிரபஞ்சத்தை அறிந்த அவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆசிரியரான அவர்; விழிப்புற்றவர்; பிரகாசிப்பவர். தேவர்களும், மாரரும், இளவரசர்களும், மக்களும் உள்ள இந்த உலகை நேரடியான அறிவாற்றலோடு தெரிவிக்கிறார். அவர் துவக்கத்திலும், மத்தியிலும், இறுதியிலும் சிறந்த தம்மத்தைக் கற்பிக்கிறார். அதன் தெளிவான நோக்கத்தையும், பொருளையும் கற்பிக்கிறார். நல்வாழ்க்கையை அதன் முழுமையையும், தூய்மையையும் தெளிவு படுத்துகிறார்.” இப்படிப்பட்ட அருவர்களைப் (அரஹந்தர்களை) பார்ப்பது நல்லது.

சடைத்தலையரான சன்னியாசி கேனியா பிரகாசிப்பவரைப் பார்க்கச் சென்று நலம் விசாரித்தபின் ஒருபுறமாக உட்கார்ந்தார். பிரகாசிப்பவர் அவருக்குப் போதனை தந்து ஊக்குவித்து எழுச்சி உண்டாகினார். அறப் போதனையைக் கேட்டபின் கேனியார், “கோதமரும் பிக்கு சங்கத்தினரும் நாளைய உணவை என்னிடம் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கின்றேன்,” என்றார்.

பிரகாசிப்பவர் அதற்கு, “கேனியரே பிக்கு சங்கம் பெரியது. ஆயிரத்து இருநூற்றைம்பது பிக்குகள் உள்ளனர். மேலும் உங்களுக்குப் பிராமணரிடமும் நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.

ஆனால் அந்த வேண்டுகோள் இரண்டாம் முறையும் பின் மூன்றாம் முறையும் விடுக்கப் பட்டது. மூன்றாம் முறைக்குப் பின்னர் புத்தர் பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்து வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.

கேனியர் புத்தர் சம்மதம் தெரிவித்ததை அறிந்து, அவருக்கு மரியாதை செலுத்தித் தனது ஆசிரமத்துக்குத் திரும்பினார். அவர் தனது நண்பர்களிடமும், தோழர்களிடமும், குடும்பத்தவரிடமும், உறவினரிடமும், “கேளுங்கள் இனிய நண்பர்களே, தோழர்களே, குடுபத்தினரே, உறவினரே! நான் துறவி கோதமரைப் பிக்கு சங்கத்தினருடன் நாளை உணவுக்கு அழைத்திருக்கின்றேன். சேவை செய்வதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா?”

“சரி, ஐயா,” என்று ஒத்துக் கொண்டனர் கேனியரின் நண்பர்களும், தோழர்களும், குடும்பத்தினரும் உறவினரும். சிலர் அடுப்புக்கு வேண்டிய குழிகளைப் பறித்தனர், சிலர் (விறகுக்கு வேண்டிய) மரங்களை வெட்டினர், சிலர் பாத்திரங்கள் கழுவினர், சிலர் தண்ணீர்க் குடங்களை வெளியே எடுத்தனர். மற்ற சிலர் அமரும் இடங்களுக்கு ஏற்பாடு செய்தனர். மாலை நேரத்தில் கேனியர் பந்தல் போட்டார்.

அச்சமயத்தில் பிராமணர் சேலர் ஆபனாவிற்கு வருகை தந்திருந்தார். அவர் மூன்று வேதங்களையும் நன்கு கற்றவர். மேலும் வேதங்களின் சொற்பொருள், சடங்கு, பேசும் முறை, சொல்லிலக்கணம், வரலாறு அனைத்தையும் நன்கு தெரிந்தவர். அத்துடன் மொழி, இலக்கணம், பிரபஞ்சம் சார்ந்த படிப்பிலும், பெரிய மனிதரின் அடையாளங்களையும் தெரிந்தவர். அவர் வேத நூட்களை முன்னூறு இளம் மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

அச்சமயத்தில் சடைத்தலையரைச் சேர்ந்த கேனியருக்கு அந்தப் பிராமணர் சேலரிடம் நம்பிக்கை இருந்தது. சேலர் தன் முன்னூறு மாணவர்களுடன் நடந்து கொண்டிருக்கையில் கேனியரின் ஆசிரமத்துக்கு வந்தார். சேலர் அங்கு நடந்து கொண்டிருந்த பரபரப்பான செயல்களைப் பார்த்துக் கேனியரிடம், “ஐயா கேனியரே, உங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடக்கவிருக்கிறதா, அல்லது பெரும் யாகம் செய்யவிருக்கின்றீர்களா அல்லது சேனிய பிம்பிசாரர், மகத நாட்டு மன்னனையும் அவர் படையினையும் அழைத்திருக் கின்றீர்களா?” என்று வினவினார்.

“இல்லை சேலரே, திருமணமும் இல்லை, மன்னனையும் அழைக்கவில்லை. ஆனால் நான் ஒரு பெரும் சமர்ப்பணம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். சாக்கிய குலத்திலிருந்து வீடு துறந்த துறவி கோதமர் என்பவர் ஆபனாவிற்குத் தனது பெரும் பிக்கு சங்கத்தாருடன் வந்திருக்கின்றார். அவரைப் பற்றிச் சிறந்த செய்திகள் பரவியுள்ளன: ‘பிரகாசிப்பவர் ஒரு அரஹந்தர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், நல்ல வழியில் சென்றவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர்; விழிப்புற்றவர்; பிரகாசிப்பவர்.’ அவரையும் அவர் பிக்கு சங்கத்தையும் நாளை உணவிற்கு நான் அழைத்திருக்கின்றேன்.

“கேனியரே, நீங்கள் ‘விழிப்புற்றவர்’ என்றீரா?”
“ஆம் சேலரே, நான் ‘விழிப்புற்றவர்’ என்றேன்!”
“கேனியரே, நீங்கள் ‘விழிப்புற்றவர்’ என்றீரா?”
“ஆம் சேலரே, நான் ‘விழிப்புற்றவர்’ என்றேன்!”

பிராமணர் சேலருக்கு இவ்வாறு தோன்றியது: “இக்காலத்தில் ‘விழிப்புற்றவர்’ என்ற வார்த்தையைக் கேட்பதே அறிது. எமது வேத மரபில் ஒரு மாமனிதனின் முப்பத்திரண்டு அடையாளங்களைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படிபட்ட குறிகளைக் கொண்ட மாமனிதருக்கு இரண்டு விதிகள் மட்டுமே இருக்கும். வேறு எதுவும் இருக்கமுடியாது.
வீட்டில் வாழ்ந்தால் அவர் மன்னர், நியாயமான சக்கரவர்த்தி, நான்கு திசைகளையும் வென்றவர், நாட்டை நிலைப்படுத்தியவர், ஏழு பேறுகளையும் பெற்றவராயிருப்பார். அந்த ஏழு பேறுகளாவன: திருவாழி – சக்கராயுதம், வாரணம் – யானை, (புகர்முக வாரணம் (மணிமேகலை 7, 115)), ஆகாயத்தில் பறக்கும் அசுவம் (பறக்கும் குதிரை), இரத்தினம் (தனிச்சிறப்புக் கொண்டது), அழகான பண்புள்ள மனைவி, போர்த் திறன் மிக்க தளகர்த்தன் (படைத்தலைவன்), அறிவு மிக்க மந்திரி. அவர் ஆயிரம் மகன்களைக் கொண்டவராயிருப்பார். அவர்கள் துணிச்சலுள்ளவர்களாகவும், வீரர்களாகவும் எதிரிகளின் படைகளை நொறுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கடல் எல்லைவரை வெற்றி கொண்டபின் அவர் ஆயுதங்களையும் வன்முறையையும் பயன்படுத்தாமல் நியாயமாக நாட்டை ஆள்வார்.
ஆனால் அவர் வீடு துறந்து துறவியானால் அவர் ஒரு அருகனாவார் (அரஹந்தர், ஞானி). முழுமையாக விழிப்புற்ற புத்தராவர். உலகைச் சூழ்ந்திருக்கும் திரையை அகற்றுவார்.”

“கேனியரே அந்த அருகர், முழுமையாக விழிப்புற்ற புத்தர் இப்போது எங்கு தங்கியிருக்கிறார்?”

அவர் இவ்வாறு கேட்டவுடன், சடைத்தலையரைச் சேர்ந்த கேனியர் பிராமணர் சேலரின் வலதுகையைப் பிடித்தவாறு, “அந்த நீல நிறக் காடு உள்ள இடத்தில், சேலரே,” என்று சுட்டிக் காட்டினார். பின் சேலரும் அவர் முன்னூறு மாணவர்களும் புத்தரிடம் சென்றனர். சேலர் தன் மாணவர்களிடம், “அமைதியாக வாருங்கள்! வரிசையாக ஒரு படி அடுத்த படியைத் தொடரட்டும்! தனியாக வாழும் சிங்கத்தைப் போலப் புத்தரை அணுகுவது கடினம். பின் நான் துறவி கோதமரிடம் பேசுகையில் குறுக்கே பேசாதீர்கள். நாங்கள் பேசிமுடிக்கும் வரை காத்திருங்கள்,” என்றார்.

பின் சேலர் புத்தரை அணுகி நலம் விசாரித்து ஒருபுறமாக அமர்ந்தார். புத்தரின் உடலை முப்பத்திரண்டு அறிகுறிகளுக்காகக் கண்ணோட்டமிட்டார். இரண்டைத் தவிர மற்றவற்றை கவணிக்க முடிந்தது. அந்த இரண்டைப் பற்றி அவருக்குச் சந்தேகம் இருந்தது: பாலுறுப்புகள் உறையில் இருக்கின்றனவா என்பதையும், நீண்ட நாக்குள்ளவரா என்பது பற்றியும் அவருக்குச் சந்தேகம் இருந்தது.

புத்தரும் சேலர் முப்பது குறிகளை அடையாளம் கண்டதையும் இரண்டில் சந்தேகம் இருப்பதையும் உணர்ந்தார். அவர் தன் இருத்தி சக்திகளைக் கொண்டு தனது பாலுருப்புகள் உறையில் இருப்பதைச் சேலருக்குத் தெரியப் படுத்தினார். பின் தனது நாக்கை நீட்டித் தனது இரண்டு காதுகளையும் தொடுமாறும், தனது இரண்டு மூக்குத் துவாரங்களைத் தொடுமாறும், நெற்றியை மறைப்பதையும் காட்டினார்.

பின் சேலருக்கு இப்படித் தோன்றியது: “இந்தத் துறவி கோதமர் மாமனிதரின் முப்பத்திரண்டு அடையாளங்களும் கொண்டிருப்பவர். ஆனால் அவர் விழிப்புற்றவரா இல்லையா என்பது தெரியவில்லை. பெரியவர்கள், மரியாதைக் குரிய பிராமணர்கள், ஆசிரியரின் ஆசிரியர்கள், ஒரு அருக்கர், முழுமையாக விழிப்புற்ற புத்தர் தமது புகழ் பேசப்படும் போது தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக்கொள்வார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் துறவி கோதமரின் புகழைச் சரியான பாவடிவில் பாடினால் என்ன?”

பின் பிராமணர் சேலர் இவ்வாறு கூறினார்:

சேலர்:
ஓ பிழையற்ற உருவமும், பொலிவும் கொண்டவரே,
கச்சிதமாகவும், பார்க்க அழகாகவும் உள்ளவரே,
தங்க நிறமும், மின்னும் பற்களையும் கொண்டவரே
தாங்களே போற்றுதற்குரியவர், ஊக்கமுள்ளவர்.

உங்கள் உடம்பு சரியான உடல் கட்டுடையவருக்கான
எல்லாச் சிறு அறிகுறிகளையும் கொண்டுள்ளது,
மேலும் மாமனிதரின் எல்லா (பெரிய) அறிகுறிகளும்
உடல் முழுதும் காணப்படுகிறது.

தெளிவான கண்களும், பளிச்சென்ற முகத்தோற்றமும்,
இங்கு சமணர்கள் மத்தியில்
உயரமான, நிமிர்ந்த, கம்பீரமான தோற்றமுடையவர்,
உச்சிக் கதிரவன் போலப் பிரகாசிப்பவர்

பிக்குவே உங்களைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருமையான தங்க நிறத்தோல்கள்.
இவ்வளவு மேன்மையான தோற்றமுடையவருக்கு
இந்தச் சமணர் வாழ்வு ஏன்?

சக்கரம் சுற்றும் மன்னனாக இருக்கத் தகுதியானவர் நீங்கள்,
போர் இரதத்தில் அமர்ந்தவாறு ஓர் எல்லையிலிருந்து
மற்ற எல்லையிலுள்ள நிலத்திற்கு உறுதியான திடமான அரசனாய்,
ஜம்புதீபத்தினை வெற்றி கொண்ட தலைவனாய்

ஆரியர்களும் பெரிய மிராசுதார்களும்
உங்களுக்குக் கப்பம் கட்டப் பிரபுகளுக்குப் பிரபுவாய்,
மனிதருக்கு அரசனாய்,
ஓ கோதமரே உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி அரசாளுங்கள்.

புத்தர்:
நான் ஒரு அரசன், சேல,
தம்மத்தின் தலைசிறந்த அரசன்,
தம்மத்தைக் கொண்டு சக்கரத்தைச் சுற்றுகிறேன்,
பின்வாங்க முடியாத சக்கரம் அது.

சேலர்:
நீங்கள் விழிப்புற்றவரென்று கூறுகின்றீர்கள்,
தம்மத்தின் தலைசிறந்த அரசன்,
“தம்மத்தைக் கொண்டு சக்கரத்தைச் சுற்றுகிறேன்”, என்று கூறுகின்றீர்கள் கோதமரே.
அப்போது உங்கள் படைத்தலைவன் யார்,
ஆசிரியரைப் பின் தொடரும் மாணவர்;
உங்களுக்குப் பின் தம்மச் சக்கரத்தைச் சுற்ற வைத்துக் கொண்டிருப்பவர் யார்?

புத்தர்:
என்னால் சக்கரம் சுற்றவைக்கப் பட்டது
தலைசிறந்த தம்மச்சக்கரம் அது,
சாரிபுத்திரர் எனக்குப் பின்
அதைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்.

தெரிந்து கொள்ள வேண்டியது தெரிந்து கொள்ளப் பட்டுள்ளது;
வளர்க்கப்பட வேண்டியது வளர்க்கப் பட்டுள்ளது;
விட்டுவிட வேண்டியது விட்டுவிடப் பட்டுள்ளது;
அதனாலேயே பிராமணா, நான் விழிப்புறவனாகிறேன்.

என்னிடம் உள்ள சந்தேகங்களை விடு,
நம்பிக்கை வை, பிராமணா;
இந்தக் காட்சி கிடைப்பது கடினம்,
புத்தர்கள் தோன்றுவது மிகமிக அரிது.

உலகில் கிடைத்தற்கரியது அது,
தெளிவாக்கப்படுவது சில சமயமே;
நான், பிராமணா, விழிப்புற்றவன்,
தன்னிகரில்லாச் சிகிச்சை நிபுணர்.

நான் தலைசிறந்தவன், ஒப்பிட முடியாதவன்,
மாரனின் படையை நொறுக்கியவன்;
என் பகைவரை அடக்கியபின்,
நான் மகிழ்கிறேன், எதற்கும் பயப்படாமல்.

சேலர்:
நல்ல சீடர்களே (மாணவர்களே), கேளுங்கள்
முனிவர் சொன்னபடி, அவர் ஒரு சிகிச்சை நிபுணர் (துக்கத்தைக் குணப்படுத்துபவர்),
மாவீரர்,
வனத்துள் கர்ஜிக்கும் சிங்கத்தைப் போன்றவர்.

அவர் தலைசிறந்தவர், ஒப்பிட முடியாதவர்,
மாரனின் படையை நொறுக்கியவர்;
அவரைப் பார்த்தும் ஊக்கமடையாதோர் எவர்,
இருட்டான உள்ளமுடையவர் தவிர?

நான் விரும்பியது வந்து விட்டது,
நான் விரும்பாதது சென்று விட்டது;
இப்போதே நான் துறவறம் பூணுவேன்,
மேன்மையான ஞானம் பெற்றவர் முன்னிலையில்.

மாணவர்கள்:
உங்களுக்கு விருப்பம் என்றால், ஐயா,
நாங்களும் துறவறம் மேற்கொள்வோம்,
முழுமையாக விழிப்புற்ற புத்தரின் போதனையில்,
மேன்மையான ஞானம் பெற்றவர் முன்னிலையில்.

விவரிப்பவர்:
பின் கைகூப்பி
இந்த முன்னூறு பிராமணரும் கூறியது:
“நாங்கள் புனித வாழ்வை மேற்கொள்வோம்
புத்தரின் முன்னிலையில்.”

புத்தர்:
புனித வாழ்வு நன்கு விவரிக்கப்பட்டுள்ளது,
இங்கேயே இப்போதே தெளிவாகும்,
இந்த வாழ்க்கையிலேயே அறியப்படக்கூடியது,
ஊக்கத்தோடு பயிற்சி செய்வோருக்கு புனித வாழ்க்கை மேற்கொள்வது பயனற்றதாகாது.

பின் புத்தர் முன்னிலையில் சேலரும் அவர் மாணவர்களும் துறவறம் பூண்டனர். இரவு முடிந்ததும், சடைத்தலையரான கேனியார் தனது ஆசிரமத்தில் சிறந்த உணவைத் தயாரித்தபின் புத்தரிடம்: “உணவு தயாராகி விட்டது கோதமரே,” என்று அறிவித்தார். காலையில் புத்தர் துவராடை உடுத்துக் கொண்டு, பிச்சா பாத்திரத்தோடும், மேலாடையோடும், கேனியருடைய ஆசிரமத்துக்குப் பிக்கு சங்கத்தாருடன் சென்று அவருக்கென்று அமைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

பின் கேனியர் பிக்கு சங்கத்திற்கும் அவர்கள் தலைமையில் இருந்த புத்தருக்கும் சிறந்த உணவு பரிமாறி அவர்களைத் திருப்திப் படுத்தினார் (பசி நீக்கினார்). பின் புத்தர் உணவை உண்டபின் பாத்திரத்திலிருந்து கையை எடுத்த பின், கேனியர் தாழ்மையான ஓர் ஆசனத்தில் ஒரு பக்கமாக அமர்ந்தபோது புத்தர் பா வடிவில் இவ்வாறு பாராட்டினார்:

புத்தர்:
தீயில் ஹோமம் செய்வது சமர்ப்பணங்களில் முதலாவது;
சாவித்திரி, செய்யுள் பாணிகளுள் சிறந்தது;
மனிதருக்குத் தலைவன் அரசன்;
ஆறுகளுக்கு முதன்மையானது கடல்.

வானத்தில் தோன்றுவனவற்றுள் நிலவே சிறந்தது;
தீக்களுள் கதிரவனே முதலாமவன்;
ஆனால் நன்மை செய்ய விரும்புவோருக்கு,
சங்கத்திற்குத் தானம் கொடுப்பதே மேன்மையானது.
புத்தர் தனது நன்றியைக் கேனியருக்கு இந்த வார்த்தைகளால் தெரிவித்தபின், தனது ஆசனத்திலிருந்து எழுந்து புறப்பட்டார்.

போற்றுதற்குரிய சேலரும் அவரைப் பின் தொடர்வோரும், தனிமையுடனும் விலகியும் வாழ்ந்து, ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும் அந்தத் ‘தன்னிகரில்லா நிலையை’ அடைந்தனர். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவர்களுக்கு உயர்ந்த அறிவினால் தெரிந்தது: ‘பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப் பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது இனி ஒன்றும் இல்லை. இனி மீண்டும் பிறப்பெடுக்கப் போவதில்லை.’ இவ்வாறு போற்றுதலுக்குரிய சேலரும் அவரைப் பின்தொடர்வோரும் அருகர் ஆனார்கள்.

பின் சேலரும் அவரைப் பின் தொடர்வோரும் புத்தரிடம் சென்று, தங்கள் ஆடைகளைச் சீர் செய்து கொண்டு, கைகளைச் சேர்த்து (தலைக்கு மேல்) நீட்டி இந்த வரிகளைப் பாவடிவில் கூறினர்:

சேலர்:
ஏழு நாட்கள் கடந்துள்ளன, எல்லாம் தெரிந்த முனிவரே,
உங்களிடம் புகலிடம் சென்றதிலிருந்து.
ஏழு இரவுகளில், பிரகாசிப்பவரே,
உங்கள் போதனைகளைக் கொண்டு நாங்கள் அடங்கி விட்டோம்.
நீங்கள் புத்தர், நீங்கள் ஆசிரியர்
மாரனை வெற்றி கொண்ட முனிவர் நீங்கள்,
எல்லாத் தீய தூண்டுதல்களையும் வெட்டியெறிந்தவர்,
அக்கரை சென்றவர், மற்றவரையும் அக்கரைக்குச் கொண்டு சேர்த்தவர்.

எல்லாப் பற்றுகளையும் விட்டு விட்டோம்,
எல்லா மாசுகளையும் நீக்கி விட்டோம்,
எதையும் பற்றாமல் உள்ள சிங்கத்தைப் போல,
பயமும் பீதியும் இனி எங்களுக்கு இல்லை.

இங்கு நிற்கும் முன்னூறு பிக்குகள்,
தாமரை வடிவில் கை சேர்த்துள்ளோம்:
காலை நீட்டுங்கள் மாவீரரே,
இப்போது இந்த மாசற்றோர் அனைவரும்
அவர்கள் ஆசிரியரை வணங்குவதற்காக.