சுத்த நிபாதம் 3.8

சல்ல சூத்திரம்—அம்பு

குறிப்பிடப் படவில்லை,
தெரியவும் இல்லை
—பூவுலக வாழ்க்கையின் காலம்—
வாழ்க்கை கடுமையானது,
குறுகியது,
துன்பத்தோடு கட்டுப்பட்டது.
பிறந்தவர் எவரும்
மரணத்தைத் தவிர்ப்பதென்பது
இயலாத காரியம்.
முதுமை அடைந்தபின்
இருப்பது மரணம்.
இதுவே உயிரினங்களின்
இயற்கைக் குணம்.

பழுத்த பழங்களுக்கு உள்ள ஆபத்து
அவை விழக்கூடும் என்பதே.
அதுபோலவே பிறந்தபின் மனிதர்களுக்குத் தொடர்ந்து உள்ள ஆபத்து அவர்களின் மரணம் தான்.

குயவரின் மண்பாண்டங்கள்
பெரியவையும், சிறியவையும்
நெருப்பில் இடப்பட்டவையும் இடப்படாதவையும்
எல்லாம் ஒரு நாள் உடைந்துபோய் விடும்.
அது போலவே உயிரும்
மரணத்தை நோக்கிப் பயணிக்கிறது.

இளையவரும், முதியவரும்,
அறிவுள்ளவரும், அறிவிலியும்,
பணக்காரரும், ஏழையும்
அனைவரும்
மரணத்தின் பிடியிலிருந்து
தப்புவதில்லை.

மரணத்திடம் சிக்கியவர்,
மறுமைக்குச் சென்றவர்
தந்தையாலும் மகனைப்
பாதுகாக்க முடியாது
உறவினரும் உறவினனைப்
பிடித்து வைக்க முடியாது.

பார்!
உறவினர் அழுது புலம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
இறக்க வேண்டியவர்கள்
ஒவ்வொருவராக
இழுத்துச் செல்லப் படுகின்றனர்—
அடிமாடுகள் கசாப்புக் கிடங்குக்கு
இட்டுச் செல்லப் படுவதுபோல.

இப்படித்தான் உலகம்
மூப்போடும் சாக்காட்டோடும்
துன்பப் படுகிறது.
எனவே விவேகம் உள்ளவர் துயரப்படுவதில்லை
உலகியல்பை அறிந்தவர் என்பதால்.

“வந்த வழியும் தெரியாமல்,
போகும் வழியும் புரியாமல்,
இருமுனையிலும் நடப்பது தெரியாதோர்
வீணாகப் புலம்புகின்றனர்.”

புலம்புவதால்
—குழம்பிய நிலையில் தமக்குத் தாமே சேதம் விளைவித்துக் கொண்டு—
எதேனும் பயன் இருந்தால்
விவேகமுள்ளவரும் புலம்புவார்கள்.
ஆனால் புலம்பலுடனும் துயரத்துடனும் கிடைப்பதல்ல
அறிந்ததனால் வரும் அமைதி.
இவற்றால் மேலும் துயரமே உண்டாகும்.
உடலுக்கும் கேடு உண்டாகும்.
உடல் மெலிந்து, வெளிறி
தங்களுக்குத் தாங்களே
கேடு உண்டாக்கிக் கொள்கின்றனர்.
இதுவல்ல, இறந்தவரைப்
பாதுகாக்கும் வழி.
புலம்புவதால் பயன் ஏதும் இல்லை.

துயரத்தை விடாமையால், மாந்தர்
மென்மேலும் துயரப் படுகின்றனர்.
காலம் முடிந்து விட்டவரை எண்ணிப் புலம்புவதால்
மேலும் துக்கத்தின் பிடியில்
சிக்கித் தவிக்கின்றனர்.

மற்றவர் அனுபவிக்கும்
வினைக்கேற்ற பயனைப் பாருங்கள்!
மரணத்தின் பிடியில் இருப்போர்
நடுக்கம் கொள்கின்றனர்.

ஆனால் அதை எப்படிக்
கற்பனை செய்திருந்தாலும்
அதன் அனுபவம் அதனினும்
மாறுபட்டதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட ஏமாற்றமே உள்ளது.
உலகின் இயற்கைக் குணத்தைப் பாருங்கள்!

நூறாண்டுகாலம்—ஏன் அதற்கு மேலும் கூட—வாழ்ந்தவரும்
இறுதியில் தன் உறவினரைப் பிரிந்து தான் வாழ்வைவிட வேண்டும்.
ஆகவே அருகரின் (ஞானியின்)
போதனையைக் கேட்டு,
புலம்புவதை அடக்கி
காலத்தை முடித்த இறந்தவரைக் கண்டு,
[இவ்வாறு நினை]
“என்னால் அவரை உயிர்ப்பிக்க முடியாது.”

எரியும் வீட்டைத் தண்ணீர் கொண்டு அணைப்பது போல, அறிவாளி—
விவேகத்துடன்,
திறமையுடன்,
மெய்ஞ்ஞானத்துடன்—
தோன்றிய துயரத்தை ஊதித் தள்ளுகிறார்,
காற்றில் இலவம் பஞ்சு பறப்பதைப்போல.

உண்மையான மகிழ்ச்சியைத் தேடுவோர்,
முதலில் தன்னுள் தைத்திருக்கும் அம்பைப் பிடுங்க வேண்டும்:
உங்களது புலம்பல்,
ஏக்கம் மற்றும்
துக்கம்.

அம்பைப் பிடிங்கிய பின்,
தனிமையில் (பற்றில்லாமல்)
மன அமைதியை அடைவார்;
பின் எல்லாத் துக்கத்தையும் கடந்தபின்
அவர் துக்கம் இல்லாமல்
கட்டவிழ்ந்த நிலை (நிப்பாண நிலை) அடைகிறார்.