சுத்த நிபாதம் 3.9

வாஸெத்த சூத்திரம்—வாஸெத்த என்ற பிராமணனுக்குப் போதனை.

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:

ஒருமுறை பிராசிப்பவர் (புத்தர்) இச்சானங்களா என்ற இடத்தில் எழுந்தருளியிருந்தார். அச்சமயத்தில் குறிப்பிடத்தக்க வசதி மிக்க பிராமணர்கள் பலர் இச்சானங்களாவில் தங்கியிருந்தனர், குறிப்பாகப் பிராமணர்கள் சங்கீ, தாருக்கா, பொக்காரஸாதி, ஜானுஸ்ஸோனி, தொடெய்யா மற்றும் வேறு சில குறிப்பிடத்தக்க வசதியான பிராமணர்களும் அங்கிருந்தனர்.

அப்போது அவர்களுள் இளம் வயதினரான வாஸெத்தரும், பாரத்வாஜரும் உடற் பயிற்சிக்காக நடமாடிக் கொண்டிருக்கும் போது “ஒருவர் எப்படி பிராமணராவது?” என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இளைய பிராமணர் பாரத்வாஜர், “தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஏழு தலைமுறைக்குத் தூய்மையான பிறப்பிருந்தால், அவர் ஒரு பிராமணர் ஆவார்,” என்றார்.

ஆனால் வாஸெத்தர் என்ற இளைய பிராமணர், “ஒருவர் ஒழுக்கத்துடனும், நேர்ந்து கொண்டபடியும் நடந்து கொண்டால் அவர் ஒரு பிராமணர் எனலாம்,” என்றார். பாரத்வாஜரால் வாஸெத்தரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாஸெத்தரும் பாரத்வாஜரின் மனத்தை மாற்ற முடியவில்லை.

பின் வாஸெத்தர் பாரத்வாஜரிடம், “ஐயா, சாக்கியரின் புதல்வரான சமணர் கோதமர், சாக்கிய குலத்திலிருந்து வீட்டை விட்டுச் சென்று துறவியானவர், இச்சானங்களாவின் அருகில் உள்ள வனத்தில் தங்கியிருக்கிறார். கோதமரின் நற்பெருமை இப்பக்கம் பரவியிருக்கிறது: ‘அந்தப் பிரகாசிப்பவர் தேர்ச்சி பெற்றவர், முழுமையாக விழிப்புற்றவர், உண்மை அறிவும் நடத்தையுமுடையவர், தனக்காகவும் மற்றவரின் நலத்திற்காகவும் வீட்டைத் துறந்தவர், உலகை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும், மனிதர்க்கும் ஆசிரியர், விழிப்புற்றவர், பிரகாசிப்பவர்.’ வா பாரத்வாஜா சமணர் கோதமரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்போம்.அவர் சொல்வதைக் கருத்தில் கொள்வோம்.”

“சரி ஐயா,” என்று பாரத்வாஜர் பதிலளித்தார்.

இரு பிராமணர்களும் பிரகாசிப்பவரிடம் (பகவரிடம்) சென்று அவரிடம் நலம் விசாரித்தனர். இனிய வார்த்தைகளைப் பரிமாற்றம் செய்து கொண்ட பின்னர், ஒருபுறமாக அமர்ந்து இளம்பிராமணன் வாஸெத்தர் பகவரைப் பாவடிவில் கேட்டதாவது:

வாஸெத்த:
பொக்காரஸாதியின் மாணவன் நான்,
அவர் தாருக்கரின் மாணவர்;
நாங்கள் இருவரும் மூன்று வேத மரபுகளிலும்
வல்லவர்களென ஏற்றுக் கொள்ளப் படுகிறோம்.

எங்கள் வேத ஆசிரியர்கள் கற்பித்ததை
முழுமையாகக் கற்றுள்ளோம்; மேலும் நாங்கள்
மொழி வரலாறு, சொல்லிலக்கணம் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்தவர்கள்,
எங்கள் ஆசியர்கள் ஓதும்படியே நாங்களும் ஓதக் கற்றுள்ளோம்.

“பிறப்பு” சம்பந்தமான விஷயத்தில், ஓ கோதமரே,
எங்களுள் ஒரு முரண்பாடு தோன்றியுள்ளது:
அவர், ஒரு பாரத்வாஜர் (என்ற கோத்திரம் சார்ந்தவர்)
“பிறப்பு” பிராமண ஜாதியில் பிறந்ததால் வந்தது என்கிறார்,
நான் அது கன்மச்செயல்களால் உண்டாகிறது என்கிறேன்.
இதை உங்களிடம் தெரிவிக்கிறோம், ஓ அனைத்தையும் உணர்ந்த ஞானியே.

முழுமையாக விழிப்புற்றவர் என்று நீங்கள் கருதப் படுவதால்
ஐயா, நாங்கள் ஒருவர் மற்றவரின்
கருத்தை மாற்ற முடியாததால்,
இதைப்பற்றி உங்களிடம் கேட்க வந்துள்ளோம்.

தாமரை மொட்டு வடிவில் சேர்த்த கைகளை
(அஞ்சலி செலுத்த) முழு நிலவுக்குத் தூக்குவது போல
உலகம் போற்றும் உங்களுக்கும்
நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

உலகில் தோன்றிய ஞானக்கண் உடைய
கோதமரே
“பிறப்பால்” பிராமணன் ஆவதா அல்லது
கன்மச் செய்கையால் ஒருவர் பிராமணர் ஆவாரா?
“பிராமணன்” யார் என்பது எங்களுக்கு
விளங்காததால் எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள்.

புத்தர்:
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
உயிரினங்கள் மத்தியில் உள்ள “பிறப்பு”
வகைகளைப் பகுப்பாய்வு செய்து
வரிசையாகக் கூறுகிறேன்.

முதலில் புற்களும் மரங்களும் உள்ளன.
அவற்றுக்கு எதுவும் தெரியாது என்றாலும்,
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

அடுத்து வருவது வண்டுகள், பட்டாம் பூச்சிகள்
போன்றவை, அதனோடு கரையான்களும் எறும்புகளும்,
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

பின் சிறியவையும், பெரியவையுமான
நான்கு கால் கொண்ட ஜீவன்களை அறியுங்கள்,
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

வயிறே கால்களாகக் கொண்ட ஜீவன்கள் அடுத்து வருவன.
அதாவது நீண்ட முதுகெலும்பு கொண்ட அறவை (பாம்பு) வகைகள்,
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

பலவகையான மீன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
தண்ணீர் உலகங்களில் வாழ்பவை அவை.
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

பின் பலவிதமான இறக்கைகள் கொண்ட பறவை வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
திறந்த வானவெளியில் பறக்கும் பறவைகள்.
பலவிதமான பிறப்புகள் உள்ளதால்
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட அறிகுறிகளோடு
அப்பிறப்புகளில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்
மனித இனத்துள் அப்படிப்பட்ட
இன வேறுபாடுகளைக் காண முடியாது.

முடியிலும், தலையிலும்,
காதுகளிலும், கண்களிலும்,
வாயிலும், மூக்கிலும்,
உதட்டிலும், கண்புருவத்திலும் எந்த வேறுபாடுகளும் இல்லை.

கழுத்திலும் தோள்களிலும் எந்த வேறுபாடுகளும் இல்லை,
வயிற்றிலும், முதுகிலும்,
ஆசனப்பகுதியிலும், மார்பிலும்
தொடையிடுக்கிலும் பால் சார்ந்த உறுப்புகளிலும் வேறுபாடுகள் இல்லை.

கைகளிலும், கால்களிலும்,
விரல்களிலும், நகங்களிலும்,
முட்டியிலும், தொடையிலும்,
அவர்கள் “நிறத்திலும்”, சப்தங்களிலும்,
மற்ற பிறப்புகளைப் போல
வேறுபட்ட அடையாளம் எதுவும் இல்லை.

மனித உடலில் உள்ளபடி பார்க்கும் போது
அப்படிப்பட்ட பாகுபாடுகளைக் காண முடியாது
மனிதருள் பாகுபாடுகள்
பெயர்களில் மட்டுமே.

‘மனிதர்களுள் யாரெல்லாம் ஆடுமாடுகளைப்
பண்ணையில் வளர்த்து வாழ்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே, பிராமணர் அல்ல,
விவசாயி என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம் பண்டங்களை
வணிகம் செய்து வாழ்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே, பிராமணர் அல்ல,
வணிகர் என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம் பலவிதமான
கைவினைப் பொருள்களைச் செய்து வாழ்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே, பிராமணர் அல்ல,
கைவினைஞர் என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம்
மற்றவர் தேவையைக் கவனித்துப்
பூர்த்தி செய்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே, அவர்கள் பிராமணர் அல்ல,
வேலைக்காரர் என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம்
கொடுக்கப்படாத மற்றவர் பொருளைக் களவாடிப் பிழைக்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே, பிராமணர் அல்ல,
திருடர் என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம்
வில்வித்தையில் திறமையானவராக இருக்கின்றனரோ அவர்கள்
ஓ வாஸெத்தரே பிராமணர் அல்ல,
மறவன் என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களில் யாரெல்லாம் கோவில்களில்
பூசை செய்து பிழைக்கின்றாரோ
ஓ வாஸெத்தரே, அவர்கள் பிராமணர் அல்ல,
பூசாரி என்று தெரிந்து கொள்ளவும்.

‘மனிதர்களுள் யாரெல்லாம் நகரங்களையும்,
நிலங்களையும் ஆண்டு அனுபவிக்கின்றனரோ,
அவர்கள் ஓ வாஸெத்தரே பிராமணர் அல்ல,
அரசன் என்று தெரிந்து கொள்ளவும்.

பிராமணத் தாய் வழியில் பிறந்தவனானாலும்,
அதைச் சொந்தம் கொண்டாடினால் (அதனால் தானும் பிராமணன் என்று சொல்லிக் கொண்டால்)
அவன் வெறும் அகம்பாவம்
கொண்டவனே ஒழிய, அவனை நான் பிராமணன் எனச் சொல்ல மாட்டேன்:
எப்பொருளுக்கும் சொந்தம் கொண்டாடாமல்
எதனோடும் பற்றில்லாமல் இருப்பவர் யாரோ—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

தளைகளை அறுத்தவர்,
நடுக்கம் (அச்சம்) இல்லாதவர்,
சொந்த பந்தங்களுக்கு அப்பால் சென்றவர், கட்டுக்களிலிருந்து விடுபட்டவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

(அறியாமையென்ற) பின்கட்டு வாரையும் , கட்டும் கயிற்றையும்,
(தவறான காட்சியென்ற) கடிவாளத்தையும் வெட்டிய பின்
ஞானம் பெற்றவரைப்போலத் தடைகளை அகற்றியவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

திட்டினாலும், அடித்தாலும், சிறையிலிடப்பட்டாலும்
கோபப்படாதவராக,
பொறுமையே அவர் வலிமையும், படையுமாக இருப்பவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

கோபமில்லாமல், கடமையுணர்வு உடையவராய்,
ஒழுக்கம் நிறைந்தவராய், காமம் இல்லாதவராக,
அடங்கியவர், இறுதி உடலுடையவர் (மறுபிறபில்லாதவர்)—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

தாமரை இலையின் மீது நீர்த் துளியைப்போல (ஒட்டாமல்),
ஊசிமுனையில் கடுகைப்போல (நிற்காமல்)
புலன் ஆசைகளோடு வேட்கை கொள்ளாதவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

துக்கத்தின் முடிவை அறிந்தவர்,
சுமையை இறக்கியவர்,
கட்டுகளிடமிருந்து விடுபட்டவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எது மார்க்கத்தைச் சேர்ந்தது, எது சேராதது என்பதை அறிவதில் திறமையானவர்,
ஆழமான மெய்ஞ்ஞானமும் விவேகமும் உடையவர்,
மேன்மையான நோக்கத்தை அடைந்தவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

வீடு துறந்தவரிடத்திலும் நெருங்காதவர்,
இல்லறத்தாரோடும் நெருங்காதவர்,
நிரந்தரக் குடிலில்லாதவர், குறைவானவற்றையே வேண்டுபவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எல்லா வலிமையையும் துறந்தவர்
பலவீனமானவரானாலும் சரி பலமானவரானாலும் சரி,
மற்றவரைக் கொலை செய்யத் தூண்டுவதும் இல்லை, தானும் கொலை செய்வதில்லை—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

வெறுப்புள்ளவர் மத்தியில், நட்புணர்வோடும்,
வன்முறை செய்வோர் மத்தியில் அமைதியோடும்,
அவாவுற்றவர் மத்தியில் பற்றற்றவராகவும் இருப்பவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

காமமும், வெறுப்பும், அகம்பாவமும்,
அவமதிப்பும் விட்டுவிட்டவர்
ஊசிமுனையில் நிற்காத கடுகைப்போல—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

பயனுள்ளதைப் பேசுபவர்,
உண்மையும் சாந்தமாகவும்,
யாருக்கும் மனவேதனை உண்டாக்காதவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

கொடுக்காததை எடுக்காத ஒருவர்
அது நீண்டதோ, குறுகியதோ, பெரியதோ சிறியதோ,
நல்லதோ கெட்டதோ ஏதாயினும்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

இந்த உலகத்துக்கும் அடுத்த உலகத்துக்கும்
ஏக்கம் இல்லாத ஒருவர்,
ஏக்கமற்றும், சுமையில்லாமலும் இருப்பவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

அவருள் சார்பேதும் காண முடியாது,
இறுதி அறிவு பெற்றவர், ஐயமற்றவர்,
மரணமற்ற நிலையை அடைந்தவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

நன்மை, தீமை என்ற இரண்டு கட்டுக்கும்
அப்பால் சென்றவர்:
துன்பமில்லாதவர், கறைபடியாதவர், தூய்மையானவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

தோன்றுதல் மீது ஆசையற்றவர்,
நிலவைப்போல—கறைபடியாமல், தூய்மையாக,
அமைதியானவர், குழம்பாதவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

இந்தக் கடுமையான மார்க்கத்தை,
அறியாமையின் கட்டை, சம்சாரத்துள் சுழலுதலை முடித்தவர்,
அக்கரை சென்றவர், தியானிப்பவர்,
வேட்கையில்லாதவர், கேள்விகளும் இல்லாதவர்,
பற்றுக்காண காரணம் இல்லாதவர், முழு அமைதி கண்டவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எல்லாவற்றையும் விட்டு வீடு துறந்தவர் போல,
புலன் இன்பங்களை விட்டவர்,
தோற்றமெடுக்கும் ஆசையை முடித்தவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எல்லாவற்றையும் விட்டு விட்டவர்,
வீடு துறந்தவர் போல வேட்கைகளை விட்டவர்,
வேட்கையுண்டாகும் ஆசையை முடித்தவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

மனிதர் தாங்கும் தேவையற்ற சுமைகளை இறக்கியவர்,
தேவர்கள் தாங்கும் தேவையற்ற சுமைகளை இறக்கியவர்,
எல்லாச் சுமைகளையும் இறக்கியவர், நுகத்தடியிலிருந்து விடுபட்டவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

ஆசையையும் வெறுப்பையும் துறந்து,
அமைதி பெற்று, பிறப்பெடுக்கும் காரணங்களிலிருந்து விடுபட்டவர்,
அவர் ஒரு வீரர், எல்லா உலகங்களையும் வென்றவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

உயிர்களின் மறைவைப் பற்றியும்,
பலவிதமான தோற்றங்களைப் பற்றியும் தெரிந்தவர்,
கட்டில்லாமல், சரியாக வாழ்பவர், ஞானம் அடைந்தவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

அவர் செல்லும் இடம் மனிதருக்கும்,
ஆவிகளுக்கும், தேவர்களுக்கும் தெரியாது
மாசுகள் மறைந்து, அரஹந்தரானவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை,
முன்பும், இறுதியிலும், நடுவிலும்,
எதுவும் தனதில்லை, எதனோடும் பற்றில்லை என்பவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

ஒரு வீரர்—மாமனிதர், கீர்த்தியுடையவர்,
ஞானம் உடையவர், பயமற்றவர், வெற்றி கொண்டவர்,
பற்றில்லாதவர்; [மெய்ஞ்ஞானம் என்னும் நீரில்] குளிப்பவர், ஞானி—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

முற் பிறப்புகளைத் தெரிந்தவர்,
அதில் உள்ள இன்ப துன்பங்களை அறிந்தவர்,
மறுபிறப்பென்ற சங்கலித் தொடரிலிருந்து விடுபட்டவர்—
அவரையே நான் பிராமணன் என்பேன்.

எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் “பெயரும்”, “குலமும்”
ஒரு உலகப் பட்டம் தான்—
அது நமக்குத் தரப்பட்ட ஒரு வழக்கம் மட்டுமே,
எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கம்.

ஆனால் உறங்குவோர், கேள்வி கேட்காமல்,
கருத்துக்களோடு பற்றுக் கொண்டு,
அறியாதவர்கள் தெரியாமல் சொல்லி விட்டார்கள்:
“பிறப்பால்” தான் ஒருவர் பிராமணராவது என்று.

“பிறப்பு” ஒருவரைப் பிராமணர் ஆக்குவதில்லை,
“பிறப்பு” ஒருவரைப் பிராமணர் அல்லாதவராகவும் ஆக்குவதில்லை,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே பிராமணர் ஆகிறார்.
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே பிராமணர் அல்லாதவர் ஆகிறார்.

ஒருவர் கன்மச் செய்கையினாலேயே விவசாயியாகிறார்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே கைத்தொழில் செய்பவர் ஆகிறார்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயெ வணிகராகிறார்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே வேலைக்காரர் ஆகிறார்,

ஒருவன் கன்மச் செய்கையினாலேயே திருடனாகிறான்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே மறவனாகிறார்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே பூசாரியாகிறார்,
ஒருவர் கன்மச் செய்கையினாலேயே அரசனாகிறார்.

எனவே அறிவாளிகள் கன்மத்தைப் பார்க்கின்றனர்;
காரிய காரணத் தொடர்பினைக் காண்கின்றனர்,
கன்மச் செய்கைகளில் திறமையுடன் ஈடுபட்டு
அதன் விளைவையும் அறிகிறார்கள்.

கன்மச் செய்கையே உலகை நடத்துகிறது,
கன்மச் செய்கையினாலேயே மக்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர்;
உயிரினங்கள் கன்மத்துக்குக் கட்டுப் பட்டவை,
குதிரை வண்டியை இழுப்பது போல.

முயன்று நல்வாழ்கை நடத்தி,
கட்டுப்பாட்டோடும், அடக்கத்தோடும்,
ஒருவர் பிராமணராகிறார்.
அப்படிப்பட்ட பிராமணரே சிறந்தவர்.

மூன்று அறிவையும் உடையவருக்கு,
அமைதியாக இருப்பவருக்கு, மறுபிறப்பு முடிகிறது—
இதை அறிந்து கொள் வாஸெத்த,
அப்படிப் பட்டவர் அறிஞருக்குப் பிரமரும், இந்திரருமாம்.

இவ்வறிவுரை சொல்லப்பட்ட பிறகு, அந்த இளைய பிராமணர்களான வாஸெத்தரும், பாரத்வாஜரும் வியந்து அண்ணலிடம்: “அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும்—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நாங்கள் அடைக்கலம் செல்கின்றோம். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றோம். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றோம். இன்றிலிருந்து எங்கள் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் எங்களை உபாஸகராக (இல்லற சீடராக) நினைவில் கொள்வாராக.”