சுத்த நிபாதம் 4.12

சுள வியுஹ சூத்திரம் – குறுகிய முட்டுச்சந்து

கேள்வி:
தங்கள் கருத்துக்களை மட்டுமே ஆதரிப்பவர்
சர்ச்சை செய்வோர், (பலதரப்பட்ட கருத்துடைய) வல்லோர்கள் சொல்வது:
“இதை அறிந்தவர் வாய்மையை அறிவார்கள்.
இதை நிராகரிப்பவர் முழுமையடையாதார்.”

இவ்வாறு வாதம் செய்வோர் சர்ச்சை செய்கின்றனர்:
“என்னிடம் எதிர்வாதம் செய்பவர் ஒரு முட்டாள். அவர் ஓர் நிபுணர் அல்ல.”
அவர்கள் அனைவருமே தங்களை நிபுணர் என்று கூறிக் கொள்கின்றபடியால்,
யார் சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது?

புத்தர்:
எதிர்வாதம் செய்வோரின் சமய போதனைகளை நிராகரிப்பதால்
அவர் ஒரு “முட்டாள்”, தாழ்ந்த மெய்ஞ்ஞானம் உடையவர் என்றால்,
தங்கள் கருத்துக்கள் மட்டுமே மேன்மையானது என்போர் அனைவருமே
தாழ்ந்த நுண்ணறிவு கொண்ட முட்டாள்கள் தான்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கோட்பாடுகளினால் முற்றாகத்
தூய்மை பெற்று விட்டால்,
முழுமையான ஞானம் அடைந்து விட்டால்,
வல்லவர், அறிவாளி ஆகிவிட்டால்
பின் எவருமே தாழ்ந்த நுண்ணறிவு கொண்டவரில்லை.
ஏனென்றால் அனைவரும் தங்கள் தங்கள் கோட்பாடுகளில் திறமை படைத்தவர்கள் ஆவார்கள்.

நான் கண்டிப்பாக “இது தான் எனது கோட்பாடு. எனது கோட்பாடு தான் வாய்மை”
என்று சொல்வதில்லை—முட்டாள்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வது போல.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோட்பாடே வாய்மை என்கின்றனர்.
எனவே எதிர் வாதம் செய்வோரை “முட்டாள்கள்” என்கின்றனர்.

கேள்வி:
சிலர் யதார்த்தம், வாய்மை என்று வர்ணிப்பதை,
வேறு சிலர் வீறாப்பு, பொய்மை என்கின்றனர்.
இவ்வாறு வாதம் செய்வோர் சர்ச்சை செய்கின்றனர்:
துறவிகள் அனைவரும் ஏன் ஒன்றுபோலச் சொல்வதில்லை?

புத்தர்:
வாய்மை என்பது ஒன்றுதான்.
மனிதர் தேட வேறு வாய்மை எதுவும் இல்லை.
துறவிகள் அவரவர்கள் புரிந்து கொண்டபடி மாறுபட்ட ‘வாய்மைகளைப்’ போதிக்கின்றனர்.
அதனாலேயே அவர்கள் ஒரே மாதிரி பேசுவதில்லை.

கேள்வி:
தங்களைத் தாங்களே வல்லுனர் என்று கூறிக் கொண்டு சர்ச்சை செய்யும் இவர்கள்,
ஏன் வெவ்வேறு வாய்மைகளைப் பற்றிப் பேசுகின்றனர்?
அவர்கள் பல வேறுபட்ட வாய்மைகளைச் சந்தித்தவர்களா அல்லது
அவரவர் ஊகித்துக் கொண்டவற்றைப் பற்றிப் பேசுகின்றனரா?

புத்தர்:
அப்படிப்பட்ட (பல வாய்மைகள் உள்ளன என்ற) கருத்து உலவுவதைத் தவிர
வேறு பட்ட வாய்மைகள் உலகில் இல்லை.
ஆனால் விதண்டை பேசும் இந்த நிபுணர் என்று தங்களைக் கூறிக் கொள்வோர்,
கருத்துகளைப் பொருத்தவரை நிலைபெற்ற இருமை (துவைதம்—duality)
இருப்பதாகக் கூறுகின்றனர்: அதாவது வாய்மை மற்றும் பொய்மை.

பார்த்தது, கேட்டது, அறிந்தனவற்றோடும்,
ஒழுக்க விதிகளோடும், பயிற்சியோடும் பற்றுக் கொண்டவர்,
மற்றவரை அவமதிக்கிறார்.
தனது கோட்பாடுகள் வழி மட்டுமே நடப்பவர்,
தன்னோடு தானே மகிழ்ந்தவராகக் கூறுவது:
“என்னிடம் எதிர்வாதம் செய்பவர் ஒரு முட்டாள்; அவர் ஒரு வல்லுனர் அல்ல.”

எதிர்வாதம் செய்வோரை முட்டாள் என்று கூறக் காரணமாக இருப்பதே
தன்னைத் தானே வல்லுனர் என்று கூறவும் காரணமாகிறது.
எந்த அளவு தன்னைத் தானே வல்லுனர் என்று கூறிக் கொள்கிறாரோ,
அதே அளவு மற்றவர்கள் தங்களை வல்லுனர் என்று கூறுவதையும் இழிவு படுத்துகிறார்.

தன்னைத் தானே மிகுதியாக மதிப்பிட்டுக் கொண்டபடியால் தான் முழுமையானவர் என்று நம்புகிறார்.
தற்பெருமையென்ற போதையில்,
தான் ஒரு ஞானி என்று கருதுகிறார்.
தன் மனத்தில் தனக்கே ‘குரு’ பட்டம் சூட்டிக் கொள்கிறார்.
தனது கருத்துக்களையும் அதே போல முழுமையானவை என்று கருதுகிறார்.

மற்றவர் சொன்ன வார்த்தையின் காரணமாக ஒருவர் தாழ்ந்தவர் ஆவாரென்றால்,
அந்த ‘மற்றவரும்’ கீழான மெய்ஞ்ஞானம் கொண்டாவராகிறார்.
ஆனால் தனது மதிப்பீட்டில் ஒருவர் அறிவாளியாகவும், மெய்ஞ்ஞானம் உடையவராகவும் ஆகிவிட்டால்
துறவிகளுள் எவருமே முட்டாளாக இருக்கமாட்டார்கள்.

“இதைத் தவிர மாற்றுக் கோட்பாடுகளைப் பிரகடனஞ் செய்வோர்,
தூய்மையை விட்டு விலகியவர், அவர்கள் முழுமையானவர்கள் அல்ல.”
மற்ற பிரிவினர் ஒவ்வொருவரும் இதனையே கூறுகின்றனர்
ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்கள் மேல்
உள்ள பற்றின் காரணமாக உக்கிரம் கொள்கின்றனர்.

“இங்கு மட்டுமே தூய்மை” என்கின்றனர்,
மற்ற சமயங்களில் தூய்மையாக உள்ள தன்மை இல்லை என்கின்றனர்.
இவ்வாறு மற்ற பிரிவினர் தங்களுக்குள் முரண்படுகின்றனர்.
இவ்வாறு தங்கள் தங்கள் மார்க்கத்தோடு மட்டும் பிணைந்து கொள்கின்றனர்.

தங்கள் மார்க்கம் மட்டுமே சிறந்தது என்று கூறுவதால்,
எதிர்வாதம் செய்வோரை எப்படி முட்டாள் என்று கருதுவது?
இன்னொருவர் தூய்மையற்ற மாற்றுப் போதனைகளைக் கடைப்பிடிக்கிறார் என்று கூறி,
அதன் காரணமாக அவரை முட்டாள் என்று சொல்வதால்,
அவர் தனக்குத் தானே பிரச்சனைகளை வளர்த்துக் கொள்கிறார்.

தனது கருத்துக்களோடு உறுதியானவராகவும்
தான் நிர்ணயிக்கும் அளவுகோளின்படி மற்றவரைக் கணிப்பதாலும்,
அவர் மென்மேலும் உலகில் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்.
ஆனால் அனைத்து நிலையான கருத்துக்களையும் கைவிட்டவர்,
மேலும் புதிய பிரச்சனைகளை உருவாக்குவதில்லை.