சுத்த நிபாதம் 4.13

மஹா வியுஹ சூத்திரம்—அகன்ற முட்டுச்சந்து

கேள்வி:
சர்ச்சை செய்வோர், ஏகாந்தவாதி
சொல்வது “இது மட்டுமே வாய்மை”
பழிக்கப்படுவது மட்டுமே அவர்களது அனுபவமா?
அவர்கள் எப்போதும் புகழப்படுவதே இல்லையா?

புத்தர்:
அவர்கள் பெறுவது அற்பப் பாராட்டு மட்டுமே.
அவர்கள் திருப்தியுறுமளவு புகழப்படுவதில்லை.
சர்ச்சை செய்வதால் இரண்டு பலன்கள் மட்டுமே கிடைக்கும்: பாராட்டும், பழிச்சொல்லும்.
இதைக் கண்டு சர்ச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சண்டையிடாமல் இருப்பதே அமைதிக்கான அடிப்படையாகும்.

அறிவாளி சாதாரண, அன்றாடக் கருத்துகளில் ஈடுபடுவதில்லை.
பற்றற்றிருப்பவர் எதற்காகத் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
பார்த்தது கேட்டதையெல்லாம் அவர் விரும்புவதில்லை.

ஒழுக்கமான நடத்தையே சிறந்த பயிற்சியெனக் கருதுபவர்கள்,
தன்னடக்கமே ஒழுக்கத்திற்கு இன்றியமையாதது என்பார்கள்.
அப்படிப்பட்ட பயிற்சியை மேற்கொண்டவர், அதனைத் தொடர உறுதி செய்து கொள்கின்றனர்.
அவர்கள் நினைப்பது:
“நாம் இதை மட்டுமே பயிற்சி செய்தால் போதும். பின் தூய்மையடைந்து விடுவோம்”
இப்படி நிபுணர் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள் மேலும் தோற்றம் (பவம்) எடுக்க வழியமைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஒழுக்கம் தவறினால் அல்லது பயிற்சியில் தடுமாறினால்
நடத்தை தவறியதற்காக மனச்சஞ்சலம் கொள்கின்றனர்.
வீட்டிலிருந்து வெகு தொலைவில் வாழும் (எப்போது வீடு திரும்புவோம் என்று ஏங்கும்)
வர்த்தகரைப் போல, தூய்மைக்கு ஏங்குகின்றனர்,.

ஆனால் ஒழுக்கத்தோடும், பயிற்சிகளோடும்
அவர் நடத்தை—அது பிழையானதோ, பிழையற்றதோ எதுவாக இருந்தாலும்—
பற்றில்லாமல் இருப்பவர், தூய்மைக்கும், களங்கத்துக்கும் ஏங்காமல் கருணையோடும், அமைதியோடும் வாழ்கிறார்,
அந்த அமைதியின்மேல் வேட்கையில்லாமல். (அந்த அமைதி வேண்டும் என்ற தாகம் இல்லாமல்).

தவப் பயற்சிகளோடும், உடலை வருத்தும் பயிற்சிகளோடும்,
பார்த்தவை, கேட்டவை, அறிந்தவைகளோடும் பற்றுக் கொண்டு
தோன்றுவதற்கான (பவம் எடுக்கும்) விருப்பத்தைக் கைவிடாமலே
உரத்த குரலில் தூய்மையைப் பற்றிப் பேசுகின்றனர்.

ஏக்கம் உடையவர் பற்றுக் கொண்டிருக்கின்றார்.
உளதாதல் பற்றிய அவரது இட்டுக் கட்டிய கருத்துக்கள்
அவருக்குக் கவலையும், நடுக்கமும் உண்டாக்குகிறது.
ஆனால் இறப்பும் மறுபிறப்பும் இல்லாதவர்
ஏன் கவலைப்பட வேண்டும்? ஏன் நடுங்க வேண்டும்?
அவர்கள் பற்றுகொள்வதற்கு (எதற்கும் ஏங்காததால்) என்ன இருக்கிறது?

கேள்வி:
சிலர் “மேன்மையானது” என்று கூறும் சமயக் கோட்பாடுகளைப் பிறர் “இழித்தக்கது” என்கின்றனர்.
வல்லுனர் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் கூறுவதில் எது உண்மை?

புத்தர்:
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சமயக் கோட்பாடுகளே சிறந்ததெனக் கூறுகின்றனர்.
மற்றவர் கூறுவதை இழிந்ததென ஒதுக்குகின்றனர்.
இவ்வாறு வாதம் செய்வோர் சர்ச்சை செய்கின்றனர்:
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தே உண்மை என்கின்றனர்.

எதிர்வாதம் செய்வோர் குறை கூறுவதால் ஒரு சமயக் கோட்பாடு இழிதக்கதாகி விட்டால்
போதனை எதற்கும் சிறப்பு இருக்காது,
ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாய் இருந்து கொண்டே
மற்றவர் கோட்பாடுகளைக் குறை கூறுகின்றனர்.

தங்கள் மார்க்கத்தைப் புகழ்ந்தவாறு
தங்கள் போதனைகளை வழிபடுவது உண்மையானால் பின்
எல்லாக் கோட்பாடுகளும் உண்மையானவையாகவே இருக்கும்—
ஏனென்றால் தூய்மை தனிப்பட்ட முறையில் (ஒவ்வொரு சமயத்தவர்க்கும்)
அவர்களுடைய தாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட ‘தன் வழியே சிறிந்த வழி, ஒரே வழி’ என்ற
சமய போதனைகளைப் பொருத்தவரை ஒரு பிராமணன் அவற்றைப் பின் தொடர்வதில்லை.
எனவே அவர் சர்ச்சைகளுக்கு அப்பால் சென்றவராகிறார்.
ஒரு சமயக் கோட்பாடு மட்டுமே சிறந்ததென அவர் கருதுவதில்லை.

சிலர் கூறுவது:
“நான் அறிவேன். எனக்கு தெரிகிறது. நடப்பது இப்படித்தான்:
சிலரின் தூய்மை அவர்கள் கருத்துக்கு ஒப்ப உள்ளது.”

ஆனால் அப்படியே அவர் எதையோ கண்டிருந்தாலும், அதனால் அவருக்கு என்ன பயன்?
அவர் வெகு தூரம் சென்று விட்டவர்.
தூய்மை வேறொருவரைச் சம்பந்தப் பட்டதென்றோ, அல்லது வேறொன்றைச் சம்பந்தப்பட்டதென்றோ பேசுகின்றார்.

ஒருவர் பார்க்கும் போது அரு-உருவை (அருவம் – மனம், உருவம்—உடல்) மட்டுமே காண்கிறார்.
பார்த்தபின் அவர் அதை மட்டுமே அறிவார்.
அவர் சிறிது பார்த்திருந்தாலும் பெருமளவு பார்த்திருந்தாலும்,
திறமையானோர் தூய்மை அதைச் சார்ந்து மட்டுமே இருப்பதாகக் கூறுவதில்லை.

வளையாத கருத்துடையவரை எளிதில் கட்டுப் படுத்த முடியாது.
அவர் உருவாக்கிய கருத்துக்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்.
அவர் பற்றுக் கொண்டதையே புனிதமாகக் கருதுகிறார்.
அதையே அவர் தூய்மையென்கிறார்.
அதில் அவர் உண்மையைக் காண்கிறார்.

பிராமணன் கண்மூடித்தனமாக கருத்துக்களோடு பற்றுக் கொள்வதில்லை.
ஏன், அறிவோடும் பற்றுக் கொள்வதில்லை.
மற்றவர் பற்றுக் கொள்ளும் சாதாரணக் கருத்துக்களை அறிந்தவராதலால்
அவர் அக்கருத்துக்களின் மேல் அக்கறை செலுத்துவதில்லை
“அது அவரது கருத்து,” என்று நினைக்கின்றார்.

உலகோடு உள்ள கட்டுகளை அவிழ்த்தவராதலால்,
முனிவர் சர்ச்சை எழும்போது எந்த ஒருசாராரோடும் சேர்வதில்லை.
அமைதியில்லாதவர் மத்தியிலும், அவர் அமைதியுடைவராக உள்ளார்.
சம மனநிலையோடு இருப்பதால், மற்றவர் பற்றுக் கொள்ளும் விஷயங்களில் அவர் பற்றுக் கொள்வதில்லை.

பழைய மாசுகளை விட்டவராக,
புதியவற்றை ஏற்காமல்,
ஏக்கங்களால் ஆளப்படாமல் இருக்கிறார்.
தன் கோட்பாடு மட்டுமே உண்மை என்று முரண்படுவதில்லை.
கருத்துக்களோடு சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்கிறார்.
அவர் விவேகம் உள்ளவர்.
உலகோடு வேட்கை கொள்வதில்லை.
தன்னைத் தானே நிந்தித்துக் கொள்வதில்லை.

பார்த்தது, கேட்டது, அறிந்தது -அனைத்தின் மத்தியிலும் அமைதியாக இருக்கிறார்.
அவர் சுமையை இறக்கி விட்டவர்.
முனிவர் முழுமையாக விடுதலை பெற்றவர்.
உலகவாழ்க்கையோடு தன்னை அடக்கிக் கொள்வதுமில்லை, அதற்கு ஏங்குவதும் இல்லை.