சுத்த நிபாதம் 4.14

துவத்தக்க சூத்திரம் – விரைவுப் பிரசங்கம்

கேள்வி:
சூரியவம்சத்தவரை, சிறந்த தலைவரை,
தனிமைபற்றியும் அமைதி நிலை பற்றியும் கேட்கிறேன்.
எவ்வாறு நோக்குவதால் ஒரு துறவி உலகில் அவாவிலிருந்து விடுபட்டு
எதனோடும் பற்றில்லாமல் இருக்கிறார்?

புத்தர்:
மனத்தை ஆட்டிப்படைக்கும் ‘நான் உள்ளேன்’ என்ற கருத்தை
ஒரு முனிவர் முழுமையாகக் கைவிட வேண்டும்.
எப்போதும் கவனத்துடன், தன்னுள் தோன்றும் விருப்பங்களை
அழித்துவிடத் தன்னைப் பயில்விக்க வேண்டும்.

எந்தச் சமயக் கோட்பாடுகளை அவர் தெரிந்திருந்தாலும்,
அது தான் பின்பற்றும் கோட்பாடுகளாக இருந்தாலும் சரி, மற்றவருடையதாக இருந்தாலும் சரி,
அவை தன்னைப் பிடிவாதம் கொண்டவராக ஆக்க விட்டுவிடக் கூடாது.
திறமையானவர் இதனை ‘அமைதி’ என்று கூறுவதில்லை.

எச்செயலைப் பொருத்ததாக இருந்தாலும் தான் மேலானவன், தாழ்ந்தவன், சமமானவன்
என்று ஒருபோதும் கருதக் கூடாது.
பலவித அனுபவங்களால் பாதிக்கப் பட்டாலும்
ஆணவ எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

ஒரு துறவி அமைதியைத் தனக்குள் காண வேண்டும்.
புறத்தில் அமைதியை எதிர்பார்க்கக் கூடாது.
தன்னுள் அமைதி கண்டவர்
எதனோடும் பற்றுக் கொள்ளாததால்
கைவிட அவரிடம் என்ன இருக்கப் போகிறது?

ஆழ் கடலில் அலைகளில்லை.
ஏற்றம், இறக்கம் (கடலின் பெருக்கும், வற்றும்) இல்லை.
அது போலத் துறவியிடமும் காம ஓட்டம் (ஆசை தோன்றி மறைந்து பின் மீண்டும் தோன்றுவது) இருக்கக் கூடாது.
எதிலும் அகம்பாவம் இருக்கக் கூடாது.

கேள்வி:
முனிவர், வாய்மையைக் கண்டவர், ஆபத்து நீங்கியதைப் பற்றிப் பிரகடனஞ் செய்துள்ளவர்.
இப்போது போற்றுதற்குரிய ஐயா,
பயிலும் மார்க்கத்தைப் பற்றிக் கூறுங்கள்.
துறவற ஒழுக்கத்தைப்பற்றியும்
சமாதி நிலையைப்பற்றியும் கூறுங்கள்.

புத்தர்:
கண்களை அலைபாய விடக்கூடாது.
விதண்டைப் பேச்சுக்கு செவி மடுக்கக் கூடாது.
சுவைகளுக்குப் பேராசைப்படக் கூடாது.
உலகில் எதனையும் “என்னுடையது” என்று கொள்ளக் கூடாது.

எத்தகைய பாதிப்பு தனக்கு ஏற்பட்டாலும்
அதன்காரணமாகப் புலம்பக் கூடாது.
தொடர்ந்து தோன்ற வேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடாது.
ஆபத்தின் மத்தியில் நடுங்கக் கூடாது.

தனக்குக் கொடுக்கப்பட்டது, அது உணவோ, சிற்றுண்டியோ, பானமோ துணிமணிகளோ
எதுவாக இருந்தாலும் சேமித்து வைக்கக் கூடாது.
எதுவும் தரப்படவில்லையென்றாலும் அதற்காக வருந்தக் கூடாது.

தியானம் செய்யவேண்டும், நினைத்தபடி நடந்து கொள்ளக் கூடாது.
கவலை கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சோம்பலுடன் இருக்கக் கூடாது.
குறைந்த ஓசையுள்ள இருப்பிடத்தில் வாழ வேண்டும்.

நீண்ட நேரம் தூங்கக் கூடாது.
விழிப்புடன் இருக்கவும், கடும்முயற்சி செய்யவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
சோம்பல், பித்தலாட்டம், மனக்களிப்பு (வேடிக்கை), பலவிதமான கொண்டாட்டங்கள்,
பாலியல் சம்பந்தமான செயல்கள் மற்றும் இது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

என்னுடைய சீடர்கள்
சூனிய வித்தைகளில் ஈடுபடக் கூடாது.
கனவுகளை ஆராய்வது, அதிர்ஷ்டம் பார்ப்பது, சோதிட சாஸ்திரம் பார்ப்பது, விலங்கு ஓசைகளை வியாக்கியானம் செய்வது,
குழந்தை இல்லாதவருக்குச் சிகிச்சை செய்வது, வைத்தியம் பார்ப்பது ஆகியவற்றைச் செய்யக் கூடாது.

துறவி ஒருவர் பழிச்சொல்லுக்கு அஞ்சக் கூடாது
புகழப்படும் போது அகம்பாவம் கொள்ளக் கூடாது.
பேராசை, சுயநலம், கோபம், கோள்மூட்டுதல் ஆகியவற்றை விரட்டிவிட வேண்டும்.

ஒரு துறவி வணிகத்தில் ஈடுபடக் கூடாது.
எக்காரணத்தைக் கொண்டும் எவரையும் மோசம் செய்யக் கூடாது
கிராமங்களில் சுற்றித் திரிந்து வீண் பொழுது போக்கக் கூடாது.
பயனை எதிர்பார்த்து மக்களுடன் வீண் பேச்சில் ஈடுபடக் கூடாது.

ஒரு துறவி தற்பெருமையடித்துக் கொள்ளக் கூடாது.
வஞ்சக வார்த்தைகளைப் பேசக் கூடாது.
ஆணவத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.
சச்சரவான பேச்சைப் பேசக் கூடாது.

பொய் சொல்லுமாறு தூண்டப்படக் கூடாது.
வேண்டுமென்றே துரோகம் செய்யக் கூடாது.
மற்றவரின் இழிவான வாழ்வையோ, அறிவையோ,
ஒழுக்க விதிகளையோ, பயிற்சிகளையோ வெறுக்கக் கூடாது.

துறவிகளோ, பொதுமக்களோ அதிகம் பேசி எரிச்சலுண்டாக்கினால்
பதிலுக்கு அவர்களைக் கடிந்து பேசக் கூடாது.
ஏனென்றால் அமைதியானவர் யாரையும் எதிர்த்துச் செயற்படுவதில்லை.

புத்தரின் போதனைகளைத் தெரிந்தவர்,
அக்கறையான துறவி, அதனை ஆராய்ந்துணர்ந்து அதன்படி பயிற்சி செய்ய வேண்டும்.
தான் என்ற மாயையைக் கைவிடுவதே அமைதி என்றறிந்து கொள்ள வேண்டும்.
கோதமரின் போதனைகளைக் கடைப்பிடிப்பதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

வெல்லப்படாதவர், வெற்றி கொண்டவர், தனது மெய்ஞ்ஞானத்தால்
வாய்மையைத் தானே அறிந்தவர் அவர், பிறர் சொல்லக் கேட்டபடியால் அல்ல.
எனவே அந்த உன்னதமானவரின் போதனைகளில் அக்கறையுடையவர்
அவரை உதாரணமாகக் கொண்டு அதன்படி நடந்து தொடர்ந்து (போதனைகளை) போற்ற வேண்டும்.