சுத்த நிபாதம் 4.16

சாரிபுத்திரர் சூத்திரம்: சாரிபுத்திரருடன்

போற்றுதற்குரிய சாரிபுத்திரர்:
துசித லோகத்திலிருந்து வந்திருக்கும்
அருமையாக மொழியும் ஆசானை
இதுவரை நான் கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை.

தேவரும் உள்ள உலகத்தில்
இந்த முனிவர் தோன்றியுள்ளார்.
இருட்டை நீக்கிய அவர்
தானே பேரின்பத்தைத் தனியாகக் கண்டவர்.

அப்படிப்பட்ட புத்தரிடம்,
சிக்கலில்லாத அவர்,
நல்ல புண்புகளைக் கொண்ட அவர்,
நேர்மையானவர்,
சீடர்களுடன் வந்திருக்கும் அவரிடம்
கட்டுள்ள பலரின் சார்பாக நான் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்.

உலகை நிராகரித்த துறவி,
தனிமையான இடங்களை நாடுபவர்—
மர அடிவாரம், சுடுகாடு, மலைக்குகை—
அல்லது துயிலும் பல இடங்கள்:
அவரது அமைதியான இருப்பிடத்தில்
அவர் நடுங்கத் தேவையில்லாத பயங்கர விஷயங்கள் எவை?

இதுவரை போகாத இடங்களுக்குப் போகும் துறவி,
அவருடைய தனிமையான இருப்பிடத்தில்
எத்துனை துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது?

அவரது பேச்சு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
அவரது நடத்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
ஊக்கமுள்ள அவரது ஒழுக்கமும் பயிற்சியும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

நிதானமானவர், விவேகமானவர், அக்கறையுள்ளவர்,
எந்தப் பயிற்சி செய்து தனது உள்ளக் கறைகளை நீக்குவார்?
—உருக்கிய வெள்ளியிலிருந்து அசுத்தங்களை நீக்கும் தட்டார் போல.

புத்தர்:
நான் அறிந்துள்ளவன் என்பதால்,
தனிமையான இடங்களில் வாழும்,
வாய்மைக்கு நிகராக விழிப்புற விரும்பும்
உலகை நிராகரித்த ஒருவருக்கு, எது வசதியானதாக இருக்கும் என்பதை விளக்குகிறேன்.

திடமான துறவி,
கவனமுள்ள துறவி,
கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்பவர்,
இந்த ஐந்துக்குப் பயப்படத் தேவையில்லை:
குதிரைஈக்கள், கொசுக்கள், பாம்புகள்,
மனிதர், விலங்குகளுக்கிடையே நடைபெறும் பரஸ்பர நடவடிக்கைகள்.

பிற சமயங்களைப் பின்பற்றுவோருக்குப் பயப்படத் தேவையில்லை—
அவற்றின் தீமைகளைக் கண்ட பின்பும்—
அவர் நன்மை தருவனவற்றையே நாடுபவராதலால், மற்ற துன்பங்களையும் பொறுத்துக் கொள்வார்.

நோயையும், பசியையும், குளிரையும்,
தாங்க முடியாத வெப்பத்தையும்,
அவர் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

வீடு துறந்தவர்,
பல வழிகளிலும் பாதிக்கப் பட்டாலும்,
உறுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டு
முயற்சி செய்ய வேண்டும்

அவர் திருடக் கூடாது.
பொய் பேசக் கூடாது.
பயம் உள்ளவரையும், பயமற்றவரையும்
தனது அன்பால் நிறைவிக்க வேண்டும்.

தனது மனம் சஞ்சலமுற்றிருப்பதை அறிந்தால்
அதனை இந்த எண்ணத்துடன் நீக்க வேண்டும்:
“இது இருளின் ஒரு அம்சம்.”

கோபமும், அகந்தையும் (திமிர்) தன்னை ஆட்கொள்ள விடக்கூடாது;
அவற்றை அகற்றி வாழ வேண்டும்.
பின் தனக்கு அன்புக்குரியவர், அன்புக்குரியவரல்லாதவர்
என்ற எண்ணங்களைக்
கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.

விவேகத்தை மதித்து,
நல்வினையால் மகிழ்ந்து,
தனது கஷ்டங்களை வெற்றி கொள்ள வேண்டும்.
திருப்தியில்லா மனோபாவத்தை தனது தனிமையான இருப்பிடத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.
நான்கு புலம்பல்களை விட்டுவிட வேண்டும்:

“நான் என்ன சாப்பிடுவேன்?”
“நான் எங்கு சாப்பிடுவேன்?”
“நான் வசதியில்லாமல் தூங்கினேன்!”
“இன்றிரவு எங்கு தூங்குவேன்?”

பயிற்சியில் ஈடுபட்டுள்ளோர்,
வீடில்லாமல் அலைவோர்,
இப்படிபட்ட எண்ணங்களிடமிருந்து மீள வேண்டும்.

உணவும் துணிமணிகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படும் போது
எவ்வளவு கிடைத்தால் போதுமானது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் சுய கட்டுப்பாட்டோடு இருந்து, கிராமங்களில் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.
தான் நிந்திக்கப்பட்டாலும் ஆத்திர வார்த்தைகளைக் கூறக் கூடாது.

கண்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
நினைத்த இடங்களில் அலையக் கூடாது.
ஆழ்தியான நிலைகள் பெற, பயிற்சி செய்து,
விழிப்புடன் இருக்க வேண்டும்.
சமமான மனநிலையையும், நிதானத்தையும் பெறப் பயிற்சி செய்ய வேண்டும்.
சந்தேகப்படுவதையும் கவலைப்படுவதையும் தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.

குறைகூறப்பட்டால், கவனமாகக் கேட்டு, அதனை வரவேற்க வேண்டும்.
தனது சக புனித வாழ்வை மேற்கொண்டுள்ளவர்களிடம்
எந்த விரோத உணர்வு இருந்தாலும் அதனைத் துண்டித்து விட வேண்டும்.
திறமையாகவும், தக்க நேரத்திலும் பேச வேண்டும்.
வம்பளக்கும் பேச்சும், அது சம்பந்தமான விவகாரங்களையும் நினைக்கக் கூடாது.

மேலும் மனிதருள் உள்ள ஐந்து கறைகளை
நீக்கக் கவனமாகப் பயிற்சி செய்ய வேண்டும்:
உருவங்களுகான, ஓசைகளுக்கான, சுவைகளுக்கான, நுகர்ச்சிகளுக்கான, பரிசங்களுக்கான
காம உணர்வை வெற்றி கொள்ள வேண்டும்.

கவனத்துடன்,
சிறப்பாக விடுவிக்கப்பட்ட உள்ளத்துடன்,
ஒரு துறவி இவற்றுக்கான ஏக்கத்தை நீக்க வேண்டும்.

புத்தரின் போதனைகளைத் தக்க நேரத்தில் மனதில் நினைவு கூர்ந்து,
சரியான சூழ்நிலைகளில்
நிதானமான மனத்துடன்
இருட்டிற்கு முடிவு கட்ட வேண்டும்.