சுத்த நிபாதம் 4.4

சுத்தத் தக்க சூத்திரம்: தூய்மை பற்றி

“‘இங்கே ஒரு தூய்மையானவரைப் பார்க்கிறேன். முழுமையாக நோயற்றவர். அவரைப் பார்த்த மனிதன் தூய்மையைப் பெறட்டும்!’

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு இதையே ‘மேன்மையான’ தென நினைத்து இதனை அறிவு என்று நம்பித் ‘தூய்மையானவரைப்’ பிரதிபலிக்கின்றார். ஒருவரைப் பார்த்ததாலேயே ஒருவர் தூய்மையாக முடியுமென்றால் அல்லது அப்படிபட்ட அறிவின் காரணமாக ஒருவர் துக்கத்தை விடமுடியு மென்றால், பற்றுகளைக் கொண்ட ஒருவர் மற்றொருவரால் தூய்மை பெற முடியும் . ஆனால் இது இப்படிப்பட்ட கோட்பாட்டைத் தெரிவிப்போரின் கருத்து மட்டுமே.

“உண்மையான பிராமணன் ஒருவன் மற்றவரால் தூய்மையாக முடியாது என்றும், பார்த்ததை வைத்தும், கேட்டதாலும் மற்ற இந்திரியங்களால் ஊகிக்கப் பட்டதாலும், அல்லது சடங்குகள் செய்வதாலும் ஒருவர் தூய்மையாக முடியாது என்றும் கூறுகிறார். அவர் (உண்மையான பிராமணன்) புண்ணியத்தாலும், பாவச் செயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை. (முன்) வேட்கை கொண்டிருந்தவற்றை விட்டு விட்டபடியால் அவர் மேலும் கன்மச் செயல்களைச் (பலன் உள்ள வினைகளைச்) செய்வதில்லை.

முன்பு பிடித்திருந்த பிடியைக் (பொருளைக்) கைவிட்டபின் அவர்கள் மற்ற பொருள்களோடு பற்றுக் கொள்கின்றனர். வேட்கைக்குக் கட்டுப்பட்டிருப்பதால் அவர்கள் பற்றிற்கு அப்பால் செல்வதில்லை ஒன்றை நிராகரிப்பதும், மற்றதைப் பிடித்துக் கொள்வதும், ஒரு குரங்கு ஒருகிளையை விட்டு விட்டு வேறு கிளையைப் பிடிப்பது போலத்தான்.

சாங்கியச் சடங்குகளைச் செய்துவருபவர் புலன்களுக்குக் கட்டுப்பட்டவராதலால் இப்படியும், அப்படியும் மாறுபட்டுச் செயற்படலாம். ஆனால் விரிந்த மெய்ஞ்ஞானம் கொண்டவர் தனது அனுபவித்தின் காரணமாகத் தன்மவழி சென்றவர் இப்படியும், அப்படியும் அலைவதில்லை. எல்லா நிலைகளிலும், பார்த்ததாலும், கேட்டதாலும், அறிந்ததாலும் நடுநிலையில் (நன்மை, தீமை பாராமல்) இருப்பவர், உள்ளதை உள்ளபடி பார்ப்பவர் (மனத்) தெளிவுடன் வாழ்கிறார். யாரால் எதனால் உலகோடு அவரை அடையாளம் காண்பது? (இப்படிப் பட்டவர், அப்படிப் பட்டவர் என்று அவரைப் பாகுபடுத்த முடியாது)

அவர்கள் எதையும் ஊகிப்பதில்லை அல்லது எந்தக் கருத்தையும் பின்தொடர்வதுமில்லை. தங்களை முழுமையாகத் தூய்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்வதுமில்லை. அவர்கள் (வேட்கையின்) கட்டுகளை அவிழ்க்கின்றனர். அவர்களுக்கு உலகில் எந்த ஏக்கமும் இல்லை. வரையறைகளுக்கு அப்பால் சென்ற உண்மையான பிராமணன் தன்னுள் எந்த ஊகமும் இல்லை என்பதைப் கண்டு, தெளிந்தவர். அவர் காமத்தினால் தொந்தரவு செய்யப்படுவதுமில்லை, வெறுப்பினால் பாதிக்கப்படுவதுமில்லை. அவருக்கு ‘உண்மையில் இதுதான் மேன்மையானது’ என்ற கருத்தும் இருப்பதில்லை. (ஒருவரைப் பார்ப்பது தான் உண்மையில் மேன்மையானது போன்ற கருத்துக்கள் அவரிடம் இல்லை.)