சுத்த நிபாதம் 4.6

ஜரா சூத்திரம்: முதுமை

எவ்வளவு குறுகிய வாழ்வு இது!
நூறாண்டுக்குள்ளேயே மரணமுறுகிறோம்,
அதைவிட அதிக ஆண்டுகள் வாழ்ந்தாலும்,
வயோதிகத்தால் மரணிக்கிறோம்.

‘தனது’ என்று நினைத்துக் கொண்டு
மக்கள் துயரப் படுகின்றனர்.
ஆனால் சொந்தமானது எதுவும் நிலைப்பதில்லை
எதுவும் தொடர்ந்து
சொந்தமாவதும் இல்லை.
இந்தப் பிரிவை
உள்ளபடி பார்த்த பின்
ஒருவர் இல்லறவாழ்வைத்
தொடரக்கூடாது.

மரணத்தின் போது ஒருவர்
‘தனது’ என நினைத்ததைக் கைவிடுகிறார்.
இதை அறிந்த மெய்ஞ்ஞானம் உள்ளோர்
‘தனது’ என்று நினைக்க
நாட்டம் கொள்வதில்லை.

எப்படி ஒருவன் தூங்கி விழித்தபின்
கண்ட கனவைக்
காண்பதில்லையோ,
அதே போலத் தங்கள்
பாசத்திற்கு உள்ளான
இறந்தவரை—அவர்கள் காலம் முடிந்தது—
ஒருவர் மீண்டும் பார்ப்பதில்லை.

அவர்களைப் பார்த்த போதும், கேட்ட போதும்
மக்கள் அவர்களை இந்தப் பெயராலும், அந்தப் பெயராலும் அழைத்தனர்.
ஆனால் அவர்கள் இறந்தபின்னர் சுட்டிக் காட்டப் பெயர் மட்டுமே மிஞ்சுகிறது.

துயரம், புலம்பல், சுயநலம்
ஆகியவை துறக்கப் படுவதில்லை
‘தனது’ என்று பேராசைப் படுவோரால்.
எனவே முனிவர்கள்
சொத்துகளைக் கைவிட்டுப்
பாதுகாப்பைக் கண்டவராக
எல்லாம் துறந்தவராக
அலைகின்றனர்.

ஒரு துறவி ஒதுங்கியவராக,
தனிமையான இடத்தில்
மகிழ்ச்சியோடு வாழ்கிறார்;
எங்கு வசிப்பினும்
அகம்பாவத்தைக் காட்டிக் கொள்ளாதவர் :
இது அவருக்கு அனுகூலமானது என்று கூறுவர்.

எங்கும்
முனிவர்
தனிமையாகச் செயற்படுவதால்
எவரையும்
அன்புக்கினியவரென்றோ, எதிரி என்றோ
கருதுவதில்லை.

அவருள்
புலம்பலும் சுயநலமும்
வெள்ளைத் தாமரை மீது நீர் போல
ஒட்டுவதில்லை.

தாமரை இலைமேல் நீர்த்துளிபோல,
சிவப்பு அல்லி மலர் நீரால்
ஈரப் படாதது போல
முனிவர்
பார்த்ததை, கேட்டதை, உணர்ந்தவைகளால்
பாதிக்கப் படுவதில்லை;

ஏனென்றால் மெய்ஞ்ஞானமுடையவர்
பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவைகளால்
ஏமாற்றப் படுவதில்லை.

வேறு எந்த வழியிலும் அவர்
தூய்மையைத் தேடுவதில்லை.
ஏனென்றால் அவர் புலன் பொருட்களால்
இன்பப் படுவதுமில்லை
துன்பப் படுவதுமில்லை.