சுத்த நிபாதம் 4.7

திஸ்ஸ மெத்தெய்ய சூத்திரம்: திஸ்ஸ மெத்தெய்ய

“அன்புள்ள ஐயா,
துறவு பூண்டவர்கள் உடல் உறவில் ஈடுபவதன்
ஆபத்துக்களைப் பற்றி விளக்குங்கள்.
உங்கள் போதனையைக் கேட்ட பின்
நாங்கள் தனிமையில் பயில்வோம்.”

புத்தர்:
உடல் உறவுகளில் ஈடுபடும் துறவிகளுக்குப்
போதனைகள் குழப்பம் தருவதாகத் தோன்றுகிறது. (போதனைகளை மறந்து விடுகிறார்)
பின் அவர் பயிற்சியில் தவறு செய்கிறார்:
இது அவரது இழிதன்மையைக் குறிக்கும்.
துறவு மேற்கொண்ட ஒருவர் பின்
உடல் உறவுகளில் ஈடுபட்டால்
—கட்டுப்பாடில்லாத (மாட்டு) வண்டியைப்போல—
அவர் உலகில் வெட்கம் கெட்டவராகவும்,
சாதாரண மனிதராகவும் கருதப் படுகிறார்.
முன்பு அவருக்கிருந்த கௌரவமும் கண்ணியமும்: குலைந்து விடுகிறது.
இதை அறிந்து
உடல் உறவுகளில் உள்ள ஈடுபாட்டைத் தவிர்க்கப் பயிற்சி செய்ய வேண்டும்.

காம எண்ணங்களால் மூழ்கி விட்டதால்
அவர் எதையோ யோசித்தவாறு இருக்கிறார்—
பரிதாபமான பிச்சைக்காரனைப்போல.
மற்றவர் இகழ்வதைக் கேட்டு,
அவர் துயரப்படுகிறார்;
அல்லது தனக்கு எதிரான வதந்திகளைக் கேட்டுப் பழிவாங்க நினைக்கின்றார்.
இது அவருக்கு மேலும் சிக்கலை விளைவிக்கிறது. அவர் பொய்மையில்
மூழ்குகிறார்.

துறவற வாழ்க்கையை மேற்கொண்டபோது
அவரை ஞானமுடையவர்
என்று பாராட்டிய மக்கள்,
மீண்டும் உடலுறவுகளில் ஈடுபட்டதனால்
அவருக்கு ‘முட்டாள்’ என்று பட்டம் சூட்டுகின்றனர்.

இந்தக் குறைபாடுகளைக் கண்டபின்,
முனிவர் இங்கே—முன்னும் பின்னும்—(எக்காலத்திலும்)
தனிமையான வாழ்க்கை வாழ
மேலும் உறுதி கொள்கிறார்;
உடல் உறவுகளில் ஈடுபடாமல்
அவர் தனிமையில்
பயிற்சி செய்கிறார்—
இதுவே மேன்மையானோருக்குச்
சிறந்த வழி.
ஆனால் இதன் காரணமாக அவர்
மற்றவர்களைவிடத் தான் சிறந்தவர்
என்று எண்ணிவிடக் கூடாது:
அவர் கட்டவிழ்க்கும் (நிப்பாண நிலையின்)
தருவாயில் இருப்பவர்.

புலன் இன்பங்களில்
சிக்கிச் சுழல்பவர்கள்
அவரைக் கண்டு
பொறாமைப் படுகின்றனர்:
சுதந்திரமாக,
புலன் சிற்றின்பங்களுக்கு
ஆசைப்படாமல் வாழும் முனிவர்
—அவரே வெள்ளத்தை தாண்டியவர்.