சுத்த நிபாதம் 5.10

தோடிய்ய-மாணவ-பூச்சா: தோடிய்யரின் கேள்விகள்

தோடிய்யர்:
புலன் ஆசைகளுக்கு விருப்பம் இல்லாத ஒருவர்;
வேட்கை இல்லாத ஒருவர்;
குழப்பத்தைத் தாண்டிச் சென்றவர்;
அவர் விடுதலை
எப்படிப் பட்டதாக இருக்கும்?

புத்தர்:
புலன் ஆசைகளுக்கு விருப்பம் இல்லாத ஒருவர்;
வேட்கை இல்லாத ஒருவர்;
குழப்பத்தைத் தாண்டிச் சென்றவர்;
அவர் விடுதலை பெற்றவர்.
அதைத் தவிர மேலும் விடுதலை அவருக்கு இல்லை.

தோடிய்யர்:
அவருக்கு ஏக்கங்கள் இல்லையா அல்லது
இன்னமும் ஏக்கங்கள் உள்ளனவா?
அவர் விவேகமுற்றவரா அல்லது
மேலும் விவேகத்தை வளர்க்கின்றவரா?
அறிவாற்றலுள்ள சாக்கியரே,
முனிவர் யார் என்பதை விளக்குங்கள்.
பின் முனிவர் எப்படிப்பட்டவர்
என்பதை நானும் அறிந்து கொள்கிறேன்.

புத்தர்:
அவருக்கு ஏக்கங்கள் இல்லை,
மேலும் ஏக்கங்கள் இருக்காது.
அவர் விவேகமுற்றவர்,
மேலும் விவேகத்தை வளர்க்கவேண்டியதில்லை.
முனிவர்
எதற்கும் சொந்தம் கொண்டாடாதவர்,
புலன் இன்பங்கள்
தோன்றுவதற்கான ஆசைகளிடம்
சிக்காதவர்,
என்பதை அறிந்து கொள் தோடியா.