சுத்த நிபாதம் 5.11

கப்ப மாணவ பூச்சா: கப்பரின் கேள்வி

கப்பர்:
ஏரியின் மத்தியில் தத்தளித்துக் கொண்டு,
வெள்ளம் என்ற பெரும் ஆபத்து சூழ்ந்திருக்க—இதுவே பிறப்பு—
மூப்பும், மரணமும் பெரும் கவலை உண்டாக்க:
தீவைப்பற்றிக் கூறுங்கள் ஐயா,
(பாதுகாப்பாகக் கரை சேர)
தீவைக் காட்டுங்கள் ஐயா,
மீண்டும் இப்படி நடவாமல் இருக்க.

புத்தர்:
ஏரியின் மத்தியில் தத்தளித்துக் கொண்டு,
வெள்ளம் என்ற பெரும் ஆபத்து சூழ்ந்திருக்க—இதுவே பிறப்பு—
மூப்பும், மரணமும் பெரும் கவலை உண்டாக்க,
நான் உனக்குத் தீவைக் காட்டுகிறேன், கப்ப.

எதுவும் இல்லாமல்,
எதனொடும் பற்றுக் கொள்ளாமல் இருப்பது:
அதுவே தீவு,
வேறு ஒன்றும் இல்லை.
நான் கூறுகிறேன், அதுவே கட்டவிழ்ப்பு,
(சுமை இறக்குதல்),
மூப்பின், மரணத்தின் முழுமையான முடிவு.

இதனை அறிந்தோர், கடைப்பிடியுடன்
முழுமையாகக் கட்டுகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு,
இங்கேயே, இப்போதே,
மாரனின் பணியாட்களாவதில்லை.
அவன் வசம் சிக்குவதில்லை.