சுத்த நிபாதம் 5.12

ஜாதுக்கண்ணின்-மாணவ-பூச்சா: ஜாதுக்கண்ணின் கேள்வி

ஜாதுக்கண்ணின்:
புலன் இன்பங்களை வேண்டாத,
வெள்ளத்தைத் தாண்டிய
வீரரைப் பற்றிக் கேள்விப்பட்டு நான்
ஒரு கேள்வியுடன் வந்துள்ளேன்:
அமைதி நிலையைப் பற்றிக் கூறுங்கள்,
பிரகாசமான ஞானக்கண் உடையவரே.
அண்ணலே,
உள்ளது உள்ளபடி அதைப் பற்றிக் கூறுங்கள்.
ஏனென்றால் பகவர்
புலன் இன்பங்களுக்கு மேம்பட்டு
வாழ்கின்றவர்,
பிரகாசிக்கும் கதிரவன்
அதன் ஒளிச்சுடரின் காரணமாகப்
பூமியைவிட மேம்பட்டு இருப்பது போல.
எனது விவேகம் எல்லையுடையது,
உங்கள் மெய்ஞ்ஞானமோ ஆழமானது.
தம்மத்தை—
பிறப்பையும், மூப்பையும்
கைவிடும் அந்த வழியைக் கற்பியுங்கள்.

புத்தர்:
புலன் இன்பங்களுக்கான அவாவை அடக்கி,
துறவறத்தை (எளிமையை) ஓய்வென்று கருதிக்கொள்.
எதனையும் பற்றவும் வேண்டாம்,
நிராகரிக்கவும் வேண்டாம்.
முடிந்து போனதை எரித்துவிடு,
வரப்போவதற்கு ஏங்காதே.
இரண்டுக்கும் இடையில் உள்ள எதையும்
பற்றிக் கொள்ளா விட்டால்,
அமைதியாக இருப்பாய்.
அரு-வுருவுக்கு (அருவம்—மனம், உருவம்- உடல்) முழுமையாக ஆசைப்படாத
பிராமணர்
மாரனின் வலையில்
சிக்கிக் கொள்ளும் மாசுகள் இல்லாதவர்.