சுத்த நிபாதம் 5.13

பத்திரவுதா-மாணவ-பூச்சா: பத்திரவுதாரின் கேள்விகள்

பத்திரவுதார்:
அறிவுள்ள, விடுபட்ட, சஞ்சமில்லாதவரை
வீடு துறந்தவர்,
கூதூகலம் துறந்தவர்,
ஊகிப்பதைத் துறந்தவர்,
வேட்கையை வெட்டியவர்,
வெள்ளத்தைத் தாண்டியவரை
மன்றாடிக் கேட்கிறேன்:

பல நாடுகளிலிருந்து பலரும் உங்கள்
கருத்தை எதிர்பார்த்திருக்கின்றனர், தலைவரே.
எனவே அவர்களுக்காக இந்தத் தம்மத்தை
விளக்கிக் கூறுங்கள்.

புத்தர்:
வேட்கையையும், பற்றையும் அடக்குங்கள்—எல்லாவற்றையும்—
மேல், கீழ்,
எதிர்ப்புறம் மற்றும் நடுவில்.
இந்த உலகில் எவரெல்லாம்
எவற்றோடு பற்றுக் கொண்டுள்ளனரோ
அவற்றை வைத்தே மாரன்
அவர்களைத் துரத்துகிறான்.

எனவே ஒரு துறவி, கடைப்பிடியுடன்,
இந்த மனிதரின்
பற்றுகளைக் கண்டு அவர்கள்
மரணப் பிரதேசத்தில் சிக்கியிருப்பதை அறிந்து,
இந்த உலகிலும் மற்றும்
எந்த உலகிலும்
எதனோடும் பற்றுக் கொள்ளக் கூடாது.