சுத்த நிபாதம் 5.14

உதய-மாணவ-பூச்சா: உதயரின் கேள்விகள்

உதயர்:
ஆழ்தியானத்தில் உள்ள ஒருவர்,
கறையற்று அமர்ந்திருப்பவர்,
அவா அற்றவர்,
அவரது கடமையை முடித்தவர்,
மாசற்றவர்,
அனைத்துப் பற்றுகளையும் நீக்கி அப்பால் சென்றவரிடம்
நான் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்.
அறிவினால், அறியாமையை உடைப்பதனால்
உண்டாகும் விடுதலையைப்
பற்றிக் கூறுங்கள்.

புத்தர்:
புலன் ஆசைகளையும்
மகிழ்ச்சியற்ற நிலைகளையும்
கைவிடுவதனால்,
சோம்பலை விட்டு நீங்கி,
கவலைகளை ஒதுக்கி,
சமமனநிலையையும், கடைப்பிடியையும் தூய்மையாக்கி,
மனத்தின் பண்புகளைப் பரிசோதிப்பதை
முன்னணியில் வைத்திருப்பது:
அறிவினால், அறியாமையை உடைப்பதினால்
உண்டாகும் விடுதலை இதுவே.

உதயர்:
உலகம் எதனோடு கட்டுப்பட்டுள்ளது?
அதனை எதனோடு ஆராய்வது?
எதைக் கைவிடுவதால் கட்டிலிருந்து விடுபடுகிறோம்?

புத்தர்:
பெருமகிழ்ச்சியினால் உலகம் கட்டுப்பட்டுள்ளது.
ஒருமுகப்பட்ட எண்ணங்களோடு அதனை ஆராய வேண்டும்.
வேட்கையைக் கைவிடுவதால் கட்டிலிருந்து விடுபடுகிறோம்.

உதயர்:
இவ்வாறு கடைப்பிடியோடு வாழ்வதால்
உணர்வை (அறிநிலையை) நிறுத்திவிட முடியுமா?
தங்களைக் கேட்கிறோம் ஐயா,
பதிலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.

புத்தர்:
உள்ளும் புறமும் நுகர்ச்சியோடு குதூகலப்படாமல்:
இவ்வாறு கடைப்பிடியோடு வாழ்பவர் உணர்வை நிறுத்தி விடுகிறார்.