சுத்த நிபாதம் 5.15

போசள-மாணவ-பூச்சா: போசளரின் கேள்வி

போசளர்:
முன்பிறவி நிகழ்வுகளைத் தெரிவிப்பவர்
—அசைக்க முடியாதவர்,
சந்தேகங்களைத் தீர்த்தவர்
அனைத்துப் பற்றுக்களையும் கடந்து அப்பால் சென்றவரிடம்,
நான் ஒரு கேள்வியுடன் வந்துள்ளேன்.
உருவக் குறிப்புகள் இல்லாதவர்,
உடலை—எல்லா உடல்களையும்—கைவிட்டவர்,
உள்ளும் புறமும்
‘இன்மையைக்’ காண்பவர்:
மேலும் எப்படி முன்னேறுவது என்பதைச்
சாக்கியரிடம் கேட்கிறேன்.

புத்தர்:
உணர்வின் அனைத்து நிலைகளையும்
அந்த உணர்வுகள் எங்கு நிலைத்துள்ளன,
என்ன செய்கின்றன,
எதை நோக்கிச் செல்கின்றன
என்பதைத் ததாகதர் தெரிந்தவராவார்.

இன்மையின் தோற்றத்தை
நேரடியாக அறிவதும்
குதூகலத்திற்கு இடும் கட்டுத் தான்
என்பதைத் தெரிந்தவர்,
தெளிவாகக் காண்கிறார்.
இதுவே அவரது உண்மையான அறிவு—
அவரே முழுமை அடைந்த பிராமணர்.