சுத்த நிபாதம் 5.16

மோஹராஜா-மாணவ-பூச்சா: மோஹராஜர் கேள்வி

போற்றுதற்குரிய மோஹராஜர்:
“ இரண்டு முறை சக்கர் அவர்களைக் கேட்டும் ஞானகண்ணுடையவர் எனக்குப் பதில் தரவில்லை. புனிதமுள்ள முனிவர் மூன்றாவது முறை கேட்கும் போது பதில் கூறுவார் என்று நான் கேள்வியுற்றேன். பெரும் புகழுடைய கோதமர் இந்த உலகைப் பற்றியும், மறுமையைப் பற்றியும், பிரம்ம உலகைப் பற்றியும் கொண்டுள்ள கருத்தைப் பற்றி எனக்குத் தெரியாது: உலகை எவ்வகையில் நாம் பார்வையிடும் போது, மரண அரசனால் (எமனால்) நம்மைக் காணமுடியாது?”

அண்ணல்:
“உலகை வெறுமை என்று காண், மோஹராஜா, எப்போதும் கடைப்பிடியுடன்; ஆணவத்தை வேரொடு பிடிங்கி எறிந்தால் (தான் என்ற எண்ணத்தை அழித்தால்) மரணத்தை வென்று விடலாம். இவ்வாறு உலகைப் பார்வையிட்டால் மரண அரசனால் (எமனால்) நம்மைக் காண முடியாது.”