சுத்த நிபாதம் 5.17

பிங்கிய-மாணவ-பூச்சா: பிங்கியரின் கேள்வி

போற்றுதற்குரிய பிங்கியர்:
“நான் வயதாகி வலிமை இழந்தவன். இளமையின் அழகும் மறைந்துவிட்டது. கண் பார்வையும் குன்றி விட்டது, காதும் சரியாகக் கேட்பதில்லை. குழப்பமான நிலையில் மரணமுற விரும்பவில்லை. எனக்குத் தம்மத்தைக் கற்பியுங்கள். அதை அறிந்து பிறப்பையும், மூப்பையும் கைவிட்டு விடுகிறேன்.”

அண்ணல்:
“விவேகமற்ற மனிதர் தங்கள் உடலின் காரணமாக வருந்தித் துன்புறுவதைக் கண்டு, பிங்கியரே, நீங்கள் விவேத்துடனும், உடல் மீது பற்றில்லாமலும் இருந்தால் மறு பிறப்பெடுக்க மாட்டீர்.”

போற்றுதற்கிரிய பிங்கியர்:
“பத்து திசைகளிலும்—வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசையும், அவற்றின் கோணத்திசைகள் நான்கும், மேல், கீழ் ஆகிய- உலகில் நீங்கள் காணாதது, கேட்காதது, உணராதது, அறியாதது எதுவும் இல்லை. எனவே தம்மத்தைப் போதியுங்கள். அதை அறிந்து நான் பிறப்பையும் மூப்பையும் கைவிட்டு விடுகிறேன்.

>அண்ணல்:
“வேட்கையில் சிக்கிய மனிதரைக் கண்டு, பிங்கியரே, அவர்கள் முதுமையினால் நோயுற்றுத் துன்புருவதை உணர்ந்து, நீங்கள் விவேகத்துடன் வேட்கையை விட்டு விட்டால் மறுபிறப்பெடுக்கமாட்டீர்.”