சுத்த நிபாதம் 5.2

அஜீத மாணவ பூச்சா: அஜீதரின் கேள்விகள்

போற்றுதற்குரிய அஜீதர்:
“உலகம் எதனால் சூழப் பட்டுள்ளது?
எதன் காரணமாக அது தெரியப்படவில்லை (பிரகாசிப்பதில்லை)? எதன் விளைவாக அது கறை படிந்துள்ளது? அதன் பெரும் ஆபத்தும் பயமும் என்ன?”

பகவர்:
“உலகம் அறியாமையால் சூழப்பட்டுள்ளது, அஜீதா. தவறான திசையில் செலுத்தப்படும் விருப்பமும், கஞ்சத்தனமும், விவேகமற்றிருப்பதும் அதன் உண்மை நிலையை மறைத்து விடுகின்றன. ஏக்கங்கள் அதனைக் கறைப் படுத்துகின்றன. அதன் பெரும் அபாயமும், பயமும் துக்கம் – அழுத்தம்தான்.

அஜீதர்:
“ஓடைகள் எல்லா இடங்களிலும் ஓடுகின்றன. ஓடைகளைத் தடை செய்வது எவை? அவற்றை எப்படிக் கட்டுப் படுத்துவது? இறுதியில் அவற்றை எப்படித் தடுத்து நிறுத்துவது?”

பகவர்:
“எந்த ஓடைகளானாலும், கடைப்பிடியே அவற்றைத் தடுத்துக் கட்டுப் படுத்துகின்றது. விவேகம் அவற்றை நிறுத்துகிறது.”

அஜீதர்:
“ விவேகமும், கடைப்பிடியும் தான்.
ஐயா, இப்போது அரு—உரு (அருவம்—மனம், உருவம்—உடல்)) இவற்றை விளக்குங்கள்: அது எப்போது முடிவுறும்?”

பகவர்:
“உனது கேள்விக்குப் பதில் தருகிறேன் அஜீதா: உணர்வுகளின் முடிவில் தான் அரு-உரு முழுமையாக முடிகிறது,.”

அஜீதர்:
“முழுமையாகத் தம்மத்தை அறிந்தவர்கள், பயிற்சி மேற்கொண்டு வருபவர்கள், இங்குள்ள மற்றவர்கள், இவர்களின் நடத்தைக்கான விதிமுறைகளை விளக்குங்கள்.”

பகவர்:
“புலன் இன்பங்களின் மேல் வேட்கை கொள்ளாமல், தூய்மையான, அமைதியான உள்ளத்துடன், ஒரு பிக்கு, கடைப்பிடியோடு துறவு செல்ல வேண்டும். எல்லாச் சூழலிலும் அவர் திறமையுடன் இருக்க வேண்டும்.”