சுத்த நிபாதம் 5.4

புண்ணக மாணவ பூச்சா—புண்ணகரின் கேள்விகள்

போற்றுதற்குரிய புண்ணகர்:

“வேட்கையிலிருந்து விடுபட்டவரிடம், காரண காரியங்களின் ஆணிவேரைக் கண்டவரிடம் நான் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்: எதன் காரணமாக முனிவர்கள், வீரர்கள், பிராமணர்கள், மற்றவர்கள் இந்த உலகில் அக்கினி நைவேத்தியம் செய்து கடவுளருக்குப் (தேவர்களுக்கு) படைக்கின்றனர்? அண்ணலிடம் இந்தக் கேள்வி கேட்கிறேன், அவர் எனக்குப் பதில் கூறட்டும்.”

அண்ணல்:
பலவிதமான யாக காணிக்கைகளை முனிவர்கள், வீரர்கள், பிராமணர்கள், மற்ற மனிதர்கள் கடவுளருக்குப் படைப்பதற்கான காரணம் என்னவெனில் புண்ணக, இந்தத் தோற்றத்திற்கும் (உலகவாழ்வு சம்பந்தப்பட்ட இன்பங்கள் தொடர்பாக) அல்லது அந்தத் (எதிர்காலத்) தோற்றத்துக்கும் விருப்பப்பட்டு, மூப்புக்கும், சிதைவுக்கும் அப்பால் செல்வதற்காகவே இதைச் செய்கின்றனர்.

புண்ணகர்":
“தேவர்களுக்கு இப்படிப்பட்ட யாக காணிக்கைகளை ஊக்கத்துடன் செய்யும் இவர்கள் பிறப்புக்கு அப்பாலும் சிதைவுக்கு அப்பாலும் செல்கின்றனரா, அண்ணலே?”

அண்ணல்:
“புலன் இன்பங்களுக்கு விருப்பப்பட்டு அவர்கள் நம்பிக்கையோடு (கடவுளரை) புகழ்ந்து, இறைஞ்சி, காணிக்கைகள் அளிக்கின்றனர், புண்ணக்க. அது போன்ற சன்மானத்துக்காக அவர்கள் வேண்டுகின்றனர். தோற்றத்துக்கான மோகம் கொண்டுள்ள, இது போன்ற காணிக்கைகளில் நம்பிக்கை உள்ளவர் பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் செல்வதில்லை என்கிறேன்.”

புண்ணகர்":
“இது போன்ற காணிக்கைகளில் நம்பிக்கை உள்ளவர் யாக காணிக்கைகள் செய்தும், பிறப்புக்கும், சிதைவுக்கும் அப்பால் செல்வதில்லை என்றால், ஐயா, பின் எப்படிப்பட்ட பயிற்சி செய்து தேவரும் மனிதரும் உள்ள இந்த உலகில் பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் செல்வது?”

அண்ணல்:
இவ்வுலகையும், மறுமையையும் அறிந்தவர், உலகியல் விஷயங்களோடு எந்த சஞ்சலமும் கொள்ளாதவர், அமைதியானவர், நெருப்புப்பூத்தலில்லாதவர், அவாவும் பிரச்சனைகளும் இல்லாதவர்—அவரே பிறப்புக்கும் சிதைவுக்கும் அப்பால் சென்றவர், என்கிறேன்.”